– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் –
உலக மட்டத்தில் கல்வி தாகத்தில் இருக்கும் உலமாக்களுக்கு ஹதீஸ்கள் முழுவதையும் ஒரே பார்வையில் தேடிப்படிக்க கூடிய ஓர் அறிய சந்தர்ப்பத்தை இறையருளால் ஷேக் அஹமத் இப்னு ஸாலிஹூஸ் ஷாமி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ் ! அல்லாஹ் அவருக்கு அருள் பாளிப்பானாக ! இது சம்பந்தமாக பலஹத்துறையைச் சார்ந்த அஷ்ஷேக் முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் பேசிய ஆடியோ கிளிப்பை எழுத்து வடிவத்தில் உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.
குத்துபுஸ்ஸூன்னா- சுன்னாவை ஒழுங்குப்படுத்துதல் என்ற அமைப்பில் திருப்பி, திருப்பி வரக்கூடிய ஹதீஸ்களை தவிர்த்து ஏனைய ஹதீஸ்களை முறைமைப்படுத்தி, அழகான முறையில் நமக்கு தொகுத்து வழங்கியுள்ளார்கள்.
ஸzவாயிது ( زواىد ) என்று சொல்வார்கள். அதாவது அவர் பதிநான்கு கிரந்தங்களை தெரிவு செய்கிறார். உதாரணமாக ஸஹீஹூல் புகாரி, ஸஹீஹூல் முஸ்லிம் இந்த இரண்டு கிதாபுகளையும் முதலில் எடுக்கிறார். புகாரியில் இடம் பெறாத ஹதீஸ்கள், முஸ்லிமில் இடம் பெற்றிருக்கும். அந்த ஹதீஸ்களை மட்டும் தனியாக தொகுத்து எடுக்கிறார். அது போல புகாரியிலும், முஸ்லிமிலும் திரும்ப, திரும்பவரக் கூடிய ஹதீஸ்களை தவிர்த்து விட்டு, புகாரியையும், முஸ்லிமையும் (அல் ஜாமிவு பைன ஸஹீஹைன் الجامع بين صحيحين
என்று) ஒன்றிணைக்கிறார். திரும்ப, திரும்ப வரக் கூடிய எந்த ஹதீஸூம் அதில் இடம் பெறாது.
அதன் பிறகு சுனன் அபி தாவூது, சுனன் திர்மிதி, சுனன் நஸயி, சுனன் இப்னுமாஜா, சுனன் தாரமீ ஆகிய இந்த ஐந்து கிரந்தங்களில், புகாரி, மற்றும் முஸ்லிமில் இடம் பெறாத ஹதீஸ்களை மட்டும் தொகுத்து எடுத்து ஸzவாயிது சுனன் ( زواىد السنن ) என்று தொகுத்துள்ளார்.
அதன் பிறகு மூஃதா மாலிக், மற்றும் முஸ்னத் அஹமத் ஆகிய இந்த இரண்டு கிரந்தங்களில் மேலே சொல்லப்பட்ட ஏழு கிரந்தங்களில் இடம் பெறாத ஹதீஸ்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, ஸzவாயிதுல் மூஃதா வல் முஸ்னத் زواىد المؤطا والمسند
என்று தொகுத்தார். அதன் பிறகு இந்த ஒன்பது கிரந்தங்களையும் ஒன்றிணைத்து, திரும்ப, திரும்ப, வரக் கூடிய ஹதீஸ்களை தவிர்த்து ஜாமிவுல் உஸூலுத் திஸ்ஆ جامع الأصول التسعةஎன்ற பெயரில் ஒன்றாக தொகுத்தார்.
அதன் பிறகு இமாம் பைஹகியின் சுனன் குப்ராவை எடுத்தார். இதில் மேலே குறிப்பிட்ட ஒன்பது கிரந்தங்களில் இடம் பெறாத ஹதீஸ்களை தனியாக பிரித்தெடுத்தார்.அதன் பிறகு ஸஹீஹ் இப்னு ஹிப்பான், மற்றும் ஸஹீஹ் இப்னு ஹூசைமா இவைகளிலும் அப்படியே பிரித்தார். அதன் பிறகு அல் அஹாதீஸில் முஹ்தாரா லியாதீனில் அல் மக்தஸி என்ற நூலிலும் அப்படியே பிரித்தார். இறுதியாக முஸ்தத்ரகுல் ஹாகிமிலும் இப்படியே பிரித்தார்.இப்படி மேலே குறிப்பிட்ட பதிநான்கு (14) கிதாபுகளில் திரும்ப, திரும்ப, வந்த ஹதீஸ்களை மட்டும் தவிர்த்து கொண்டு மற்ற எல்லா ஹதீஸ்களையும் ஒன்றிணைத்தார்.
இப்படி எல்லாம் செய்து அவருடைய பார்வையில் மொத்த ஹதீஸ்கள் சுமார் (28 ஆயிரம்) இருபத்தி எட்டாயிர சொச்சமாகும். பொதுவாக எல்லா ஹதீஸ் கிரந்தங்களில் மொத்த ஹதீஸ் எண்ணிக்கைகள் ஒரு இலட்சத்தி சொச்சமாகும். இவைகளில் திரும்ப, திரும்ப வரக் கூடியவைகளை தவிர்த்து பார்த்தால் 28 ஆயிரம் சொச்சமாகும்.
இதன் பிறகு மஆலிமுஸ் சுன்னா அந்நபவிய்யா معالم السنة النبويةஎன்ற கிதாபை வெளியிடுகிறார். இந்த கிதாபில் ஒரு அறிவிப்பாளார் அறிவிக்க கூடிய ஹதீஸ் திரும்ப, திரும்ப வந்தால் அதை தவிர்த்து கொள்வார். உதாரணமாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்க கூடிய ஹதீஸ், அதே ஹதீஸ் மற்றொரு கிதாபிலோ, அல்லது அதே கிதாபிலோ ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தால் அதை தவிர்த்து கொள்வார். ஆனால் ஒரு ஹதீஸ் பல அறிவிப்பாளர்கள் மூலம் வந்திருந்தால் அதை தவிர்த்து கொள்ள மாட்டார். உதாரணமாக ஒரு ஹதீஸை அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அதே ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அதே ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள் என்றால் இப்படியான ஹதீஸ்களை தவிர்த்து கொள்ளாமல் சேர்த்து தொகுத்துள்ளார். கருத்து ஒன்றாக இருந்தாலும் இதில் நான்கு ஸஹாபாக்கள் இடம் பெறுவதால் இப்படியான ஹதீஸ்களை தவிர்த்து கொள்ள மாட்டார். அதாவது கருத்தும் மிஸ் ஆக கூடாது, ஹதீஸூம் மிஸ் ஆகக் கூடாது என்றடிப்படையில் தொகுத்துள்ளார். குறிப்பாக இதில் பலகீனமான ஹதீஸ்கள் இடம் பெறாமல் தொகுத்துள்ளார். அல்ஹம்து லில்லாஹ் ! (குறிப்பு இவைகளை அறபு மத்ரஸாக்களில் பெரிய மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப் படுத்தினால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும்)