Featured Posts

இஸ்லாமும் பிற சமூக உறவும் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

3:28 – நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்பாளர்களை நேசத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கே தவிர யாரும் அவ்வாறு செய்தால் அவருக்கு அல்லாஹ் விடமிருந்து (பாதுகாப்பு) எதுவும் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறான். மேலும், அல்லாஹ்விடமே மீளுதல் உள்ளது

ஒரு முஸ்லிம் பிற சமூக மக்களுடன் எத்தகைய உறவைப் பேண வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் விரிவாகப் பேசுகின்றது. முஸ்லிம் அல்லாத மக்களில் சிலர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் மீது அன்பும் மரியாதையும் செலுத்துவதை இஸ்லாம் கண்டிக்கின்றது. இஸ்லாத்தை ஏற்காத அதே வேளை எதிர்க்காதவர்களுடன் மிக நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தை எதிர்க்கக்கூடிய முஸ்லிம் அல்லாத மக்களை உற்ற நண்பர்களாக எடுப்பதைத் தடுக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.

நம்பிக்கையாளர்களை விட்டு விட்டு இறை மறுப்பாளர்களை அவ்லியாக்களாக எடுக்கக் கூடாது என இந்த வசனம் தடுக்கின்றது. ‘அவ்லியா’ என்றால் நண்பர்கள், உறவினர்கள், பொறுப்பாளர்கள் என்பன போன்ற பல அர்த்தத்தைத் தரும். திருமணத்தில் பெண்ணின் பொறுப்பாளர் அவ்லியா என்பதன் ஒருமைப் பதமான ‘வலி’ என்ற பெயரில் அழைக்கப்படுவதை நாமறிவோம். இந்த அடிப்படையில் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களை நேசத்திற்குரிய, நெருக்கத்திற்குரிய நண்பர்களாக எடுக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.

அவர்களால் எமக்கு ஆபத்து வரும் என்றிருந்தால் அப்போது நெருக்கம் போல் காட்டிக் கொள்ளலாம் எனவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

சிலர் இந்த வசனத்தைப் பொதுவான சட்டமாக எடுத்துக் கொண்டு முஸ்லிம்கள் எம்முடன் நடிக்கின்றார்கள். இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களுடன் நட்புடன் நடந்து கொள்வதைத் தடுக்கின்றது எனக் கூறி வருகின்றனர்.

குர்ஆனை அணுகும் போது அதன் ஒரு வசனத்தை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. குறித்த விடயம் தொடர்பான சகல வசனங்களையும் இணைத்துத்தான் முடிவு செய்ய வேண்டும்.

60:1 – நம்பிக்கை கொண்டோரே! எனது விரோதியையும், உங்கள் விரோதியையும் அவர்கள் மீது அன்பைச் சொரியும் உற்ற நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். (ஏனெனில்,) அவர்கள் சத்தியத் திலிருந்து உங்களிடம் வந்தவற்றை நிச்சயமாக நிராகரித்து விட்டனர். நீங்கள் உங்களது இரட்சகனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்காக இத்தூதரையும் உங்களையும் அவர்கள் வெளியேற்றுகின்றனர்.

அல்லாஹ்வின் எதிரிகளையும் எமது எதிரிகளையும் நேசத்திற்குரிய நண்பர்களாக எடுக்கக் கூடாது என இங்கு கூறப்படுகின்றது. முஸ்லிம்களை சமய ரீதியில் எதிர்ப்பவர்கள் அல்லாஹ்வின் எதிரிகளாகவும் சமூக ரீதியில் எதிர்ப்பவர்கள் முஸ்லிம்களின் எதிரிகளாகவும் பார்க்கப்படுவர். எதிரிகளை உற்ற நண்பர்களாக எடுக்காதீர்கள் என்பது பிழையான போதனை அல்ல என்பதை எவரும் மறுக்க முடியாது!

இதே அத்தியாயத்தின் ஒன்பதாம் வசனமும் இதைத் தெளிவுபடுத்துகின்றது.

60:9 – எவர்கள் மார்க்க (விடய)த்தில் உங்களுடன் போரிட்டு, உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றினார்களோ அவர்களையும் மேலும், உங்களை வெளியேற் றிட உதவி செய்தார்களோ அவர்களையும் நேசத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்வதையே அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கின்றான். அவர்களை யார் நேசர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.

முஸ்லிம்களுடன் போர் புரிவோர், முஸ்லிம்களை அவர்களது பூர்வீக பூமியிலிருந்து வெளியேற்றியோர், அப்படி வெளியேற்ற உதவி செய்வோர் ஆகியோரையே உற்ற நண்பர்களாக எடுக்கக் கூடாது என குர்ஆன் கூறுகின்றது. எனவே, 3:28 வசனத்தை வைத்து இஸ்லாம் பிற சமூக மக்களுடன் நட்புறவு பாராட்டுவதைக் கண்டிப்பதாகக் கூறுவது கண்டிக்கத்தக்கதாகும்.

இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகள் மீது அன்பைப் பொழியக் கூடாது என்பது கூட உள்ளம் தொடர்புபட்ட ஒரு அம்சமாகும். ஒரு முஸ்லிம் ஒருவரை நேசிப்பதாக இருந்தாலும் வெறுப்பதாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காவே நேசிக்கவோ அல்லது வெறுக்கவோ வேண்டும். இப்படி இருக்கும் போது இஸ்லாத்தை எதிர்ப்பவரை ஒரு முஸ்லிம் நேசிக்க முடியாது. இதே வேளை, உள்ளத்தால் அவரை நேசிக்காத ஆனால், அவருடைய விடயத்தில் நீதி நெறி தவறாது நடக்க முடியுமா என்றால் முடியாது என்றே இஸ்லாம் கூறுகின்றது.

இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளை நேசிக்கக் கூடாது. இருப்பினும் அவர்களுடனும் நீதி நெறியுடனேயே நடக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.
அன்றைய முஸ்லிம்களுக்கு இரு மிகப் பெரும் எதிரிகள் இருந்தனர்.

முஸ்லிம்களுக்குப் பல கொடுமைகள் செய்து அவர்களை அவர்களது பூர்வீக பூமியில் இருந்து வெளியேற்றிய மக்கத்து சிலை வணங்கிகள், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக சதிகள் பல செய்து கொண்டிருந்த யூதர்கள் ஆகிய இவ்விரு எதிரிகளுடனும் நீதமாக நடக்குமாறு இஸ்லாம் கட்டளையிட்டது.

5:2 – ‘…மஸ்ஜிதுல் ஹராமுக்குச் செல்லவிடாது உங்களைத் தடுத்த ஒரு கூட்டத்தாரின் மீதுள்ள வெறுப்பு (அவர்கள் மீது) வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மை செய்வதிலும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள். மேலும், பாவம் செய்வதிலும், வரம்பு மீறுவதிலும் ஒருவருக் கொருவர் உதவியாக இருக்காதீர்கள். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாவான்.’

5:8 – ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் வுக்காக நீதியை நிலைநிறுத்துபவர்களாகவும் (அதற்கு) சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு, நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும். மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான்.’

முதலில், முதல் வசனம் மக்கத்து எதிரிகள் குறித்தும் இரண்டாம் வசனம் மதீனத்து யூதர்கள் குறித்தும் பேசுகின்றது.

எனவே, மாற்று மத மக்களுடன் இஸ்லாம் நட்புறவுடன் பழகக் கூடாது என 3:28 ஆம் வசனம் கூறுகின்றது எனக் கூறுவோர் இஸ்லாத்தை சரியாகப் புரியாமல் அல்லது தமது சமூகத்தை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுடன் நட்புறவுடன் பழகுவதைத் தடுத்து பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய குற்றச் சாட்டை சுமத்தி வருகின்றனர் என்பதை சகலரும் புரிந்து கொள்வது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *