–மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
உளூ என்பது ஓர் அமலாகும். ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரங்களிலும் உளூடன் இருப்பதை இஸ்லாம் விரும்புகிறது. உளூ இல்லாவிட்டால் தொழுகையே கூடாது. உளூ முறிந்து விட்டால் தொழுகைக்காக உடனே உளூ செய்து கொள்ள வேண்டும்.
அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: “சிறு தொடக்கு ஏற்பட்டவன் வுழூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரீ 135 -முஸ்லிம்)
உளூ எப்போதெல்லாம் முறியும் என்பதை இஸ்லாம் நமக்கு தெளிவுப் படுத்தியுள்ளது. அந்த வரிசையில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உளூ முறியுமா? அல்லது என்ன செய்ய வேணடும் என்று தொடர்ந்தும் அவதானிப்போம்.
சமைத்த உணவை சாப்பிட்டால் உளூ முறியும்…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை) உண்ட பின் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டும். இதை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
-அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் உளூச் செய்துகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: (சமைக்கப்பட்ட) பாலாடைக் கட்டிகளை நான் சாப்பிட்டதால்தான் (இப்போது) உளூச் செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை) சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
-இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் காலித் பின் அம்ர் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது சயீத் பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டுமா?என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருப்புத் தீண்டிய பொருளை (சமைத்த உணவை)ச் சாப்பிட்டால் (புதிதாக) உளூச் செய்து கொள்ளுங்கள். (முஸ்லிம் 581)
மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் உளூ செய்த நிலையில் சமைத்த எந்த உணவாக இருந்தாலும் சாப்பிட்டால் உளூ முறிந்து விடும் என்பதை காணலாம். இருந்தாலும் இது இஸ்லாத்தின் ஆரம்ப கால சட்டமாகும். இந்த சட்டம் பிறகு நபியவர்களால் மாற்றப்பட்டு சமைத்த உணவை சாப்பிட்டால் உளூ முறியாது என்பதை பின் வரும் ஹதீஸ்கள் உறுதிப் படுத்துவதை காணலாம்.
அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியைப் போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள்; அவர்கள் (புதிதாக) உளூச் செய்யவில்லை.
இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் (வந்து) (ஆட்டுச்) சப்பையை சாப்பிட்டுவிட்டுத் தொழுதார்கள். ஆனால், அவர்கள் (புதிதாக) உளூச் செய்ய வில்லை. (முஸ்லிம் 584)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பால் அருந்திய பின்னர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்புளித்தார்கள். பிறகு இதில் கொழுப்பு இருக்கிறது (ஆகவேதான், வாய் கொப்புளித்தேன்) என்று கூறினார்கள். (முஸ்லிம் 586)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்களிடம் ரொட்டியும் இறைச்சியும் அன்பளிப்பாகக் கொண்டுவரப்பட்டன. அவர்கள் அதிலிருந்து மூன்று கவளம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தண்ணீரைத் தொடக்கூட இல்லை. (முஸ்லிம் 587)
எனவே உளூ செய்த நிலையில் சமைத்த உணவை சாப்பிட்டால் உளூ முறியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இருந்தாலும் வாயில் பிசு பிசுத்த தன்மையை போக்குவதற்காக வாய் கொப்பளித்துக் கொள்வது சிறப்பாகும்.
ஒட்டக இறைச்சி சாப்பிட்ட பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்வது.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஆட்டிறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீர் விரும்பினால் உளூச் செய்துகொள்க! விரும்பா விட்டால் உளூச் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். அந்த மனிதர், ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் நான் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூச் செய்துகொள்க! என்றார்கள். அவர், ஆட்டுத் தொழுவத்தில் நான் தொழலாமா? என்று கேட்டார். அதற்கு ஆம் (தொழலாம்) என்றார்கள். அவர், ஒட்டகத் தொழுவத்தில் தொழலாமா?என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை (தொழ வேண்டாம்) என்று கூறினார்கள்.(முஸ்லிம் 588)
மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் உளூ செய்த நிலையில் எவராவது ஒட்டக இறைச்சியை சாப்பிட்டு விட்டால் அவரது உளூ முறிந்து விடும். என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே ஒட்டக இறைச்சியை தவிர வேறு எந்த இறைச்சியையோ, அல்லது வேறு எந்த சமைத்த உணவையோ உளூ உள்ள நிலையில் சாப்பிட்டால் உளூ முறியாது என்றாலும் வாய் கொப்பளித்துக் கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.