Featured Posts

பெருகி வரும் போதைப் பாவனை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –

உலக அழிவின் அடையாளங்களில் போதைப் பாவனை பெருகுவதும் ஒன்றாகும். அதை நாம் இன்று நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். ஆரம்ப காலத்தில் சாராயம், கள் என்றிருந்த போதை இன்று பல்வேறு வடிவம் பெற்று புதுப்புது வடிவங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது.

திடீர் பணக்காரனாக வேண்டும் என ஆசைப்படுபவர்கள் போதை வியாபாரத்தில் ஈடுபடுவதை அதற்கான இலகுவான வழியாகப் பார்க்கின்றனர். போதை வியாபார மாபியாக்கள் அரசியல் பண பலத்துடன் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் நகர்ப்புறங்களைக் குறிவைத்த இவர்கள் இப்போது கிராமப் புறங்களையும் கூட குறிவைத்து குழிபறித்து வருகின்றனர்.

அப்பாவி இளைஞர்கள் மட்டுமன்றி யுவதிகள் கூட போதை முகவர்களின் வியாபார யுக்தியில் வீழ்ந்து வருகின்றனர்.

அடிமைப்பட ஆசையா?
உலகில் சுதந்திரத்திற்காகத்தான் அதிகமான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. மனிதன் யாருக்கும் அடிமைப்பட்டு வாழ விரும்புவதில்லை. கட்டுப்பட்டு வாழக் கூட விரும்புவதில்லை. பெற்றோரின் கட்டுப்பாட்டை விரும்பாத பிள்ளைகள் ஆசிரியர்களின் கட்டுப் பாட்டை விரும்பாத மாணவர்கள், கணவனின் கட்டுப்பாட்டை விரும்பாத மனைவி…. என்று இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. நிலைமை இப்படியிருக்க, போதைக்கு ஒருவன் அடிமையாக பணத்தை செலவழிக்கின்றான் என்றால் இது எவ்வளவு பேதமையானது?

உங்களை நீங்கள் அடிமையாக்க விரும்புகின்றீர்களா? இல்லையென்றால் விளையாட்டுக்காகக் கூட போதையைத் தொட்டும் பார்த்துவிடாதீர்கள்.

அறிவை இழக்க ஆசையா?
மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய மிகப் பெரும் அருள்களில் ஒன்றுதான் அறிவாகும். இந்த அறிவை வளர்ப்பதற்காகவே இன்று மனிதன் பெரும் முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றான். அறிவு வளர்ச்சிதான் மனித இனத்தின் வளர்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், போதை மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியது. பணம் கொடுத்து கொஞ்ச நேரம் பைத்தியமாக இருப்பது எவ்வளவு பைத்தியகாரத்தனமானது! இது குறித்து இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறும் போது, பின்வருமாறு கூறுகின்றார்.

“பணம் கொடுத்து வாங்கக் கூடியதாக அறிவு இருந்தால் மக்கள் எவ்வளவு கொடுத்தும் வாங்குவார்கள். இப்படியிருக்க, அறிவை கெடுக்க கூடியதை பணம் கொடுத்து வாங்குவது ஆச்சரியமாக உள்ளது.”

எனவே, இளைஞர்களே! உங்கள் அறிவை மழுங்கடித்து கொஞ்ச நேரம் உங்களைப் பைத்தியமாக்கும் போதையின் பக்கம் எட்டியும் பார்த்துவிடாதீர்கள்.

காரணங்கள்: இன்றைய இளம் சந்ததிகள் போதையின் பால் ஈர்க்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை இனம் கண்டு களைவது காலத்தின் கட்டாயமாகும்.

1. சரியான வளர்ப்பு முறையின்மை:
குடும்ப சூழல் இஸ்லாமிய மயப்படாத குடும்ப உறுப்பினர்கள் மிக விரைவாக போதைக்கு அடிமையாகலாம். சில பெற்றோர்கள் போதைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கலாம். தந்தை, சிலபோது தாயும் கூட குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கலாம். இது குடும்ப உறுப்பினர்களையும் கெடுக்கும்.

சில தந்தையர்கள் தமது பிள்ளைகளிடம் சிகரட் வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்புகின்றனர். இத்தகைய சிறுவர்கள் விரைவாக புகைத்தலுக்கு அடிமையாகலாம். புகைத்தலைத் தடுப்பதற்காக இலங்கை அரசு வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிறுவர்களுக்கு சிகரட் விற்க முடியாது, பொது இடங்களில் புகைக்க முடியாது… போன்ற சட்ட நடவடிக்கைகள் உள்ளன. இதே போன்று மது, போதைப் பாவனைக்கு எதிராகவும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படல் வேண்டும். குறைந்த பட்சம் பொது இடங்களில் குடிக்க முடியாது, பொது இடத்தில் போதையுடன் நடமாடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற அடிப்படையில் சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும்.

2. தீய நட்பு:
போதைப் பாவனை இளைஞர்களிடம் அதிகமாகப் பரவுவதில் தீய நட்புக்கு முக்கிய பங்குண்டு. நட்புக்காக மது அருந்துவோர், சிகரட் பிடிப்போர் உள்ளனர். போதை மாபியாக்களின் முகவர்கள் நண்பர்களாகப் பழகி போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி தமது வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொள்கின்றனர். எனவே, இளைஞர்கள் போதைக்குத் தூண்டும் நட்புக்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் உங்கள் நண்பர்கள் அல்லர். மாறாக பகிரங்க எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

3. கெட்ட சூழல்:
பெரும்பாலும் தந்தை தொழில் செய்யும் இடத்திற்கு அருகில் குடியிருக்கவே அதிகமானவர்கள் விரும்புகின்றனர். மற்றும் சிலர் பிள்ளைகள் படிக்கும் பாடசாலைக்கு அருகில் குடியிருக்க விரும்புகின்றனர். நாம் குடியிருக்கும் சூழல் நல்லதா என்பதை பெரிதும் பார்ப்பதில்லை. வசதியையும் இலகுவையும் மட்டுமே பார்க்கின்றோம்.

போதைப் பாவனையாளர்கள் அல்லது அது போன்ற வியாபார நிலையங்கள் அதிகமாக உள்ள இடங்களில் வாழும் மக்கள் வெகு விரைவாக போதைக்கு அடிமையாகின்றனர். எனவே, மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப் படுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லது அத்தகைய இடங்களில் குடியிருப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.

4. தொலைத் தொடர்பு சாதனங்கள்:
மீடியாக்கள் இன்று எல்லாத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஜாம்பவானாகத் திகழ்கின்றது. அந்த வகையில் போதைப் பாவனையை ஊக்குவிக்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தொடராக மீடியாக்களில் இடம்பெறுகின்றன. வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் ஆடை, பேச்சு, நடையுடை பாவனை… அனைத்திலும் சினிமா இன்று பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. இத்தகைய தாக்கம் மிக்க சினிமா போதைப் பாவனையை ஊக்குவிக்கின்றது. போதைப் பாவனையை ஹீரோயிசமாகவும், ஸ்டைலாகவும், கலாசாரமாகவும் இன்னும் இன்னோரன்ன கோணங்களில் காட்டி இளம் சமூகத்தை தவறான பாதையில் செலுத்தி வருகின்றது.

சினிமாக்களை ஆரம்பிக்கும் போதும் இடைவேளை விடும் போதும் ‘மது அருந்துவது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். புகை பிடிப்பது உயிரைக் கொல்லும்’ என்ற விளம்பர வாசகத்தைப் போடுகின்றனர். ஆனால், அந்த சினிமாக் காட்சியில் பெரும்பாலான இடங்களில் மது மற்றும் புகை என்பன மேற்கூறிய வாசகங் களை மழுங்கடிக்கச் செய்து போதையை மனதில் நிறுத்தி வைக்கும் அளவுக்கு மதுவினதும் புகையினதும் விளம்பரம் உள்ளது என்றால் மிகையன்று.

எனவே, மக்களைத் தவறான வழியில் செலுத்தும் பொழுதுபோக்குகள், விளம்பரங்கள் போன்ற அனைத்தும் தடுக்கப்படல் வேண்டும். ஊடகச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் ஊடகங்கள் செய்யும் சமூக கட்டமைப்பைச் சிதைக்கும செயற்பாடுகள் இனங்காணப்பட்டு அவை தடுக்கப்பட வேண்டும்.

இன்றைய உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினைகளில் போதைப் பாவனையும் ஒன்றாகும். இதைத் தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அத்தனையையும் தவிடு பொடியாக்கிக் கொண்டு அது முந்திச் செல்வதற்கு முக்கியமாக நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் இலஞ்சமே வாழ்க்கை என்ற கதியில் இருக்கும் உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்புக் களே காரணமாகும்.

எனவே, போதை வியாபாரிகள் சமூகத் தலைவர்களாகவாவது இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

அத்துடன், அரசுகளே மதுக் கடைகளை எடுத்து நடாத்தும் நிலை இருக்கக் கூடாது. மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் வருவதாக வாதிக்கப்படுகின்றது. அந்த வருமானத்தை விட அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களே அதிகமானதாகும். இதை ஏன் கொஞ்சமாவது சிந்திப்பதில்லை?

போதையால் நடக்கும் விபத்துக்கள், கலவரங்கள், வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள், குடும்ப முறிவுகள், கொலை, கொள்ளை, திருட்டு, கடத்தல், கற்பழிப்பு…. போன்ற பெரும் குற்றச் செயல்கள் மட்டுமன்றி அதனால் ஏற்படும் பாரிய நோய்கள் என அனைத்தும் நாட்டுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்துகின்றன.

நாட்டின் பெறுமதியான மனித வளம் சீரழிகின்றது. எதிர்கால சந்ததிகளின் முன்னேற்றம் தடைப்படுகின்றது. நாடு நலமாக இருக்க வேண்டும் என்றால் நாட்டு மக்கள் முதலில் நல்ல தேகாரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் உழைப்பு உயிர்பெற்று நாடு நல்ல வருமானத்தைப் பெறுவது மாத்திரமின்றி போதையால் நாளுக்கு நாள் பெருகும் நோய்களுக்கான செலவினங்களும் குறைந்து நாட்டின் வருமானம் இன்னும் அதிகரிக்கும்.

பெண்கள் வாழ்வின் நிம்மதியை இழக்கின்றனர். குடிகாரத் தந்தையர்களின் பிள்ளைகள் கல்வியை, சமூக அந்தஸ்தை இழக்கின்றனர். அண்டை அயலவர்கள் கூட நெருங்கிப் பழகுவதையும் இவர்களின் பிள்ளைகளுடன் சேர்வதையும் வெறுக்கின்றனர்.

நாட்டில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு குறிப்பாக தந்தையர்களாலேயே சொந்த மகள்கள் கற்பிழந்தும் தந்தையின் வாரிசைச் சுமந்தும் அவமானத் தைச் சந்தித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை சர்வ சாதாரணமாகவே இப்போது நடைபெற்று வருகின்றது. இவற்றுக் கெல்லாம் மூல காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் போதை என்ற நாமம்தான் அடிப்படையாகவும் முதன்மையானதாகவும் இருக்கின்றது.

எனவே, நாட்டின் ஒட்டுமொத்த நலனையும் கருத்திற் கொண்டு முழுமையான மது ஒழிப்புத் திட்டத்தை அரசுகள் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

நாடும் நாட்டு மக்களும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ முழுமையான மது ஒழிப்புத் திட்டமே தீர்க்கமான முடிவாகும். அதிகாரத்தில் உள்ளோர் இதில் அக்கறை செலுத்துவார்களா?

One comment

  1. மையத்து கபன் செய்யும் முறை பற்றி போட்டோக்களை மஸ்ஜித் தோறும் ஓட்டும் உலமா சபை இது போன்ற விளக்கங்களை ஓட்டினால் பிரயோசனமாயிருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *