மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்
இந்த உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் ஏற்ப்படுத்தப்பட்டவுடன் மக்களெல்லாம் கப்ருக்குள்லிருந்து வேக, வேகமாக வெளியேறுவார்கள். யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாத அந்த நாள், எனக்கு என்ன நடக்குமோ என்று அச்சம் நிறைந்த பயங்கரமான அந்த மறுமை நாள். அந்த நாளில் சிலரால் பாவிகளுக்கு பரிந்துரை(ஷபாஅத்) மூலம் ஈடேற்றம் கிடைக்கும். பாவிகளுக்கு எந்த, எந்த அடிப்படையில் (ஷபாஅத்) பரிந்துரை கிடைக்கும் என்பதை தொடர்ந்து விளங்கிக் கொள்வோம்.
மலக்குமார்களின் ஷபாஅத்…
மறுமை நாளில் அல்லாஹ்வின் விசேச படைப்புகளான குறிப்பிட்ட மலக்குமார்களுக்கு ஷபாஅத் செய்யும் அனுமதியை அல்லாஹ் கொடுக்கிறான் அந்த மலக்குகளின் ஷபாஅத்தின் மூலம் ஒரு தொகை பாவிகளுக்கு சுவனம் செல்லும் பாக்கியம் கிடைத்து விடும்.
“அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது” -53:26
இந்த குர்ஆன் வசனம் மூலம் அந்த பயங்கரமான மறுமை நாளில் அல்லாஹ் தேர்ந்து எடுக்கப்படும் மலக்குமார்களால் ஒரு தொகை பாவிகள் ஈடேற்றம் அடைவார்கள். அல்ஹம்து லில்லாஹ்!
ஷஹீதின் ஷபாஅத்…
இந்த உலகில் அல்லாஹ்விற்காக போராட்டகளத்தில் தன்னை ஈடுபடுத்தி அந்த போராட்ட களத்தில் தன் உயிரையே அர்ப்பணித்த போராளிகளின் (ஷஹீதுகளின்) ஷபாஅதை பற்றி நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள். (மறுமை நாளில்) தன் குடும்ப அங்கத்தவர்களில் எழுபது நபர்களுக்கு ஒரு ஷஹீதின் ஷபாஅத் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
அல்ஹம்து லில்லாஹ் !
நல்லடியார்களின் ஷபாஅத்…
இந்த உலகில் அல்லாஹ்விற்கும், நபியவர்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த குறிப்பிட்ட நல்லடியார்களுக்கு அந்த மறுமை நாளில் பாவிகளுக்காக வேண்டி ஷபாஅத் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் கொடுக்கிறான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
“அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.” -2:255
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் இவ்வாறாக இருந்தோம்” (எனக் கூறுவர்). ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. – 74:42…..48
ஷபாஅத் செய்யும் நல்லடியார்கள் யார் என்பதை அல்லாஹ் மட்டும் தான் அறிவான். அதையும் மறுமை நாளில் தான் அல்லாஹ் அறிவிப்பான். அதே நேரம் இன்ன, இன்ன நல்லடியார்கள் ஷபாஅத் செய்வார்கள். இன்ன, இன்ன அவ்லியாக்கள் ஷபாஅத் செய்வார்கள். இன்ன, இன்ன குத்பு நாயகமவர்கள் ஷபாஅத் செய்வார்கள் என்று சிலர் தவறாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இது குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் நேரடியான எதிர் கருத்தாகும். நபியவர்களே என்க்கு அந்த இடம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய சொல்கிறார்கள் என்றால் இவர்கள் குறிப்பிடும்
அடியார்களைப் பற்றி நிதானமாக சிந்தியுங்கள்.
நபியவர்களின் ஷபாஅத்…
மறுமை நாளில் நபியவர்களின் ஷபாஅதின் மூலம் ஒரு தொகை பாவிகள் ஈடேற்றம் அடைவார்கள் அவர்கள் யார் என்பதை கவனியுங்கள்.
மேலும்; “தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும் ; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ் விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) (நூல்: முஸ்லிம் 628)இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி 611)மேலும் (பாங்கு) சொல்வதைக் கேட்ட பின், “பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!” என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (புகாரி 614)
பாங்கு துஆ என்பது நபியவர்களுக்காக நாம் செய்யும் பிரார்த்தனையாகும். அந்த பிரார்த்தனையின் நோக்கம் மறுமை நாளில் அல்லாஹ் ஒரு அடியாருக்கு ஷபாஅத் செய்யக்கூடிய இடத்தை கொடுக்க இருக்கிறான் .அந்த இடம் நபியவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பாங்கு துஆவை ஓதும் படி நமக்கு வழிகாட்டுகிறார்கள். அப்படி அந்த பாங்கு துஆவை ஓதினால் மறுமை நாளில் நபியவர்களின் பிராத்தைனை நமக்கு கிடைத்து விடும். அல்ஹம்து லில்லாஹ் !
நபியவர்களின் ஷபாஅத் யாருக்கு …?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்துவிட்டனர்” அல்லது “ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப் பிரார்த்தனை உண்டு; அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர்.” அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்யவைத்துள்ளேன். என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6305)
இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி
படைத்த மனிதர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘அபூ
ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து – தூய்மையான எண்ணத்துடன் ‘வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்’ என்று கூறினார்கள்’ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி-99)
இணை வைக்காத நிலையில் மனிதர் என்ற அடிப்படையில் தவறுகள் குற்றங்கள் செய்த பாவிகளுக்காக நபியவர்களின் பரிந்துரை கிடைத்து விடும். அல்ஹம்துலில்லாஹ் !
அல்லாஹ்வின் ஷபாஅத் (பரிந்துரை)
பாவிகளை நரகத்திற்கு போட்ட பிறகு இறுதியாக அல்லாஹ்வின் ஷபாஅத்தை பின் வரும் ஹதீஸ் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
“இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தம் தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் ‘(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது’ என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். எனவே, சொர்க்க வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள். அதற்கு ‘ஜீவ நீர்’ (‘மாஉல் ஹயாத்’) என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இரண்டு மருங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள். பாறையில் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும். ஆக, இவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களின் கழுத்தில் (நரகத்திலிரந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), ‘இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான்’ என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு’ என்று (நற்செய்தி) சொல்லப்படும். (நூல்: புகாரி-7439)
அல்லாஹ்வின் பரிந்துரையுடன் இறுதி பரிந்துரை முடிவடைந்து விடும். மறுமை நாளில் குடும்பத்தோடு சுவனம் செல்லும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்குவானாக !
மறுமை நாளில் மூன்று பிரிவினர் பரிந்துரை செய்வார்கள் அவர்கள் யார் யார்?