அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல்
அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
வல்ல அல்லாஹ் நம் எல்லோர் மீதும் அவனுடைய அருளையும், அவனுடைய கருணையையும் சொரிந்தருள்வானாக
நாளுக்கு நாள் சோதனைகள் நம் சமுகத்தை எதிர்நோக்கி வந்துகொண்டே இருக்கின்றது. நமது உயிரினும் மேலான மார்க்க சட்டங்களில் பிறர் தலையிடுகின்ற நிலை உருவாகிவருகிறது. குறிப்பாக நாம் வாழும் இந்த நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றவர்கள் இஸ்லாமிய சமுகத்திற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் நமது சமுகம் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இஸ்லாமிய அடையாளத்தை ஒன்றுபட்டு வெளிப்படுத்திக் காட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த சமூகம் பல்வேறு குழுக்களாக சிதறி சினனா பின்னப் பட்டுக் கிடப்பதிலிருந்து விடுபட்டு ஓர் அணியில் ஒன்று சேர்ந்து ஒத்த குரலில் நம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. யார் நலலவர் யார் கெட்டவர் என்று தீர்ப்பு வழங்குவதிலும், யார் சொர்க்கம் செல்வார் யார் நரகம் செல்வார் என்று சான்று வழக்குவ்திலும் தங்கள் நேரத்தைப் பாழாக்கிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமாக பணிகளைச் செய்வதில் முனைப்புக் காட்டவேண்டும்.
நல்லோரையும் கெட்டவர்களையும் பிரித்துக்காட்டும் மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான் என்பதில் உறுதியான நம்பிக்கையுடைய நாம், இந்த அற்ப உலக வாழ்க்கையில் மனிதத் தன்மையோடு முஸ்லிமாக வாழ முயற்சி செய்ய வேண்டும். மற்ற மனிதர்களோடு அன்போடும் பண்போடும் பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய சமுகத்தைச் சார்ந்தவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் எவரையும் கண்மூடித்தனமாக விமர்சிப்பதிலும், தரக்குறைவாகப் பேசுவதிலும் ஈடுபடுவதை விட்டுவிட்டு சமுதாயம் எதிர் கொண்டுள்ள சவால்களை கூட்டாக சேர்ந்து முறியடிக்கின்ற விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். சமூகம் சிதறுண்டு சின்னாபின்னமாக சீரழிய வேண்டும் என கங்கனம் கட்டி காத்திருக்கும் எதிரிகளுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது “நிச்சயமாக அல்லாஹ்வின் கரம் சமூகக் கூட்டமைப்பில் இருக்கிறது என்ற இறைத்தூதரின் நற்செய்தியை ஏற்று செயல்படுவோமாக !
இப்படிக்கு உங்கள் நலம் நாடும்
S.கமாலுத்தீன் மதனி
நன்றி:- அல்-ஜன்னத் மாத இதழ் – (ஜூலை2017)