Featured Posts

தலாக் புகழ் நந்தலாலாவிற்கு

நந்தலாலாவின் தலாக்.. தலாக்.. தலாக் பதிவிற்காக

அன்பின் நந்தலாலா,
வித்தியாசமாக எழுதும் பழக்கம் உள்ளவரான நீங்கள், தவறான விபரங்களை உங்களின் கட்டுரையில் இடம்பெறச் செய்துள்ளீர்கள்.

விவாகரத்து சட்டத்தை அரசாங்க சட்டத்திலிருந்து எடுக்கவேண்டும் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஆனால் தலாக்கிற்கு தலாக் விடவேண்டும் என்று சொல்வதற்கு காரணம், அதனை புரிந்துக்கொண்ட விதமும் முஸ்லிம்கள் அதனை தவறாக பயன்படுத்திய விதமும்தான். தலாக் என்பது உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் விவாகரத்து என்று சொல்லலாம். தவறொன்றும் இல்லை.

முஸ்லிம் பெண்களின் உரிமைகள்:
முஸ்லிம் பெண் ஆர்வல் சல்மாகூட தனது பேட்டியில் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை முஸ்லிம்கள் நடைமுறைப் படுத்தவில்லை என்கிறார். தவிர இஸ்லாத்தில் இவ்வுரிமை இல்லை என்று சொல்லவில்லை.

இஸ்லாம் சொன்ன முறைப்படி பெண்களே ஆண்களை விவாகரத்து செய்யும் முறையும், ஒரு மனைவியை மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் செய்ய விரும்பும் திருமணத்தை நடத்திவைக்கவும் கீழ்கண்ட அமைப்புகளின் ஒத்தாசையை நாடலாம். toabuumar@gmail.com என்ற முகவரிக்கு அவ்வமைப்புகளின் விபரங்கள் கேட்டு எழுதினால் தருவதற்கு தயார். இதுபற்றி சல்மா போன்றவர்கள்கூட தெரிந்துக்கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.

ஜம்மியத்துல் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) என்ற அமைப்பும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) என்ற அமைப்பும் ஆயிரக்கணக்கான பகுத்தறிவு திருமணங்கள் (புரோகித தனம் தவிர்த்து) வரதட்சணை இல்லாமல் நடத்திக்காட்டியிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புக்கும் தமிழ்நாட்டில் பல கிளைகள் உண்டு. இந்த அமைப்பின் உதவிகள் இல்லாமல்கூட உள்ளூர் ஜமாஅத்துகளின் மூடத்தனமாக புரோகிதத் தனங்களையும், வரதட்சணை பழக்கத்தையும் எதிர்த்து என்னைப்போல எத்தனையோ இளைஞர்கள் ஒரு சவாலாக எடுத்து திருமணங்கள் செய்துள்ளார்கள்.

இஸ்லாமிய பெண்களுக்கான உரிமையை மீட்டித்தர பாடுபடும் சல்மா போன்ற ஆர்வலர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இஸ்லாம் தரும் பெண் உரிமையை தெரிந்துக்கொள்ளுங்கள், அதனை அவர்கள் பெற்றுக்கொள்ள போராடுங்கள். கூடவே சில முஸ்லிம் பெண்களின் தர்கா போன்ற மூட நம்பிக்கைகளை அடித்து விரட்டுங்கள். முஸ்லிம் பெண்கள் கல்வியறிவு பெற வகை செய்யுங்கள் என்பவைதான் அது.

டிஜிட்டல் விவாகரத்து:
sms, email மூலம் விவாகரத்து கோரல் சம்பந்தமாக நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ்முஸ்லிம் கூட்டுப்பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.

ஜீவனாம்சம்:
இஸ்லாம் ஒப்பந்தத்திற்கு பிறகு கணவனிடம் பிச்சை எடுக்கச் சொல்லவில்லை. முன்பணமாக ஜீவனாம்சத்தை அல்லது மஹர் என்னும் மணக்கொடையை வாங்கிக்கொள்ளச் சொல்கிறது. இந்திய முஸ்லிம்களில் இவ்விஷயத்தில் தவறான பல விஷயங்கள் நடைமுறையில் உள்ளன.

அதாவது பெயருக்காக நூற்று ஒன்று, ஆயிரத்து ஒன்று என்று மஹர் தொகையை எழுதிக்கொள்வதும் அந்த பிச்சைக்காசைக் கூட அப்பெண்ணிடம் கொடுக்காமல் இருப்பதும்தான்.

திருமணம் என்பது இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு ஒப்பந்தம் மட்டுமே. ஒப்பந்தம் செய்பவர்கள் தனக்கு உரிமையானதை மற்றும் தனக்கு பாதகம் இல்லாததை ஒப்பந்தத்தில் எழுதி பெற்றுக்கொள்வார் தவிர ஒப்பந்தத்தில் எழுதாமல் பிறகு கேட்டால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததே. அதுபோலத்தான் பெண்கள், தன்னை திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பும் தனது எதிர்கால கணவனிடத்தில் தனக்கு தேவையானதை அட்வான்ஸ் ஜீவனாம்சமாக மஹர் என்னும் மணக்கொடையின் பெயரால் முதலிலேயே பெற்றுக்கொள்ளச் செய்கிறது இஸ்லாம். இந்த தொகையை இவ்வளவுதான் கேட்க வேண்டும் என்ற அதிகபட்ச வரையறைகூட இஸ்லாமிய ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியாது. இன்று சவுதிபோன்ற நாடுகளில் இந்த அட்வான்ஸ் ஜீவனாம்சத்தை (மஹர்) கொடுக்க முடியாத ஆண் குமர்கள் திருமணம் செய்ய முடியாமல் இருப்பதை பார்க்க முடியும். இதனை பெண் கேட்டும் வரதட்சணை என்று கொச்சைப்படுத்துவது நம்மவர்களுக்கு வழக்கம்.

இது ஜீவனாம்சம்தான் என்று சொல்வதற்கு காரணம், மனைவி கணவனை விவாகரத்து கோரினால் அப்பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆண் விவாகரத்து கோரினால் அவள் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்நாட்டில் ஆண்கள் வரதட்சணையாக பெற்றுக்கொண்ட தொகையை ஏப்பம் விடுவது போல் அல்ல.

இந்த முஸ்லிம்பெண்களின் உரிமைகளை கலங்கப்படுத்தும் எத்தனையோ ஊர் ஜமாஅத்தார்கள் உண்டு என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. இதற்காக நாங்கள் போராடுகிறோம். அதற்காக எங்களைப் போன்றோர்களை ஊர்விட்டு விலக்கி வைத்துள்ளார்கள். இது குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களிடம் உள்ள குறைபாடுகள் என்று சொல்லாமல் இஸ்லாத்தில் இந்த உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் தவறான பிரச்சாரமாகும்.

பலதார மணம்:
பலதார மணம் என்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதியே தவிர அது மார்க்கத்தின் கடமையோ வணக்கமோ கிடையாது. சின்ன வீடு வைத்துக்கொண்டு கும்மாளம் இடுபவர்களுக்கு அவளும் ஒரு மனைவிதான் என்றும் அவளுக்கு பிறந்தவர்களும் சமசொத்துரிமை பெற்றுள்ளார்கள் என்று ஆணின் தலையில் சுமத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் மனைவிகளிடையே பாரபட்சம் காட்டவேண்டிவரும் என்று பயந்தால் அவனுக்கு பலதாரமணம் செய்துகொள்வதை ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்குகிறது இஸ்லாம். எனக்கு தெரிந்தவர்களில் யாரும் (தமிழ்மணத்தில் எழுதும் நண்பர்கள் உட்பட) பலதார மணம் புரிந்துக்கொள்ளவில்லை. எனக்கும் ஒரு மனைவிதான் ஐயா. பலதாரமணம் பற்றி பிறகு எழுதும் எண்ணம் உண்டு. (கடவுள் நாடினால்).

கற்பத்தடை
பெண் குழந்தையை கருவிலியே சமாதிகட்டுவதும், கள்ளிப்பால் இட்டு நிரந்தரத்தூக்கத்தை இட்டுச்சொல்வதும் இந்த கால வழக்கம் என்றால் பெண் குழந்தையை உயிரோடு புதைக்கும் காலம் முஹம்மது நபி எந்த அரபு சமுதாயத்தில் பிறந்தார்களோ அத்தகையவர்களின் பழக்கமாக இருந்தது. இதனை முற்றாக ஒழித்தவர்தான் முஹம்மதுநபி. மேலும் குழந்தைகளை வறுமைக்கு பயந்து கொள்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதுபோன்ற ஒரு வசனத்தைத்தான் திருக்குர்ஆனிலிருந்து (6:151) நீங்கள் எடுத்துக்காட்டியிருந்தீர்கள். தவிர இவ்வசனம் குழந்தைகளை கணக்கின்றி பெற்றுப்போடச் சொல்லவில்லை.

திருக்குர்ஆனில் 6:137, 6:140, 6:151 ஆகிய வசனங்களில் குழந்தைகளை கடவுளின் பெயரால் கொல்லாதீர்கள் என்றும் வறுமைக்கு பயந்து கொல்லாதீர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் என்ன பழைமைவாதம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அதே நேரத்தில், இஸ்லாம் குழந்தை வளர்ப்பில் மிக்க கண்ணும் கருத்துமாக இருக்கச் சொல்கிறது. கவனிக்க முடியாத குழந்தைகளை பெற்றுப்போடச் சொல்லவில்லை. குழந்தைக்கு அறிவை ஊட்டுவது தந்தைக்கு கடமையாக்கியிருக்கிறது இஸ்லாம்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல், பெற்றுக்கொள்ள கூடாது என்பதற்காக ஒரு பெண் தன்னை தற்காலிக மலடாக ஆக்கி கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால் தற்காலிக கருத்தடை ஏற்பாடுகளை செய்வதை தடுக்கவில்லை. நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுவிட்டால் என்று கவலைப்படுகிறீர்கள். நான் இறந்த பிறகு என் மனைவி மறுமணம் செய்துக்கொள்ள தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்று இஸ்லாம் கவலைப்படுகிறது. இது இருபாலருக்கும் பொருந்தும்.

கல்வியும் விழிப்புணர்வும் இருந்தால் அழகிய சமுதாயத்தை உருவாக்கலாம். நாங்கள் முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இத்தனை மாற்று ஏற்பாடுகளும் இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி ஏற்பாடுகளாகும். “அம்மா” என்று அழைப்பது பழைமையானது என்பதால் “மாமி”(ஆன்ட்டி) என்று மாற்றிக்கொள்வோமா?. பழைமையான விஷயம் என்பதால் ஒரு விஷயத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதில் பாதிப்பு இருந்தால்தான் எதிர்ப்போம். முத்தலாக் என்பது முஹம்மது நபி தடைசெய்த ஒன்று. மொத்தத்தில் இஸ்லாம் வெறுக்கும் ஒன்றை இஸ்லாத்தில் இருப்பதாக சொல்ல இத்தனை ஆர்பாட்டமா?

கடவுள் அனுமதித்த விஷயத்தில் வெறுக்கக்கூடிய ஒன்றுதான் இந்த விவாகரத்து(தலாக்) என்றும் ஆண்களுக்கு பெண்களை விவாகரத்து செய்ய திருப்பி அழைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பின் ஊடே இரண்டு விவாகரத்தும் மூன்றாவதில் நிரந்தரமாகவும் ஆக்குகிறது இஸ்லாம். ஆனால் பெண்களுக்கு ஒரே வாய்ப்பில் ஆண்களை விவாகரத்து செய்யும் உரிமை கொடுத்திருக்கிறது. முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தை அறியாமல் டிஜிட்டல் மற்றும் அதிரடி விவாகரத்து (முத்தலாக்) செய்கிறார்கள். இதில் எதை பழைமைவாதம் என்கிறீர்கள்?

திருமணம் செய்யப்போகும் கணவனிடம் ஜீவனாம்சத்தை அல்லது மணக்கொடையை (மஹர்) முதலிலேயே பெற்றுக்கொள் என்கிறது இஸ்லாம். அதுவல்லாமல், விவாகரத்து செய்யப்பட்ட பின்புதான் கணவனிடம் யாசித்து நிற்கவேண்டும் என்று சொல்வது. இதில் எது பழைமைவாதம்?

வேசிகளிடம் செல்லாதே, நல்ல பெண்களை வேசிகளாக்காதே என்று சொல்லி பாரபட்சம் இல்லாமல் சரிசமமாக நடத்த முடியும் என்றால் மட்டுமே மற்றவளை திருமணம் செய்துக்கொள் என்கிறது இஸ்லாம். அதுவல்லாமல், தெருவுக்கு தெரு சின்ன வீடு வைத்துக்கொள்ளலாம், அவளுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டாம். நீ எறிந்த பிச்சைக்காசு போதும் என்னும் முறை பழைமைவாதமா?

தற்காலிக கருத்தடைகளுக்கு அனுமதியளித்த பின்னர், பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவு, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை போதிப்பதில் மிகக் கண்டிப்பாகவும் குழந்தைகளை கொலை செய்யாதே என்றும் சொல்கிறது இஸ்லாம். அதுவல்லாமல் குழந்தைகளை கொலைசெய்வது, கருவிலேயே சமாதி கட்டுவது, இறைவன் தந்த அருட்கொடைகளை நீக்கிக்கொள்வது இவற்றில் எது பழைமைவாதம்?

ஐயா, முஸ்லிம்கள் செய்வதெல்லாம் இஸ்லாம் இல்லை. நீங்கள் முஸ்லிம்கள் செய்வதை எதிர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம். முத்தலாக் என்ற பெயரில் தன்னை நாடிவந்த பெண்ணை சட்டென்று நிற்கதியாக்கும் முஸ்லிம்களை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாத்தை கொச்சைப்படுத்த இதனை வாய்ப்பாக்கி கொள்ளாதீர்கள் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாத்தைப்பற்றி விமர்சனம் செய்ய விரும்புகிறீர்களா? தாராளமாக. இஸ்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. இதுவரை மிக மோசமாக இஸ்லாத்தின்பால் சேற்றை இறைத்தவர்களை எல்லாம்கூட விமர்சனம் செய்ய வரவேற்றே இருக்கிறோம். உதாரணத்திற்கு ஒரு சில சுட்டிகள் மட்டும்:

இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (அக்பர் பாட்சா)
வாருங்கள் விவாதிக்கலாம் (அப்துல்லாஹ்)
விவாதங்கள் விவாதங்களாகவே.. (நல்லார்க்கினியன்)
மற்றும் சுடர்

ஆனால் அதற்கு முன்பு எது இஸ்லாத்தின் ஆதாரம் என்பதையும் படித்துக்கொள்ளுங்கள்.

இஸ்லாம் மார்க்கம் தனது கொள்கையை அறிவுப்பூர்வமாக சிந்தித்து மட்டுமே ஏற்றுக்கொள்ளச் சொன்ன மார்க்கம். அதனால்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் சிந்திக்க மாட்டீர்களா என்று இறைவன் கேட்கிறான். இக்காலத்தில் மூட பழக்க வழக்கங்களை கண்டிப்பவர்களை அறிவு ஜீவிகள் என்கிறோம். அந்த அறிவு ஜீவிகளே செய்யக்கூடிய மூட பழக்கங்களையும் வன்மையாக கண்டித்ததுதான் இஸ்லாம். அதனால்தான் முஹம்மது நபிக்கு முஸ்லிம்கள் சிலை வைக்கவில்லை. இஸ்லாம் சொல்லும் பகுத்தறிவு கொள்கைகளை எனது அடுத்த (மாமனிதர்) தொடரில் எழுதலாம் என்று உள்ளேன். (கடவுள் நாடினால்).

திராவிட கழகத்தின் ஒரு சில கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நம்மிடம் காசு கேட்கும், பலி கேட்கும், மூடபழக்கங்களின் திறவுகோலான இந்த கடவுள்களை வணங்க வேண்டுமா என்ற இந்த கருத்து என்னை அதிகமாக சிந்திக்க வைத்திருக்கிறது. தர்கா வாசல்களில் தவம் கிடப்பவர்களையும், வரதட்சணை வாங்கும் எங்கள் மார்க்கத்தை சார்ந்தவர்களையும் ஹஜ்ரத்துகளின் புரோகித தனத்தையும் எனக்கு கருத்து தெரிய வந்த நாட்களில் பார்த்தபோது இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்றுதானோ என்று நினைத்ததுண்டு. ஆனால் இஸ்லாம் பற்றி படித்தபோதுதான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தற்போது உள்ள வேறுபாடு புரிந்தது.

“கடவுள் இல்லை, (லாயிலாஹ) அல்லாஹ்வை தவிர (இல்லல்லாஹு)” என்கிறது இஸ்லாம். அதாவது கடவுளுக்கு நாம் கொடுக்கும் இலக்கணமான ஆசை, தூக்கம், குழந்தை உண்டு, பெற்றோர் உண்டு, கடவுளுக்குள் சண்டை இதுபோன்றவைகளை எப்படி கடவுள் என்று சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டு, இத்தகைய குறைபாடுகள் எவையும் அற்ற ஒருவன்தான் கடவுள் என்கிறது இஸ்லாம்.

இஸ்லாத்தை பலர் போற்றுவதற்கு காரணம் அது சொல்லும் பகுத்தறிவு கருத்துகள். இஸ்லாம் என்பது இறைவன் திருக்குர்ஆன் மூலமும், கடவுளின் தூதராக வந்த முஹம்மது நபி அவர்களின் மூலம் சொன்ன போதனைகள்தான் தவிர மற்ற எதுவும் இல்லை.

இஸ்லாம் பற்றி பலர் குறை சொல்லக் காரணம் முஸ்லிம்களின் தவறுகள் மட்டுமே. எல்லாருக்கும் இஸ்லாத்தைப்பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மற்றவர்கள் முஸ்லிம்களின் செயல்பாடுகள்தான் இஸ்லாம் என நோக்குகிறார்கள். ஆனால் முஸ்லிம்களில் பலர் தனது மனோ இச்சையை செயல்படுத்தி இஸ்லாத்திற்கு அவப்பெயர் உண்டாக்குகிறார்கள்.

என்னுடைய பதிவு உங்களின் கட்டுரைக்கு பதில் அல்ல. சிறு குறிப்புகள் மட்டுமே.

இதன் விரிவாக்கத்தை நண்பர் அபூமுஹையின் தொடரில் பார்ப்போம். முதலாம் தொடரின் சுட்டி:

தலாக் ஓர் விளக்கம்-1

_________________________________________
நந்தலாலா,
பெற்ற பெண்ணை ::மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்யும்:: மற்றவர் கலாச்சாரத்துடன்::தலாக் என்று சேர்த்திருப்பது யாரை திருப்தி படுத்துவதற்காக?

3 comments

  1. //திருக்குர்ஆனில் 6:137, 6:140, 6:151 ஆகிய வசனங்களில் குழந்தைகளை கடவுளின் பெயரால் //கொள்ளாதீர்கள்// என்றும் வறுமைக்கு பயந்து //கொள்ளாதீர்கள்// என்றும் சொல்லப்படுகிறது. இதில் என்ன பழைமைவாதம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.//

    Please correct the spelling mistakes here. it is very important.

    Your article is excellent and need of the hour.
    Here the pity is, eventhough it is just and logic, if you are talking/writing in favour of Religious view, the scholars (aRivu jeevigaL) will lable you as a fanatic specially in the case of islam.

  2. அன்பின் பாபு,
    கவனக்குறைவினால் ஏற்பட்ட குறை. சரி செய்துவிட்டேன்.

    சுட்டிக்காட்டியமைக்கும் உங்களின் கருத்துக்கும் நன்றி!

  3. சர்தார்

    நந்தலாலா உட்பட அங்கே பின்னூட்டமிட்ட பலருக்கு அபூஉமரின் இந்த பதிவில் பதில் இருக்கிறது என்று நம்புகிறேன்.

    நந்தலாலா கவனிப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *