بسم الله الرحمن الرحيم
வீண் விரயம் என்றால் என்ன என்பது பற்றி அர்ராகிப் என்ற அறிஞர் கூறும்போது:
“மனிதன் புரியும் அனைத்து காரியங்களிலும் எல்லை மீறுதலாகும்” என்கிறார்.
(அல்முப்ரதாத் பீ கரீபில் குர்ஆன்)
வீண்விரயத்தைச் சுட்டிக்காட்டும் முகமாக அரபு மொழியில் இரு வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை الإِسْرَاف ، التَّبْذِيْر ஆகியனவாகும். இவற்றுள் الإسْرَاف என்பது தனக்கு அவசியமான விடயங்களில் அளவுக்கதிகமாகச் செலவிடுவதைக் குறிக்கும். மற்றும், التَّبْذِيْر என்பது அவசியமற்ற விடயங்களில் ஒன்றைச் செலவு செய்வதாகும். இமாம் ஷாபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றார்கள்: “தனக்கு உரிமையில்லாதவற்றில் பணத்தை செலவு செய்தல் التبذير ஆகும்.” (அல்ஜாமிஉ லிஅஹ்காமில் குர்ஆன்)
வீண்விரயம் தொடர்பாக அல்குர்ஆனில்…
1. “இன்னும், (வீண்) விரயம் செய்யாதீர்கள். வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.” (அல்அன்ஆம்: 141)
2. “மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள். மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்.” (அல்அஃராஃப்: 31)
3. “(செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக! நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.” (பனீ இஸ்ராயீல்: 26, 27)
4. “இன்னும், அவர்கள் எத்தகையோரெனில் அவர்கள் செலவு செய்தால், வீண் விரயம் செய்யமாட்டார்கள். (ஒரேயடியாக) சுருக்கிக் கொள்ளவும் மாட்டார்கள். அ(வ்வாறு செலவு செய்வதான)து அவ்விரண்டு நிலைகளுக்கும் மத்தியிலிருக்கும்.” (அல்ஃபுர்கான்: 67)
வீண் விரயத்தை எச்சரிக்கும் சுன்னாவின் வரிகள்…
• “வீண் விரயம் அல்லது பெருமை ஆகியன கலக்காத விதத்தில் உண்ணுங்கள்! பருகுங்கள்! தர்மம் செய்யுங்கள்! அணியுங்கள்!” (நஸாயி, இப்னு மாஜா)
• “(அல்லாஹ் உங்களிடத்தில்) செவியுற்றவற்றையெல்லாம் கதைப்பதையும் அதிகமாகக் கேள்வி கேட்பதையும் பணத்தை வீணாகச் செலவு செய்வதையும் வெறுக்கின்றான்.” (புகாரி, முஸ்லிம்)
• “நான்கு விடயங்கள் குறித்து விசரிக்கப்படும் வரை ஓர் அடியானின் பாதம் மறுமைநாளில் அசையாது நிலைபெற்றிருக்கும்…. (அவற்றில் ஒன்று) அவனுடைய பணத்தைப் பற்றி விசாரிக்கப்படும். அதை எங்கிருந்து சம்பாதித்தான் என்றும் எவ்வழிகளில் செலவு செய்தான் என்பது பற்றியும் வினவப்படும்.” (ஸஹீஹுத் தர்கீப்)
இப்படி பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வீண் விரயம் குறித்து ஸலபுஸ் ஸாலிஹீன்கள் என்ன கூறுகிறார்கள்?!….
• இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: “நீ நாடியதைச் சாப்பிடு! நீ நாடியதை அணி! (அதன் போது) இருபண்புகள் உன்னைப் பீடிக்காது இருக்கட்டும்! (அவை) வீண் விரயமும் பெருமையுமாகும்.” (இப்னு அபீ ஷைபா)
• உஸ்மான் இப்னுல் அஸ்வத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நான் ஒரு முறை முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடன் கஃபாவைத் தவாபு செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள்: ஒருவர் அல்லாஹ்வை வழிப்படுகின்ற விடயத்தில் பத்தாயிரம் திர்ஹம்களைச் செலவு செய்தாலும் அது வீண் விரயமாகக் கருதப்படமாட்டாது, மாறாக, அவர் ஒரு திர்ஹமையேனும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் செலவு செய்தால், வீண்விரயம் செய்யக்கூடிய மக்களில் ஒருவராக அது அவரை ஆக்கிவிடும்” என்றார்கள். (தப்ஸீருல் குர்ஆன்)
வீண் விரயத்தின் தோற்றப்பாடுகள்:
வீண் விரயமானது பல்வேறுபட்ட அமைப்புக்களில் எமது சமுகத்திற்கு மத்தியில் தலைவிரித்தாடுகின்றது. அந்த அடிப்படையில்…
1. பாவச் செயல்களைக் கொண்டு மக்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையை வீணாகக் கழித்தல். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து)விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்.” (அல்ஜுமர்: 53)
2. உணவில் வீண்விரயமும் அளவுகடந்து வயிறு நிரம்ப உண்ணுதலும்
3. வுழு மற்றும் சுத்தம் விடயத்தில் நீரை வீண்விரயம் செய்தல்.
4. மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் உபயோகங்களின் போது வீண்விரயம் செய்தல்.
5. விருந்துபசாரங்கள், ஆடை அணிகலங்கள் போன்றவற்றில் நிகழும் வீண் விரயங்கள் என்று பட்டியல் படுத்திக் கொண்டே பேகலாம்.
வீண் விரயத்திற்கான காரணங்கள்:
வீண் விரயம் நிகழ்வதற்கான காரணங்களைப் பின்வருமாறு இனங்காட்டலாம்.
1. அறியாமை
2. சூழல் தாக்கம்
3. நெருக்கடிக்குப் பின் உண்டாகக் கூடிய வசதியான வாழ்க்கை
4. மறுமை தொடர்பான பொடுபோக்கு
5. வீண் விரயம் செய்யக்கூடியவர்களுடனான தோழமை.
6. சிறுபராயத்தில் இருந்து வீண் விரயம் தொடர்பாகக் கற்றுக் கொடுக்கப்படாமை. இப்படிப் பல காரணங்களைக் குறிப்பிடலாம்.
எனவே, எங்களுடைய விடயங்களில் எப்பொழுதும் நடுநிலைமையைப் பேணுவோம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “மேலும், (உலோபியைப் போன்று செலவு செய்யாது) உம்முடைய கையை உம்முடைய கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்! அன்றியும், (உம்மிடம் இருப்பதை செலவழித்துவிட்டு) அ(க்கையான)தை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராக, முடைப்பட்டவராக உட்கார்ந்துவிடுவீர்.” (அல்இஸ்ரா: 29)
எனவே, எங்களுடைய செலவீனங்களில் அளவு கடந்து செல்லாமலும் எதையும் செலவு செய்யாது உலோபித்தனமாக இருக்காமலும் நடுநிலையாகச் செயற்பட அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!
நன்றி: salaf.co