மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்
ரமலான் வந்தது வந்த வேகத்திலே வேகமாக சென்று விட்டது என்று நாம் பேசி வருகிறோம். அப்படியானால் இந்த ரமலான் என்னை எவ்வாறு பக்குவப்படுத்தியது. இந்த ரமலான் மூலமாக என்னை எவ்வாறு இறையச்சம் உடையோராக அமைத்துக் கொண்டேன்.என்பதை ஒரு தரம் திரும்பி பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அல்லாஹ் நம் மீது இந்த நோன்பை கடமையாக்கிய நோக்கம் இந்த நோன்பின் மூலமாக உள்ளத்தில் இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதேயாகும். இறையச்சம் என்பது நாம் அன்றாடம் செய்யும் நல்லமல்கள் மூலமாக தான் பெற்றுக் கொள்ள முடியும். நபியவர்கள் காட்டித் தந்த நல்லமல்களை சரியாக தொடராக செய்து வந்தால் இந்த இறையச்சத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
ரமழானுக்கு என்று தனிப்பட்ட விசேசமான எந்த அமல்களும் கிடையாது. ரமலானுக்கு முன் பர்ளான தொழுகைகள், பர்ளுக்கு முன், பின் சுன்னத்துகள் இருந்தன ரமலானிலும் அவைகள் இருந்தன, ரமழானுக்கு முன் குர்ஆன் ஓதப்பட்டன, ரமழானிலும் குர்ஆன் ஓதப்பட்டன, ரமழான் அல்லாத காலத்திலும் இரவு தொழுகை தொழுப்பட்டன, ரமழானிலும் அவைகள் தொழப்பட்டன, இப்படி ரமழானுக்கு முன் இருந்த அமல்களை தான் நாம் தொடராக செய்து வந்தோம்.
ரமழானில் சொல்லப்பட்ட முழு பயனையும் அடைய வேண்டும் என்பதற்காக வழமையான அமல்களை சரியாக, தொடராக, நிறைவாக நேரத்திற்கு செய்யக் கூடிய நிலையை நாம் அமைத்துக் கொண்டோம். இந்த அமல்கள் மூலம் ரமழானில் இறை அன்பை பெறக் கூடிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் நமக்கு அருளினான். ரமழானில் நிறைவாக அமல்களை செய்ததின் காரணமாக பலவிதமான பரக்கத்தை அல்லாஹ் நமக்கு அருளியிருந்தான். இறையச்சம் உடையவர்களுக்கு அல்லாஹ் பல வழிகளில் ரிஸ்க்குகளை வழங்குகிறான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் மூலமாக நாம் அறியலாம்.
“எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்” அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் -திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். -65:03
இந்த வசனத்தின் மூலம் இறையச்சம் உடையோருக்கு தேவையான ரிஸ்கை வழங்குகிறான். அப்படியானால் அந்த இறையச்சத்துக்கான அடிப்படை அம்சம் நாம் நாளாந்தம் செய்யும் அமல்களாகும். அதனால் தான் ரமலானில் நாம் செய்த அமல்களுக்காக தொடரான அருள்வளத்தை அல்லாஹ் வழங்கினான்.
எனவே ரமழான் முடிந்தாலும் நாம் நமது அமல்கள் விசயத்தில் சரியானகவனம் செலுத்தினால் நிச்சயம் அல்லாஹ்வின் அருள் தொடராக நமக்கு கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பாக இரவு தொழுகை விசயத்தில் அதி முக்கியம் செலுத்துங்கள்.அந்த நேரத்தில் பரகத் பொருந்திய நமது ரப்பு அடிவானத்திற்கு இறங்கி வருகிறான். நம்மோடு பேசுகிறான். எனவே அந்த சந்தர்ப்பத்தை இழந்து விடாதீர்கள். ரமழானில் கடைசி இரவு எழுந்து பயிற்சி எடுத்தோம் அந்த பயிற்சியை நடைமுறைப்படுத்த தவறாதீர்கள்.
ரமழானில் அதிகமாக குர்ஆனை ஓதினோம். தொடராக நாளாந்தம் வீடுகளில் குர்ஆனை ஓதக் கூடிய வழமையை அமைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்கு தொடராக கிடைக்கும்.
ரமழானில் ஆண்கள் பர்ளான தொழுகைகளை உரிய நேரத்திற்கு பள்ளிக்கு போய் தொழக் கூடிய நிலையும், பெண்கள் வீட்டில் உரிய நேரத்தில் தொழக் கூடிய நிலையும் காணப்பட்டன. எனவே பர்ளான தொழுகைகளை ஆண்களும், பெண்களும் உரிய நேரத்தில் தொழக் கூடிய நிலையை அமைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் அல்லாஹ்வுடைய அருள் தொடராக உங்களுக்கு கிடைக்கும்.
ரமழான் காலத்தில் பிறரின் குறைகளை துருவி, துருவி ஆராய்ந்து பார்க்காமல் நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொண்டோம். இனி வரும் காலங்களிலும் அந்த நல்ல பழக்கத்தை தொடராக நடைமுறைப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ள முடியும்.
ரமழானில் பாவமான காரியங்களை விட்டும் ஓதுங்கி இருந்தோம். இனிவரும் காலங்களிலும் பாவங்களை விட்டு ஒதுங்கி இருந்து அல்லாஹ்வின் அருளை தொடராக பெற்றுக் கொள்வோம். ரமழானில் எல்லாருடனும் அன்பாக பழகினோம். இனி வரும் காலங்களிலும் பிறருடன் அன்பாக பழகி தொடராக அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம்.
ரமழானில் ஏழைகளுக்கு அதிகமாக ஸதக்காகள் கொடுத்து வந்தோம். இனி வரும் காலங்களிலும் அந்த நல்ல பழக்கத்தை தொடராக செய்து அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம்.
ரமழானில் பிறரை நோன்பு திறக்க வைக்கும் பணிகளில் ஈடுபடுத்தினோம். இனி வரும் காலங்களிலும் பிறரை பசியார வைத்து தொடராக அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம்.
ரமழான் காலத்தில் வசதிபடைத்தவர்கள் தனது சொத்துகளுக்கு உரிய முறையில் ஸகாத்துகளை சரியாக கணக்கு பார்த்து கொடுத்தார்கள். அதே போல ஒவ்வொரு வருடமும் தனது ஸகாத்தை சரியாக கொடுத்து தொடராக அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம்.
ரமழானில் ஒரு மாதம் காலம் நோன்பு பிடித்து பயிற்சி எடுத்தோம். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுன்னத்தான நோன்பை பிடித்து அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வோம். ரமழானில் காலை மாலை திக்ருகளை தொடராக நிறைவேற்றினோம். இனி வரும் காலங்களிலும் காலை மாலை திக்ருகளை நாளாந்தம் சொல்லி அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்வோம்.
ரமழானில் இப்படியான அமல்கள் மூலம் தான் பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் பலவிதமான அல்லாஹ்வின் அருளை நேரடியாக பெற்றுக் கொண்டோம். எங்களது இப்தார் உணவிலும், ஸஹர் உணவிலும் யாருக்கும் எந்த குறைபாடு இல்லாமல் திருப்பதியாக கிடைத்தது. மேலும் நேரத்தில் தாராளமாக பரகத் இருந்தது, மேலும் தொழிலில் எந்த சிரமும் யாருக்கும் இருக்கவில்லை. இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் அல்லாஹ்வின் அருள் காணப்பட்டது என்றால், அது நாம் உரிய நேரத்தில் செய்த ஒவ்வொரு அமல்களுக்காக அல்லாஹ் தந்த பிரத்தியேகமான பரகத்தாகும்.
எனவே ரமழானில் எப்படி உரிய நேரத்தில் அமல்களை செய்து அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொண்டோமோ, அதே போல இனி வரும் காலங்களிலும் தொடராக உரிய நேரத்தில் அமல்களை செய்தால் நிச்சயம் அல்லாஹ்வின் அருள் தொடராக நமக்கு கிடைக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.