மறுமையில் பாவிகளின் நிலை ?
சென்ற முதலாவது தொடரில் உலகம் அழியும் போது இந்த உலகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும், எடுத்துக் காட்டியிருந்தேன். இப்போது உலகம் மையானமாக காட்சி தரும் வேலையில் சூர் (எக்காளம்) ஊதப்படும். அப்போது மீண்டும் விசாரணைக்காக மண்ணறையிலிருந்து மக்கள் எழுப்பப்படும் காட்சிகளை குர்ஆனும் ஹதீஸூம் நமக்கு காட்சிப் படுத்துவதை தொடர்ந்து அவதானிப்போம்.
சூர் ஊதப்படல்…
இந்த உலகத்தை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன் ஒரு சூரும், அழிக்கப்பட்ட மக்களை மீண்டும் எழுப்புவதற்கு மற்றொரு சூரும் ஊதப்படும். இதை பின்வரும் ஹதீஸ் நமக்கு தெளிவுப் படுத்துவதை காணலாம்.
“அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்.
‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு (ஸூர்) எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) ‘(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?’ என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), ‘(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்’ என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘நாற்பது மாதங்களா?’ என்று கேட்டனர். அதற்கும் ‘நான் விலகிக் கொள்கிறேன்’ என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘ஆண்டுகள் நாற்பதா?’ என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று கூறினார்கள். பின்னர், (மேலிருந்து) வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்’ என்று மேலும் கூறினார்கள். (புகாரி 4935)
இந்த ஹதீஸின் மூலம் சில செய்திகளை நபியவர்கள் நமக்கு நினைவுப் படுத்துகிறார்கள். முதலாவது இரண்டு சூர்கள் ஊதப்படும். அதில் ஒன்று உலகத்தில் உள்ள அனைத்தும் அழிக்கப் படுவதற்காகவும், மற்றொன்று அழிக்கப்பட்ட படைப்புகளை எழுப்பி விசாரணை செய்வதற்காகவாகும்.
இரண்டாவது உலகம் அழிக்கப்பட்டு நாட்பது நாட்கள்,அல்லது நாட்பது மாதங்கள், அல்லது நாட்பது வருடங்கள் கழித்து இரண்டாவது சூர் ஊதப்படுவதாகும். மூன்றாவது வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான் அதாவது வானங்கள் தூள், தூளாக ஆக்கப்படிருந்தாலும், மேலிருந்து தண்ணீரை அல்லாஹ் இறக்குவான். நான்காவது ஒரு மனிதனை அடக்கிய பின் குறிப்பிட்ட காலத்தோடு அவனது உடல் மண்ணோடு மண்ணாக உக்கி போய் ஒன்றும் இருக்காது. ஆனால் உள்வால் என்று சொல்லக் கூடிய முதுகந்தண்டின் அடி எலும்பை தவிர, அந்த எலும்பு அப்படியே இருக்கும். அந்த எலும்பை வைத்தே அல்லாஹ் மனிதர்களை எழுப்புவான்.
பாவிகள் எழுப்பும் விதம்…
பாவிகளை அல்லாஹ் எழுப்பி, அவர்களை தலை கீழாக விசாரணைக்கு எடுப்பான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.
“அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.(17- 97)
பாவிகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அல்லாஹ் மிக கடுமையாக சொல்லிக் காட்டுகிறான். மேலும் சூர் ஊதப்பட்டவுடன் கப்ருக்குள் இருந்து வெளி வரும் அமைப்பை பின் வரும் குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகிறது.
“ எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்). ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள். அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.(36- 51)
“மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். (36:52)
புதிய பூமி…
“சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்”
புஹாரி 6521, 6520
“அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்… (அல்குர்ஆன் 14.48)
மறுமையின் அமளி, துமளி…
மறுமை நாளில் மக்கள் பித்துப் பிடித்தவர்களைப் போல அங்குமிங்கும் பதறிக்கொண்டு ஓடித்திரிவார்கள், யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாத நிலையில், எனக்கு என்ன நடக்குமோ என்று நடுங்க கூடிய காட்சியை அல்லாஹ் குர்ஆனின் மூலம் நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.
“அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும் – (80:35)
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும் (80:36)
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- (80:37)
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.(80-34)
மேலும் “எவ்வித மறுப்புமின்றி அந்நாளில் அழைப்பாளரைப் பின் தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம், ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்! (20:108)
நிர்வாணிகளாக எழுப்பப் படுவார்கள்…
“மறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்படும் போது, முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம்(அலை)அவர்கள்”
(இப்னு அப்பாஸ்(ரலி)– (புகாரி 3349)
மேலும்
”நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.
புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).