அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)
ழுஹருடைய நேரத்தில் ழுஹருடன் அஸரையும், அஸருடைய நேரத்தில் அஸருடன் ழுஹரையும், இவ்வாறே மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் இணைத்து சேர்த்துத் தொழுவதையே இது குறிக்கும். இதனை ‘ஜம்உ’ செய்தல் என்று கூறப்படும்.
‘நிச்சயமாக தொழுகை நம்பிக்கை யாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது.’ (4:103)
தொழுகை என்பது குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய கடமையாகும். அப்படி இருந்தும் ழுஹர், அஸர் மற்றும் மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளை உரிய நேரத்திற்கு முந்தியோ அல்லது பிந்தியோ தொழுவதற்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சுபஹுத் தொழுகையையோ அல்லது அஸருடன் மஃரிபையோ இணைத்தோ அல்லது சுருக்கியோ தொழ முடியாது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். அத்துடன் பயணத்தில் மட்டுமல்லாது வேறு சந்தர்ப் பங்களிலும் ழுஹர் – அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளைச் சேர்த்துத் தொழ முடியும் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
ஒரு நேரத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவது ஆகுமானது என்பதில் அறிஞர்கள் ஏகோபித்த முடிவில் இருந்தாலும் ‘ஜம்உ’வுக்குரிய இடம், முறை என்பவற்றில் முரண்படுகின்றனர்.
01.
அறபாவுடைய நாளில் அரபாவிலும், முஸ்தலிபாவுடைய நாளில் முஸ்தலிபாவிலும் தவிர வேறு நாட்களில், இடங்களில் ஜம்உ செய்ய முடியாது. இந்தக் கருத்தில் இமாம்களான அபூ ஹனீபா, ஹஸன், இப்னு ஸீரீன் மற்றும் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் ஒரு கருத்தும் இந்த அடிப்படையில் அமைந்துள்ளன. இந்தக் கருத்துடைய அறிஞர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
‘நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர் கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது.’ (4:103)
தொழுகை நேரம் குறிக்கப்பட்ட வணக்கம் என்பது முதலாவதான உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். இரு தொழுகையை சேர்த்து அதாவது, உரிய நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ தொழலாம் என்பது ஆஹாதான – குறிப்பிட்ட சிலரால் மாத்திரம் அறிவிக்கப்படும் செய்தி யாகும். குறிப்பிட்ட சிலரால் அறிவிக்கப்படும் செய்திக்காக பலரால் அறிவிக்கப்பட்ட குர்ஆனின் கருத்தை விட்டு விட முடியாது என்பது இத்தரப்பாரின் வாதமாகும்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(வ) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை… இரண்டு தொழுகைகளைத் தவிர! ஒன்று: (முஸ்தலிஃபாவில்) மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுததுளூ இன்னொன்றுளூ ஃபஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிஃபாவிலேயே) தொழுதது.,” (புகாரி: 1682)
அரபா, முஸ்தலிபாவில் சேர்த்துத் தொழப்படும். ஆனால், மினாவில் சுருக்கித் தொழப்படும். சேர்த்துத் தொழப்படமாட்டாது. இதைக் குறிக்குமுகமாகவே இந்தச் செய்தி பேசுகின்றது. சுபஹை அதன் உரிய நேரத்திற்கு முன்னர் தொழுவதென்பது பஜ்ர் உதயமான உடன் தொழுவதைக் குறிக்கும் என அறிஞர்கள் விளக்கப்படுத்தியுள்ளனர். அரபா, முஸ்தலிபா தவிர வேறு இடங்களில் ஜம்உ செய்யக் கூடாது எனக் கூறுவோர் இந்தச் செய்தியை தமக்குரிய ஆதாரமாகக் கொள்கின்றனர்.
02.
ழுஹர்-அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளை இணைத்துத் தொழ முடியும்.
இமாம்களான ஷாபி, அஹ்மத், தவ்ரீ, இஸ்ஹாக், இப்னுல் முன்திர் போன்ற அறிஞர்கள் மற்றும் நபித்தோழர்களில் பலரும் இந்தக் கருத்தில் உள்ளனர். இதுவே சரியான கருத்தாகும். இவர்கள் பின்வரும் ஹதீஸ்களை தமக்குரிய ஆதாரமாகக் கொள்கின்றனர்.
இப்னு உமர்(வ) அறிவித்தார்.’நபி(ச) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்யும்போது மஃரிபையும் இஷாவையும் ஜம்உ செய்வார்கள்.’ (புகாரி: 1106)
இப்னு அப்பாஸ்(வ) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது லுஹர் அஸரையும், மக்ரிப் இஷாவையும் ஜம்உ செய்து தொழுவார்கள்.’ (புகாரி: 1107)
அனஸ் இப்னு மாலிக்(வ) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் பயணத்தின் போது மக்ரிப் இஷாவை ஜம்உ செய்வார்கள்.’ (புகாரி: 1108)
ஸாலிம் அறிவித்தார்: ‘இப்னு உமர்(வ) அவசரமாகப் பயணம் மேற்கொள்ளும் போது மக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவையும் மஃரிபையும் ஜம்உ செய்வார்கள். நபி(ச) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிடுவார்கள். மேலும் மஃரிபுக்கு இகாமத் சொல்லி மூன்று ரக்அத் தொழுது ஸலாம் கொடுப்பார்கள். பெரிய இடைவெளி ஏதுமின்றி இஷாவுக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுப்பார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே எதனையும் தொழ மாட்டார்கள். இஷாவிலிருந்து நள்ளிரவு வரை எதையும் தொழ மாட்டார்கள்.’
(புகாரி: 1109)
அனஸ் இப்னு மாலிக்(வ) அறிவித்தார். ‘நபி(ச) அவர்கள் பயணத்தின் போது மக்ரிப் இஷாவை ஜம்உ செய்வார்கள்.’ (புகாரி: 1110)
பயணத்தின் நேரத்திற்கேற்ப தொழுகையை ‘ஜம்உ தக்தீம்’ – சேர்த்து முற்படுத்தியோ அல்லது ‘ஜம்உ தஃஹீர்’ – சேர்த்து பிற்படுத்தியோ தொழுவார்கள்.
உதாரணமாகளூ சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்னர் பயணத்தை ஆரம்பித்தால் ழுஹரை அஸருடன் சேர்த்து பிற்படுத்தித் தொழுவார்கள். ழுஹர் நேரம் நெருங்கிய பின்னர் பயணத்தை ஆரம்பிப்பதாயின் ழுஹருடன் அஸரை சேர்த்து முற்படுத்தித் தொழுவார்கள். இதையே பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.
அனஸ் இப்னு மாலிக்(வ) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணத்தை மேற்கொண்டால் லுஹரை அஸர் வரை தாமதப் படுத்தி ஜம்உ செய்வார்கள். சூரியன் சாய்ந்த பிறகு புறப்பட்டால் லுஹர் தொழுதுவிட்டுப் புறப்படுவார்கள்.’ (புகாரி: 1111)
இந்த ஹதீஸ்களை நோக்கும் போது பயணத்தில் ழுஹர், அஸர், மஃரிப், இஷா என்பவற்றை சேர்த்துத் தொழுவது ஆகுமானது என்பது தௌ;ளத் தெளிவாக விளங்குகின்றது.
ஜம்உ செய்யக் கூடாது என்ற கருத்தில் உள்ளவர்கள் புதியதொரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். தொழுகையை உரிய நேரத்திலும் தொழ வேண்டும், ஜம்உம் செய்ய வேண்டும் என்றால் தோற்றத்தில் இணைத்துத் தொழுவது போன்று தொழலாம். ஆனால், உரிய நேரத்திலும் தொழ வேண்டும் என்று கருதுகின்றனர்.
உதாரணமாகளூ அஸர் 3.30 மணிக்கு ஆரம்பம் என்றால் ழுஹர் தொழுவதைப் பிற்படுத்தி 3.20 மணிக்கு ழுஹரைத் தொழ வேண்டும். அஸருடைய நேரத்திற்குள் நுழைந்ததும் அஸரைத் தொழ வேண்டும். ழுஹர், ழுஹருடைய இறுதி நேரத்திலும் அஸர், அஸருடைய ஆரம்ப நேரத்திலும் தொழப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு ஜம்உ போல் தென்பட்டாலும் தொழுகை அதற்குரிய நேரத்தில் தொழப்பட்டுள்ளது.
இவர்கள் பெரும்பாலும் ‘ஜம்உ தஃஹீர்’ பிற்படுத்தித் தொழும் முறையைத்தான் சரிகாண்பர். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸ்கள் ழுஹருடைய நேரத்தில் அஸரையும், அஸருடைய நேரத்தில் ழுஹரையும் நபி(ச) அவர்கள் தொழாதிருப்பதை எடுத்துக் காட்டுகின்றது. எனவே, இப்படித் தொழ வேண்டும் என்பது தேவையில்லாமல் நம்மை நாமே அலட்டிக் கொள்வதாக அமையும்.
அடுத்து, பயணத்தில் சேர்த்துத் தொழுவது ஒரு சலுகையாக அனுமதிக்கப் பட்டுள்ளது. இவர்கள் சொன்ன அமைப்பில் தொழுவது, உரிய நேரத்தில் தொழுவதை விட சிரமத்தையும் சங்கடத்தையுமே ஏற்படுத்தும். ழுஹருடைய முடிவு நேரத்தையும் அஸருடைய ஆரம்ப நேரத்தையும் கணித்து அதற்கேற்ப பயணத்தை அமைக்க நேரிடும். இப்படித் தொழுவதை விட ழுஹரை ழுஹர் நேரத்திலும், அஸரை அஸர் நேரத்திலும் வழமை போல் தொழுதுவிட்டுப் போவது இலகுவானதாகும். சலுகை என்ற பெயரில் சங்கடத்தை இஸ்லாம் ஏற்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.
அடுத்து, சொற்பமானவர்களின் அறிவிப்புக்காக அதிகமானவர்கள் அறிவிக்கும் அறிவிப்பை விட்டுவிட முடியாது என்ற இவர்களின் வாதமும் வலுவற்றதாகும்.
தொழுகை நேரம் குறிக்கப்பட்ட வணக்கம் என்ற செய்தியை யாரும் விட்டு விடவில்லை. இதிலும் நேரம் குறிப்பிட்டுத்தான் உள்ளது. ழுஹருடைய நேரத்திற்கு முன்னர் ழுஹரைத் தொழ முடியாது. மஃரிபுடன் அஸரை சேர்த்துத் தொழ முடியாது. இஷாவுடன் ழுஹரைச் சேர்க்க முடியாது! நேரம் குறிக்கப்பட்ட வணக்கமாகவே தொழுகை இங்கும் நோக்கப்படுகின்றது. பொதுவாகக் குறிக்கப்பட்ட நேரத்தில் இங்கு சில விதிவிலக்குகள் கூறப்படுகின்றன. அதுவும் மனிதனால் கூறப்பட்ட விதிவிலக்குகள் அல்ல. தொழு(கை நேரம் குறிக்கப்பட்ட வணக்கம் என்பதைப் போதனை செய்த இறைத்தூதரால் கொடுக்கப்பட்ட விதிவிலக்காகும் இது!
எனவே, பயணத்தில் ழுஹர்-அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளை சேர்த்துத் தொழ அனுமதியுண்டு என்பதே சரியான நிலைப்பாடாகும்.