இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புதிய தாக்குதல்கள் அமெரிக்க எழுத்தாளரான ஸெர்ரி ஜோன்ஸின் Jewel of Medina என்ற புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் தொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்துக்கு எதிரான Londonistan என்கின்ற நூலை கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட்ட பிரித்தானிய வெளியீட்டகமே இந்த நூலையும் வெளியிட முன்வந்துள்ளது.
எமது நேசத்துக்குரிய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையும் அவர்களின் மனைவியான, விசுவாசிகளின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களையும் திட்டமிட்டு அவமதிக்க மேற்குலகு முயற்சிக்கிறது என்பதை பத்திரிகை அறிக்கைகளிலிருந்து நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் Denise Spelberg என்பவர் இப்புத்தகத்தைப் படித்துவிட்டு பின்வருமாறு விமர்சிக்கிறார்.
‘மிக அசிங்கமானதும் முட்டாள்தனமானதுமான இந்த நூல் முஸ்லிம்களையும் அவர்களது வரலாற்றையும் கேலி செய்துள்ளது’ எனவும் ‘புனிதமான வரலாற்று நிகழ்வுகளை ஒரு ஆபாசச் சித்திரமாகச் சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது’
எனவும் கூறியுள்ளார். இங்கு மேற்குலகின் புத்திஜீவிக்கே இந்நூலின் உள்நோக்கம் தெளிவாக தெரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்படவுள்ள விளைவுகளைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இந்தப் புத்தக வெளியீடானது கடந்த இரண்டு வருடங்களாக மேற்குலகிலே நமக்குப் பழகிப்போன, இஸ்லாத்துக்கெதிரான தொடர்ச்சியான தாக்குதல்களின் இன்னொரு வெளிப்பாடு என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஹிஜாபுக்கு எதிரான தாக்குதல்கள், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை மிக மோசமாக சித்தரித்த கேலிச்சித்திரங்கள், அல்குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். இவைதான் மேற்குலக அரசியல் வாதிகளால் சகிப்புத்தன்மை, மிதவாதம் என சிலாகித்துப் பேசப்படும் விழுமியங்களின் நிஜமான முகங்களாகும்.
இதுபோன்ற தாக்குதல்கள் வரும்போது முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இதன் மூலம் என்ன நாடப்படுகிறது? இஸ்லாமிய ரீதியில் மிகச்சரியான பதிலை எப்படிக் கொடுப்பது? ஆகிய அம்சங்களை அறிந்து செயற்படுவது மிக அவசியமாகும். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரால் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி, மேற்குலகின் பெருமானங்களையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளவைப்பதே இவ்வாறான தாக்குதல்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, அவமதித்தல் என்பதை நாம் விரும்பாத போதிலும், கருத்துச்சுதந்திரம் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, அவமதிப்பதும் நிந்திப்பதும் அடுத்தவரின் உரிமையாகும் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கப்பால் சென்று, நாம் மிகவும் புனிதமாக மதிக்கின்ற அம்சங்கள்தான் நிந்திக்கப்பட்டாலும் அதனையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். இதனை ஒருபோதும் நாம் ஏற்கமுடியாது. இதற்கான நியாயங்களைப் பார்ப்போம்.
முதலாவது: இன்று மதச்சார்பற்றவர்களாலும், மற்றோராலும் இஸ்லாம் நிந்திக்கப்படுவது போன்று யாருடைய புனித நம்பிக்கைகளையும் விளையாட்டுத்தனமாகவேனும் அவமதிப்பதற்கு ஒரு போதும் இஸ்லாம் அனுமதித்ததில்லை.
இரண்டாவது: தீமையைத்தடுத்தல் தொடர்பாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தொட்டும் வந்துள்ள மிகப் பிரபல்யமான ஹதீஸிலே தீமையானது கையாலோ நாவாலோ தடுக்கப்படாதபோது, குறித்த தீமையை உள்ளத்தால் வெறுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்கள். இதன்படி தீமையை உள்ளத்தால் வெறுத்தல்.
மூன்றாவது: பேச்சுச்சுதந்திரம் என்ற மேற்குலக மாயை, சமூகத்திலுள்ள அனேக அநீதிகளுக்கு காரணமாக அமைந்து விட்டதைக் காணமுடிகிறது. ஐரோப்பாவிலே நபி ஈஸா(அலை) அவர்கள் கேலி செய்யப்படுவது ஒரு சாதாரண விடயமாகும். இத்தகைய அவதூறுகளை மேற்குலகம், குறிப்பாக கிறிஸ்தவர்கள், கண்டு கொள்வதில்லை. ஆயினும், மனித வரலாற்றில் மிகச்சிறந்த மாமனிதர்களான இவர்களையே கேலி செய்யும் அதே சமூகம் தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் போன்றோர் அவமதிக்கப்படும் போது கவலைப்படுகிறது. இப்படி ஒரு முரண்பாடான நிலைப்பாடு இவர்களிடம் காணப்படுகிறது.
இச்சமூகத்தைப் பொறுத்தவரையில் மட்டுப்படுத்தப்படாத பேச்சுச்சுதந்திரம் என்பது பிறரை அவமரியாதை செய்வதற்கான சுதந்திரமேயாகும். இவ்வாறான ஒரு சமூகத்தில் அமைதியோ, சாந்தியோ நிலவ முடியாது. ஐரோப்பிய வரலாற்றை மீட்டிப் பார்க்கின்ற போது அவர்களால் சிறுபான்மை தொடர்பாக சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ள முடியவில்லை என்பது புலனாகின்றது. மாறாக, கருத்துச்சுதந்திரம் என்ற உரிமையானது மற்றவர்களை அவமதித்து அவர்களை ஒடுக்கும் உரிமையாக புது வடிவம் எடுத்தமையை ஐரோப்பாவின் வரலாற்றிலே காணலாம்.
இந்தப்புத்தகத்தின் வெளியீடு முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதற்கென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு கீழ்த்தரமான செயற்பாடாக இருப்பினும், ஆத்திரமூட்டலுக்கு எதிரான வன்முறைகளில் முஸ்லிம்களால் அதன் வெளியீட்டாளர்களுக்கே மில்லியன் கணக்கான இலாபத்தை பெற்றுத்தரும். இது தொடர்பாக முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்; என்பதைப் பார்ப்போம்.
1. இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலனைப் பாதுகாக்கின்ற கிலாஃபா அரசொன்று இல்லாத நிலைமையில் இஸ்லாத்தின் கண்ணியத்தையும், முஸ்லிம்களின் நற்பெயரையும் காப்பது சாத்தியமில்லை என்பதை முஸ்லிம்கள் முதலில் உணர்ந்தாக வேண்டும். கிலாஃபா ஆட்சி இருந்த போது அல்லாஹ்வையும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் கேலி செய்வதற்கு சகலரும் மிகவும் தயக்கம் காட்டியே வந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். ஆகவே, கிலாஃபாவை மீண்டும் நிலைநாட்டுவது தான் இதற்கான நிரந்தர தீர்வாகும்.
இன்று மேற்குலக தலைவர்கள் சுரண்டலையும், ஆக்கிரமிப்பையும் தவிர வேறு எதையும் தராத ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை தமது விழுமியங்கள் எனக்கூறிக்கொண்டு எல்லா நிலையிலும் அவற்றைக் காப்பதற்காக பாடுபடுகின்ற அதேவேளை, எமது ஆட்சியாளர்களோ தங்களது நலனுக்காக மட்டும் குரல் கொடுத்துவிட்டு மவுனமாகி விடுகின்றனர். அண்மையில் அரபு நாட்டு அரச குடும்பம் தங்களுக்கும் பிரித்தானிய அரசுக்குமிடையிலான ஆயுத விற்பனையோடு தொடர்பான ஊழல் பற்றிய வழக்கு விசாரனையை தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அகற்றிவிட்ட சம்பவம் பொருத்தமான நடைமுறை உதாரணமாகும்.
எமதருமை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் இஸ்லாத்தின் பெருமையையும் பாதுகாப்பதற்காக குரல்கொடுக்கவேண்டிய முஸ்லிம் தலைவர்கள் எங்கே?
ஆகவே, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கின்ற ஒரு கிலாஃபாவை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடன் முஸ்லிம்கள் கலந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புதிய தாக்குதல்கள் வரும்போதெல்லாம் கிலாஃபாவை நிலைநாட்டுவதற்கான எமது முயற்சிகளைப் பல மடங்காகப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.
2. இறைத்தூதர்களையே மதிக்காத ஒரு சமூகத்திலே எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் மரியாதைக்கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே மேற்குலகிலே குற்றச்செயல்கள் மலிந்த, பாதுகாப்பும் அமைதியும் இல்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது என்ற யதார்த்த நிலையை விவாதங்கள், கலந்துரையாடல்கள், கட்டுரைகள், வெகுஜன தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். தேவையேற்பட்டால் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
3. இச்சந்தர்ப்பத்தில் முஹம்மது(ஸல்) அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது பற்றி அதிகமானோர் கேள்விகளை எழுப்புவார்கள். முஸ்லிம்களாகிய நாம் இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி படைப்புகளிலே மிகச்சிறந்தவரும் மிக அழகிய உதாரண புருஷருமான முஹம்மது(ஸல்) அவர்கள் பற்றிய அறிவை உலக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நெதர்லாந்து அரசியல்வாதியான Geert Wilder என்பவர் இஸ்லாத்துக்கு எதிராகத் தயாரித்த திரைப்படம் எந்த வெற்றியையும் அளிக்காது, அதிகமானோரால் புறக்கணிக்கப்பட்டது போன்று இந்தப் புத்தமும் மக்களால் புறக்கணிக்கப்படலாம். அல்லது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கெதிரான கேலிச்சித்திரத்தை மேற்குலக அரசியல் வாதிகளும், வெகுஜனத்தொடர்பு சாதனங்களும் ஆதரித்தது போன்று இப்புத்தகத்தையும் ஆதரிக்கலாம். எவ்வாறான நிலை ஏற்பட்டபோதிலும் முஸ்லிம்கள் அனைவரும் இந்த அவமதிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் ஆழமாகவும் தூய்மையாகவும் நேசிக்கிறோம் என்பதற்கு அல்லாஹ்வின் முன் சான்றுபகர இச்சந்தர்ப்பத்தை ஆர்வத்துடன் பயன்படுத்த முன்வர வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள். (அல்குர்ஆன்61:14)
– டாக்டர் M. அஹ்மத் கபீர் MD, HHA
London, U.K.
24 அக்டோபர் 2008 / 24 ஷவ்வால் 1429
maayesha i want know meaning of the name
dear bro,pls send me ‘maulud oru ayvoo’ article if you have