நரகத்திற்குள் பலவித தண்டனைகள்
சென்ற இரண்டு தொடர்களில் நரகத்தின் சில பயங்கரமான காட்சிகளையும் மற்றும் நரகத்தின் வேதனையை எந்த, எந்த, பாவத்திற்காக தண்டனையாக அனுபவிக்கிறார்கள் என்பதை பார்த்தோம்.
இந்த தொடரில் நரகத்திற்குள் பாவிகளுக்கு கிடைக்கும் அதி பயங்கர வேதனைகளை கவனிப்போம்.
ஆடை…
இந்த உலகத்தில் மானத்தை மறைக்க வித,விதமான ஆடைகளை மக்கள் அணிகிறார்கள். அதே நேரம் அல்லாஹ்வுக்கு மாறு செய்த பாவியாக இருந்து அவன் நரகத்திற்கு உரியவனாக தீர்ப்பளிக்கப்பட்டால், நரகத்திற்குள் பலவிதமான நரகத்தின் வேதனைகளை அனுபவிப்பான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனங்கள் நமக்கு எச்சரிப்பதை காணலாம்.
நரகத்தில் பாவிகளுக்கு ஆடை வழங்கப்படும். எப்படியான ஆடை என்றால் நெருப்பில் உண்டான ஆடையை அல்லாஹ் கொடுத்து வேதனையை கடுமையாக்குகிறான்.
“(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். -22:19
சுடு நீர்…
உலகில் தாகிக்கும் போதெல்லாம் தேவையான அளவு தண்ணீரை குடிக்கிறோம். அதே நேரம் நரகத்தில் பாவிகள் வேதனையை அனுபவித்துக் காண்டு தண்ணீர்,தண்ணீர் என்று கூக்குரல் இடும் போது, அந்த பாவிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்படும் எப்படிப்பட்ட தண்ணீர் என்றால் கடுமையான சூடேற்றப்பட்ட கொதி நீரை பானமாக கொடுக்கப்படும் என்பதை பின் வரும் குர்ஆன் வசனங்கள் உறுதி படுத்துவதோடு, அந்த தண்ணீரை குடித்தால் குடல்கள் துண்டு, துண்டாக போகும் என்பதை குர்ஆன் எச்சரிக்கிறது.
“(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. -6:70
மேலும், “பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் :என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? -47:15
சீல் (சலம்) கொடுக்கப்படும்…
சீல் என்பது பழைய புண்ணிலிருந்து நாற்றத்தோடு வெளியேறக்கூடியது. அல்லது காதுகளிலிருந்து நாற்றத்தோடு வெளிவரும். எங்கள் உடம்பிலிருந்து வெளிவரும் இந்த சலத்தின் நாற்றத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. அதே நேரம் நரகத்தில் வேதனையை தாங்க முடியாமல் தண்ணீர், தண்ணீர் என்று கத்தும் போது கடுமையான நாற்றம் வீசும் சலத்தை இந்த குடி என்று கொடுக்கப்படும் என்பதை பின வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.
“(அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது. -38:57
இது (தீயோர்களுக்காக); ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் – கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும். -38:56
நெருப்பு காற்று…
உலகில் உயிர் வாழ காற்று மிக அவசியமாகும். அதே நேரம் நரகத்திலும் காற்றும் வீசும், அந்த காற்று எப்படி பட்டது என்பதை கவனிப்போம்.
“(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -56:43
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள். -56:42
நரகத்தில் விரிப்பு…
உலகில் நாம் தூங்கும் நேரங்களில் கீழே விரிப்பை விரிப்போம். நரகத்திலும் அல்லாஹ் நெருப்பிலான விரிப்பையும், போர்வையையும் கொடுத்து வேதனையை பாவிகளுக்கு அதிகப்படுத்துகிறான்.
“அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு – இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.” -7:41
தோல் கருகும்…
நரகத்தில் பாவிகளை எரிக்கும் போது நமது தோல் கருகி போகும். தோல் கருக, கருக மீண்டும், மீண்டும் புதிய தோலை அல்லாஹ் பாவிகளுக்கு போட்டுக் கொண்டே இருப்பான். ஏன் என்றால் தோலின் மூலம் தான் முழு உடம்பும் வேதனையை உணர முடியும். நரகத்தை படைத்த அல்லாஹ் இப்படி சொல்லிக் காட்டுகிறான்.
“யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். -4:56
நரகத்தின் வேதனைகளை நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது. ஆனால் வேதனைக்கு மேல் வேதனை என்றால் எப்படி இருக்கும்? பாவிகள் தாங்க முடியாத அளவிற்கு நரகத்தை அல்லாஹ் தயார் பண்ணி வைத்துள்ளான்.