எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் நின்று நிலவட்டுமாக!
பெண்கள் பற்றி இன்று அதிகம் பேசப்படுகின்றது. இது பெண் மீது கொண்ட பற்றினாலோ அல்லது பாசத்தினாலோ உருவான நிலை அல்ல. பெண் அரசியல், பொருளாதாரத் துறையில் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறிய பின்னர்தான், அவளது உரிமைப் போராட்டங்களின் பின் ஆண்வர்க்கம் வேண்டா வெறுப்புடன் சில உரிமைகளைக் கொடுத்தது.
மற்றும் சிலர் பெண்ணுரிமை பற்றிப் பேசினர். அவர்கள் பெண்களை அரைகுறை ஆடையுடன் வீதிக்குக் கொண்டு வர வேண்டும், சுதந்திரம் என்ற பெயரில் அவளது கற்பை சு+றையாட வேண்டுமென்ற வக்கிர புத்தியில் பெண்ணுரிமை பேசினர்.
இஸ்லாமும் பெண்ணுரிமை பற்றிப் பேசியது. பெண்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் பெண்கள் போராடாமலேயே இஸ்லாம் பெண்ணின் இயல்புக்கும் குடும்ப வாழ்வுக்கும் பங்கமில்லாத வகையில் அவளுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தது. அதே வேளை, போலிச் சுதந்திரத்தின் பெயரில் அவளது பெண்மை நசுக்கப்படுவதற்கு இஸ்லாம் இடமளிக்கவில்லை.
அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், அரைகுறை ஆடையுடன் வீட்டை விட்டும் வெளியேறுதல், தகுந்த ஆண் துணையில்லாது தூரப் பயணங்களை மேற்கொள்ளுதல் என பெண்ணுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பல விடயங்களை இஸ்லாம் தடுத்தது. இது பெண்ணை அடிமைப்படுத்தும் சட்டங்கள் அல்ல. பெண்ணினத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான சட்டங்கள் என்பதை அன்றாடம் நிகழ்ந்து வரும் பாலியல் பலாத்காரங்கள், படுகொலைகள் என்பன உணர்த்தி வருகின்றன.
இதே வேளை பெண்ணின் ஆளுமை வளர்ச்சிக்கான பல வழிகாட்டல்களையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டல்களில் சில இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளது. நல்ல பண்பாடும், பழக்கவழக்கமும் உள்ள பெண்களால் எதிர்காலச் சந்ததிகள் உரிய முறையில் வழிநடாத்தப்பட்டால் நல்ல சமூக மாற்றத்தைக் காணலாம். இந்த அடிப்படையில் இந்நூலின் இறுதிப் பகுதியில் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு இஸ்;லாம் காட்டும் வழிமுறைகள் சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது எனது 26-ஆவது நூலாகும். வழமை போன்று எனது இந்நூலையும் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா வெளியிடுகின்றது. அதன் அமீர் அஷ்ஷெய்க் N.P.M. அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் கௌரவ செயலாளர் A.L கலீலுர் ரஹ்மான் MA அவர்களுக்கும், கணனி வடிவமைத்துத் தந்த சகோதரர் M.D.M. அஸ்லம் அவர்களுக்கும், மொழி வழுக்களைச் சீர்செய்து தந்த A. L.அப்துஸ்ஸலாம் ஆசிரியர் மற்றும் உண்மை உதயம் மாத இதழின் துணை ஆசிரியர் S. ஹுஸ்னி முஹம்மத் ஸலபி அவர்களுக்கும் இந்நூலைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூல் மூலம் சத்திய இஸ்லாத்தை எமது சகோதரர்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
இவன்,
SHM இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர், உண்மை உதயம்
இல. 88/2, பாடசாலை வீதி, பரகஹதெனிய
தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்…
மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…