சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் “அஹ்லே ஹிந்த்” (தவ்ஹீத்) பள்ளி உள்ளது. நான் அங்கு குத்பாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
குத்பா உரை முடிந்ததும் ஒரு பெரியவர் வந்து ஸலாம் கூறி “நீங்கள் கொழும்பா?” என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் முன்பு கொழும்பில் இருந்து அப்துல் ஹமீத் பக்ரி என்பவர் இங்கு வருவார். உங்கள் குத்பாவைக் கேட்கும் போது அவரின் நினைவு வந்தது என்றார்.
அப்துல் ஹமீத் பக்ரியின் மாணவரின் மாணவன் நான் என என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பெரியவர் ரொம்பவே நெருக்கமாகி விட்டார். நான் குத்பா ஓதிய பள்ளியில் முஅத்தினாகப் பணி புரிபவரின் தந்தைதான் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர் பக்ரி(ரஹ்) அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசினார். ரெம்பவே துணிச்சலானவர். தயங்காமல் தனது கருத்துக்களைச் சொல்பவர்.
அவர் வீதியில் செல்லும் போது கடைகளில் பாட்டுப் போடப்பட்டிருந்தால் இது ஹராம் என்று நேரடியாகச் சென்று சொல்வார் கடைகளில் பாட்டுப் போடும் போது எம்மைப் போய் நிறுத்தும் படி கூறச் சொல்வார் வேண்டாம் பாய் சண்டைக்கு வருவான் என்று சொன்னால் போய்ச் சொல்லு. அடித்தால் அடியை வாங்கு என்பார். அதன் பின் அவர் வீதியில் வரும் போது கடைக்காரர்கள் பாட்டுப் போட்டிருந்தால் நிறுத்திவிடுவார்கள். “பாய் வர்ரார்டா, பாட்ட நிறுத்து. இல்லண்டா திட்டுவாரு” என கடை முதலாளி கூறுவர் என அந்தப் பெரியவர் கூறினார். அண்மையில் வலைத்தளங்கள் மூலமாக அவர் மரணித்துவிட்டதாக அறிந்தேன்.
இந்த உரையாடல் மூலம் அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களின் துணிவு, தமிழகத்தில் அவரது தஃவாத் தாக்கம், அவருக்கிருந்த செல்வாக்கு என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது. அத்துடன் எனது உரையைக் கேட்டதும் அவருக்கு அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) நினைவு வந்தது எனும் போது எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரால் உருவாக்கப்பட்ட தாருத் தவ்ஹீத் கலாபீடத்தில் கற்றவன், அவரால் ஸ்தாபிக்கப்பட்ட ஜமாஅத்தில் பணி புரிபவன், அவரால் ஆரம்பிக்கப்பட்ட உண்மை உதயம் இஸ்லாமிய இதழில் பணி புரிபவன் என்ற வகையில் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
இவ்வாறுதான் 1999 இல் குவைட் நாட்டிற்கு பயான் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பயான் முடிந்த பின்னர் ஒரு வெளிநாட்டுச் சகோதரர் தனியாகச் சந்தித்து உங்கள் பயானைக் கேட்கும் போது அபூ பவ்ஸான் (மீரான் மவ்லவி) என்று ஒரு இலங்கை மவ்லவி இருந்தார். அவரது நினைவுதான் வந்தது. இலங்கை உலமாக்கள் பயான் செய்வார்கள். அது முழுமையாக விளங்காது. ஆனால், அபூ பவ்ஸான் மவ்லவியின் பயான் புரியும் படி இருக்கும் என்று கூறினார். அப்போது அபூ பவ்ஸான் (மீரான் மவ்லவி) அவர்கள் எனது ஆசிரியர் என்று கூறிய போது அவர் மகிழ்வுற்றார்.
எம்மை உருவாக்கியவர்களின் தாக்கம் எம்மில் இருப்பது இயல்புதானே!
மீரான் மௌலவியின்(அபூ பவ்ஸானின் ) அன்பு மகள் சபிய்யா பின்த் மீரான் நான்
உஸ்தாத் அவர்களின் பகிர்வை வாசித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.