சென்ற இரண்டு தொடர்களில் உலகம் அழியும் நிலைப்பற்றியும், மறுமையில் நடக்கும் சில காட்சிகளையும், உங்கள் சிந்தனைக்கு முன் வைத்தேன். தொடர்ந்தும் மறுமையில் நடக்க இருக்கும் கள நிலவரங்களை கவனிப்போம்.
மறுமையில் நபிமார்களின் நிலை
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். ‘நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்’ என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் – அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, ‘நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள்.
உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) ‘உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்’ என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், ‘குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை’ என்று சொல்வேன்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) | புகாரி 4476
மேற்ச் சென்ற இந்த ஹதீஸின் மூலமாக அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்களான நபிமார்களே எனக்கு என்ன நடக்குமோ, அல்லாஹ் எனக்கு என்ன தீர்பளிக்க போகிறான் என்று கவலையோடு நடுங்கி நிற்கும் நாள் அந்த மறுமை நாளாகும். நபிமார்களே தனது வாழ் நாளில் நடந்த ஓரிரு தவறுகளுக்காக பயப்படுகிறார்கள் என்றால், பாவத்திலே அதிகமாக மூழ்கி இருக்க கூடிய நாம் எந்த அளவு அந்த மறுமை நாளை நினைத்து தன்னை மறுமைக்காக எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். நானும் ஒரு நாள் மரணிக்க கூடியவன், திடீரென்று எனக்கு மரணம் வந்து விட்டது என்றால், மறுமையில் எனது நிலை என்னவாகுமோ என்று பயந்த நிலையில் அமல்களை சரியாக நிறைவாக செய்யக் கூடிய சந்தர்ப்பங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மறுமையில் மக்களின் நிலை
“ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது; அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும்; தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்; அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.” (80:33-37)
உலகில் ஒரு கஷ்டம் என்றால் உறவுகள், நண்பர்கள், மாறி, மாறி உதவிகள் செய்வார்கள். ஆனால் மறுமை நாளில் எல்லோரும் யா நப்fசி, யா நப்fசி என்று தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பார்கள்.
மேலும் “அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”(26:88)
மறுமை நாளில் அவரவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அதனால் உலகில் வாழும் போது மறுமையின் நிலைமையை கருத்திக் கொண்டு அமல்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
மறுமை நாளில் ஈஸா நபியின் நிலை
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டு, பிறகு, ‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்’ என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். ‘இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்’ என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, ‘(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே இவர்களைக் கண்காணிப்பவனாகிவிட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடிமைகள் தாம். (அதற்கும் உனக்கும் முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லோனும் விவேகம் மிக்கோனும். ஆவாய்’ (திருக்குர்ஆன் 05: 117, 118) என்று சொல்வேன்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 3447)
எனவே மரணத்தை முன்னோக்கிக் கொண்டிருக்க கூடிய நாம் மறுமைக்காக இவ்வுலகின் வாழ்க்கையை அல்லாஹ்விற்கு பொருத்தமாக அமைத்துக் கொள்வோமாக!