ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறுச் சம்பவத்தின் மூலம் ‘பிக்ஹ்” சட்ட முடிவுகளை எடுக்கலாம் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில் இச்சம்பவத்தின் மூலம் பெறவேண்டிய சில பண்பாட்டுப் பயிற்சிகளைப் பார்ப்போம்.
1. கனி இருக்கக் காய் கவர்தல்:
கனி இருக்க காய் கவர்தல் நன்றன்று என்பார்கள். மரத்தில் நல்ல கனி இருக்கும் போது எதற்காக காயைப் பறிக்க வேண்டும்? இதே போன்றுதான் இனிய சொல் இருக்கும் போது கடுமையான, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
ஆயிஷா(ரலி) அவர்கள் தனது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றியது பற்றிக் கூறும் போது எனது தேவையை நிறைவு செய்த போது என மூடலாகக் கூறுகின்றார்கள். அருவருப்பான விடயங்களை மூடலாகவும் நாகரிகமாகவும் முன்வைக்க வேண்டும். அசிங்கமான அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்க்க வேண்டும். நபியவர்களும் நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விரும்பியுள்ளார்கள். எமது குழந்தைகளை சின்ன வயதில் இருந்தே இதற்கு நாம் பழக்க வேண்டும்.
02. தவறு விட்டவர்கள் மீது தப்பெண்ணம் கொள்ளாதிருத்தல்:
மனிதன் இயல்பில் தவறு விடக் கூடியவன். அடுத்தவர் விடும் தவறுகளுக்கும் ஏதாவது காரண காரியங்களைக் கற்பித்து அவர்களை நியாயம் காண முற்பட வேண்டும். நாம் நமது தவறுகளுக்கும் அடுத்தவனைக் காரணம் காட்டி தப்பித்துவிடும் மனநிலையில் வாழ்ந்து வருகின்றோம். ஆயிஷா(ரலி) அவர்களின் பல்லக்கை ஒட்டகத்தில் ஏற்றி வைப்பவர்கள் உள்ளே ஆயிஷா(ரலி) அவர்கள் இல்லை என்பதை அறியாமல் பல்லக்கை எடுத்து வைத்து விட்டார்கள்.
இதை வைத்து ஆயிஷா(ரலி) அவர்கள் அவர்களைக் குறை காணவில்லை. அந்த நாலு பேருக்கும் மூளை இல்லையா? உள்ளே ஆள் இருக்கிறாரா? இல்லையா? என்று தூக்கும் போது வித்தியாசம் விளங்காதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் தான் சின்னப் பிள்ளை, அப்போது நாம் மெலிந்திருந்தோம். அதனால் பல பேர் சேர்ந்து தூக்கும் போது பாரத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது என அவர்களின் தவறுக்கான காரணத்தைக் கற்பித்து அவர்கள் மீது தப்பெண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றார்கள். இது ஒரு நல்ல பண்பாடாகும்.
வீட்டில் கணவன் தவறு செய்யும் போது தனது தவறுக்கு மனைவியின் இந்தச் செயல்தான் காரணம் என கணவனும் இவ்வாறே மனைவியும் பேசுவதுதான் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறே மனைவியும் நடந்து கொள்கின்றாள். நிர்வாகிகளும் இப்படியே நடந்து கொள்கின்றனர். இது மாற வேண்டிய வழிமுறையாகும்.
03. அந்நியர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு:
அந்நியர்கள் என்றால் மாற்று மதத்தினர் என்பது அர்த்தம் அல்ல. மஹ்ரம் இல்லாத உறவுடையவர்களுடன் நடந்து கொள்ளும் உயரிய ஒழுக்க முறை இங்கே கற்பிக்கப்படுகின்றது.
ஸப்வான் இப்னு முஅத்தல்(வ) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களைக் கண்ட போது இருவரும் பேசவில்லை. அவர் சத்தமாக இன்னாலில்லாஹ் என்றார். இது ஒன்றே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. என்ன நடந்தது? எப்படி ஆனது? இப்போது என்ன செய்யலாம் என்று மசு+ரா நடத்தவில்லை.
அவர் ஒட்டகத்தைப் படுக்கவைத்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் ஏறியதும் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்து சென்றார். ஆயிஷா(ரலி) அவர்களும் அவரைக் கண்டதும் முகத்தை மூடிக் கொண்டார்கள். அவர்களும் பேச்சுக் கொடுக்கவில்லை. தேவையோ அவசியமோ இல்லாமல் அந்நிய ஆண்-பெண் உரையாடல்கள் நீடிப்பதும் சமூக வலைத்தளங்களில் தொடர்புகளை மேற்கொள்வதும் தேவையற்ற பிரச்சினைகளையும் பித்னாக்களையும் ஏற்படுத்தும் இக்காலகட்டத்தில் இது ஒரு முக்கியமான பண்பாட்டுப் பயிற்சியாகும்.
04. கடைசியில் கண்காணித்தல்:
நபி(ச) அவர்கள் பயணங்கள் மேற்கொண்டு ஓரிடத்தில் தங்கினால் அந்த இடத்தில் இருந்து செல்லும் போது இறுதியில் ஏதேனும் விடுபட்டுள்ளதா? எனப் பார்ப்பதற்காக வேண்டி ஒருவரை நியமிப்பார்கள். இது ஒரு நல்ல வழிகாட்டலாகும்.
வீட்டிலிருந்து வெளியேறும் போது வீட்டுக் கதவுகள் முறையாக மூடப்பட்டுள்ளதா? மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதா? தேவையான ஏதேனும் ஒரு பொருள் விடுபட்டுள்ளதா? எனப் பார்க்க ஒருவரைப் பொறுப்பாக்க வேண்டும். சில வேளை பயணத்திற்குத் தயாராகி, பயணப் பொதிகளை வாகனத்தில் ஏற்றாமல் இடைவழியில் திரும்பி வரும் நிலை ஏற்படுகின்றது.
‘நீ எடுத்திருப்பாய்;’ என நான் நினைத்தேன் என ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இதற்குப் பொறுப்பாக ஒருவரை நியமிப்பது தேவையற்ற பிரச்சினைகளையும் சங்கடங்களையும் தவிர்ப்பதற்கு உதவும்.
05. முஸ்லிமைப் பாதுகாத்தல்:
மிஸ்தஹ்(வ) அவர்களது தாய் தனது மகன் மிஸ்தஹைத் திட்டினார்கள். அவர் அவருடைய மகனைத் திட்டுகின்றார். இதில் நமக்கென்ன வந்துவிடப் போகின்றது என்று ஆயிஷா(ரலி) அவர்கள் நினைக்கவில்லை. ஒரு பத்ர் ஸஹாபியைத் திட்டுகின்றீர்களா? என எதிர்த்துக் கேட்கின்றார்கள். ஒரு முஸ்லிமை அடுத்தவர் திட்டினாலோ குறை கூறினாலோ ஏன் அப்படிச் செய்கின்றீர்கள் என அடுத்தவர் கேட்க வேண்டும். அப்படிக் கேட்கும் போது இந்தப் பழக்கம் குறையும். அதை விட்டு விட்டு ஒத்து ஊதுவது போல் செயற்படக் கூடாது.
06. சோதனைகளின் போது:
எந்தமாதிரியான சோதனைகள் ஏற்பட்டாலும் இன்னாலிலாஹ் எனக் கூற வேண்டும். மரணச் செய்தியைக் கேட்டால்தான் இன்னாலில்லாஹ் கூற வேண்டும் என்பது தவறான எண்ணமாகும். ஆயிஷா(ரலி) அவர்களைத் தனிமையில் கண்டதும் சப்வான்(வ) அவர்கள் ‘இன்னாலிலாஹ்….’ கூறியுள்ளதிலிருந்து இதை விளங்கலாம்.
07. பொறுமை:
சோதனைகளின் போது பொறுமை கொள்வது போற்றத்தக்க பண்பாகும். ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு மாத காலம் சோதிக்கப்பட்டார்கள். அழுது கண்ணீர் வற்றிவிட்டது என்ற நிலையிலும் அவர்கள் பொறுமையைக் கைவிடவில்லை.
பொறுமையே அழகானது. நீங்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன் என்பதே அவர்களது பதிலாக இருந்தது. எனவே, சோதனையின் போது பொறுமையும் அல்லாஹ்விடம் உதவி தேடும் உயரிய பண்பும் அவசியமாகும்.
08. ஆலோசனை:
பிரச்சினைகள் வரும் போது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அறிவும் அனுபவமும் உள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவது ஏற்றமானதாகும்.
இவ்வாறே இந்த சம்பவம் பல்வேறுபட்ட அகீதா விடயங்களையும் தெளிவுபடுத்துகின்றது. நபி(ச) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை, பத்ர் ஸஹாபாக்கள் தனிச்சிறப்புமிக்கவர்கள் போன்ற அகீதா அடிப்படைகளையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து படிப்பினையாகப் பெறலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் எமது வாழ்வை அமைத்துக் கொள்ள அருள் புரிவானாக! சந்திப்பார்கள்!