Featured Posts

நரகத்தில் தற்கொலையாளிகள் [நரகத்தில் சில காட்சிகள் – 5]

நரகத்தில் நடக்கும் காட்சிகளை தொடராக உங்கள் சிந்தனைக்கு முன் வைத்து வருகிறேன். இது வரைக்கும் நான்கு பகுதிகளில் நரகில் நடக்கும் கொடூரமான தண்டனைகளை பார்த்தோம். தொடர்ந்தும் சில காட்சிகளை காண்போம்.

நரகம் பேசும்…
பாவிகளை நரகில் போட்டுக் கொண்டிருக்கும் போது இன்னும் பாவிகள் இருக்கிறார்களா ? இன்னும் இருக்கிறார்களா ? என்று நரகம் கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம்.

முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார்
நரகத்திடம் “உனக்கு வயிறு நிரம்பிவிட்டதா?” என்று கேட்கப்படும். அது, “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தன்னுடைய பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது “போதும்! போதும்!” என்று கூறும். (புகாரி 4849)

நரகமும், சுவர்க்கமும், தர்க்கம்…
நரகத்திற்குரியவர்கள் யார், சுவர்க்கத்திற்குரியவர்கள் யார் என்று நரகமும், சுவர்க்கமும், மாறி, மாறி பேசிக்கொள்வதை பின் வரும் ஹதீஸில் கவனிக்கலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், ‘பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்’ என்று சொன்னது. சொர்க்கம், ‘எனக்கு என்ன நேர்ந்தோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்’ என்று கூறியது.
அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்’ என்று கூறினான். நரகத்திடம் ‘நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்’ என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘போதும்! போதும்!’ என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான். (புகாரி 4850)

நரகத்தில் தற்கொலையாளிகள்…
உலகில் வாழும் போது வாழ்க்கையில் ஏற்ப்பட்ட ஏதோ ஒரு கஸ்டத்திற்காக யார் தற்கொலை செய்து கொள்கிறாறோ அவர் மறுமை நாளில் நரகில் வேதனைப் படுத்தப் படுவார்.

“ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். (கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள். (புகாரி 6493)

மேலும் “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி 5778)

மேலும் “இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆம்விடுகிறார் எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். (புகாரி 6105)

கீழாடையினால் நரகம்…
ஆண்கள் தன் கீழாடையை பெருமையுடன் கரண்டைக்கு கீழாக அணிந்தால் அவர் நரகில் வேதனை செய்யப் படுவார். அதனால் எனக்கு பெருமை இல்லை என்று கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிய முடியாது . அதுவும் ஒருவிதமான பெருமையாகும்.ஓரிரு நபித்தோழர்கள் கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிந்த நேரத்தில் எவரும் எனக்கு பெருமை இல்லை என்று கூறவில்லை. அடுத்தது நபியவர்கள் கரண்டை காலுக்கு மேல் அணிவதை தான் தன் தோழர்களுக்கு வழி காட்டியுள்ளார்கள். எனவே நபி வழியே நம் வழி என்றால் ஆண்கள் ஆடை விடயத்திலும் நபி வழியை சரியாக பின்பற்ற வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்’ நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்’ என்று கூறினார்கள் (புகாரி 5784)

மேலும் “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 5788)

மேலும் “நபி(ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 5789)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *