இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் அசத்திய இருள்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று!
கற்றவர்களை அல்லாஹ் பல கோணங்களில் மகிமைப்படுத்தியுள்ளான்.
“நம்பிக்கை கொண்டோரே! ‘சபைகளில் இடமளியுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான். நீங்கள், ‘எழுந்து விடுங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, அறிவும் வழங்கப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துவான். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” -58:11
இந்த வசனத்தில் கல்வி, ஞானம் பெற்றவர்களின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தியதாகக் கூறுகின்றான்.
“நிச்சயமாக (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நீதியை நிலைநாட்டியவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான். மேலும், வானவர்களும் அறிவுடை யோரும் (சாட்சி கூறுகின்றனர். உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்க வனுமாவான்.” -3:18
இந்த வசனத்தில் தனது சாட்சியுடனும் மலக்குகளின் சாட்சியுடனும் நீதி நெறி தவறாத கற்றோரின் சாட்சியத்தை அல்லாஹ் இணைத்துக் கூறுவதன் மூலம் உலமாக்களின் உயர்ந்த அந்தஸ்தை உணர்த்துகின்றான்.
உலமாக்கள் உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்களாவார்கள். உலமாக்களை கேவலப்படுத்துவதும் குறைத்து மதிப்பிடுவதும் கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகெட்ட சிந்தனைப் போக்கின் பண்புகளில் ஒன்றாகும்.
சமுதாயத்தில் உலமாக்கள் பற்றிய உயர்ந்த எண்ணம் குன்றிக் குறையும் போது மார்க்கத்தின் மகிமையும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைய ஆரம்பிக்கும். எனவே, மார்க்கத்தைக் கற்றவர்கள் மகிமைப்படுத்தப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும்.
இல்மும் அமலும்:
உலமாக்களின் அந்தஸ்தும் கௌரவமும் குறைக்கப்படுவதற்கு சில உலமாக்களின் நடத்தைகளும் காரணமாக அமைகின்றன. கற்றவர்களிடம் கல்வியின் செயற்பாடுகள் குன்றிக் குறைந்து போனால் அவர்களின் மகிமை எப்படி மங்கி மறையாதிருக்கும்?
அமல்கள் இல்லாத அறிவால் உயர்வில்லை. உலமாக்களிடம் இஸ்லாமியப் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும், ஒழுக்க மாண்புகளும் உயர்வாகவே இருக்க வேண்டும்.
தக்வாவே முக்கியம்:
ஒருவர் ஆலிம் என்ற உண்மையான அந்தஸ்தைப் பெற இறையச்சமே முக்கிய பண்பாகத் திகழ்கின்றது.
“இன்னும் இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும் மாறுபட்ட பல நிறங்கள் உள்ளன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்களே! நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன் மிக்க மன்னிப்பவன்.” -35:28
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அதிகம் அஞ்சுபவர்கள் உலமாக்களே! என்று அல்லாஹ் கூறுவதால் இறையச்சம் இல்லாதவர் உண்மையான உலமாவாக இருக்க முடியாது என்பதை அறியலாம்.
இன்றைய உலமாக்களில் சிலர் மிகுந்த உலக மோகம் கொண்டவர்களாகவும் அற்ப ஆதாயத்திற்காக மார்க்கத்தை மறைக்கவும் நெளிக்கவும் தயங்காதவர்களாகவும் திகழ்கின்றனர்.
கடந்த கால உலமாக்கள் மாமன்னர்களுக்கு முன்னாலும் தலை தாழ்த்தாமல் இல்மின் கண்ணியம் பேணி இருக்க, இன்றைய உலமாக்களில் சிலர் மார்க்கத்தின் அடிப்படைகளே தெரியாத பள்ளி நிர்வாகிகள் மற்றும் மத்ரஸா நிர்வாகிகள் முன்னால் மண்டியிடத் தயாராக உள்ளனர்.
தாம் கற்ற கல்விக்கு ஏற்ப மக்களை வழிநடாத்தக் கடமைப்பட்டவர்கள் நிர்வாகிகளின் நிபந்தனைகளுக்கு ஏற்ப மார்க்கத்தை வளைக்கும் நிர்க்கதி நிலைக்குச் சென்றுள்ளனர். இத்தகைய சில உலமாக்களால் ஒட்டுமொத்த உலமாக்களின் அந்தஸ்துக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
உலமாக்களின் பொறுப்புக்கள்:
“உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகளாவார்கள். அவர்கள் அறிவைத்தான் விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த அறிவைப் பெற்றவர்கள்தான் நிறையப் பாக்கியம் பெற்றவர்களாவார்கள்.” (புகாரி)
உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என்றால் அவர்கள் விட்டுச் சென்ற பணியைச் செய்தாக வேண்டும். நபிமார்களின் பணியைச் செய்யாதவர்கள் அவர்களின் வாரிசுகள் என்ற உயர்ந்த அந்தஸ்துக்கு உரிமை கோர முடியாது.
01. ஏகத்துவப் பணி:
இறைத்தூதர்கள் அனைவரும் அந்த சமூகத்தில் காணப்பட்ட இணைவைப்பு, குப்ர் என்பவற்றை முழு மூச்சுடன் எதிர்த்துள்ளார்கள்.
“அல்லாஹ்வை வணங்குங்கள். மேலும், (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக நாம் அனுப்பிவைத்தோம். அ(ச்சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் உள்ளனர். இன்னும் அவர்களில் வழிகேடு விதியாகிவிட்டோரும் உள்ளனர். எனவே, பூமியில் நீங்கள் பயணித்து, பொய்ப்பித் தோரின் இறுதி முடிவு என்னவாயிற்று? என்பதைப் பாருங்கள்.” -16:36
இந்த அடிப்படையில் அறியாமை காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவியுள்ள ஷிர்க்கான நடவடிக்கைகள், மூட நம்பிக்கைகள், அந்நிய கலாசார பழக்க வழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு+ட்ட வேண்டியது உலமாக்களின் கட்டாயக் கடமையாகும்.
02. கற்பித்தல்:
நபி(ச) அவர்களின் பணி பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“அவன்தான் (எழுத்தறிவற்ற) உம்மிகளிடம் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவனது வசனங்களை அவர் அவர்களுக்கு ஓதிக் காட்டி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். மேலும், வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்கு அவர் கற்றுக் கொடுப்பார். அவர்களோ இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.” -62:2
நபி(ச) அவர்கள் அனுப்பப்பட்ட சமூகத்தினர் உம்மிகளாக இருந்தனர். தெளிவான வழிகேட்டில் இருந்தனர். இருப்பினும் நபி(ச) அவர்கள் தமது பணியைச் செய்தார்கள். அவர்களுக்கு குர்ஆனும், சுன்னாவும் கற்றுக் கொடுத்தார்கள். மக்களின் மடமையைக் காரணம் காட்டி நபி(ச) அவர்கள் தனது பணியில் இருந்து ஒதுங்கிவிடவும் இல்லை’ ஓயவும் இல்லை. இன்றைய உலமாக்கள், மக்கள் மடையர்கள். அவர்களிடம் எதைச் சொன்னாலும் ஏறாது” எனக் கூறி தமது பொறுப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றனர்.
03. வழிநடத்துதல்:
உலமாக்கள் மக்களுக்கு மார்க்கத்தைப் போதித்தால் மட்டும் போதாது. அதன் அடிப்படையில் மக்களை வழிநடாத்தவும் வேண்டும். நபி(ச) அவர்கள் கற்பித்தலுடன் அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பணியையும் சேர்த்தே செய்துள்ளார்கள். நபிமார்களின் வாரிசுகளாகிய நாமும் இப்பணியைச் செய்தாக வேண்டும்.
04. இஜ்திஹாத் பணி:
சமூகம் சந்திக்கும் புதுப் புதுப் பிரச்சினை களைக் குர்ஆன் மற்றும் சுன்னாவின் நிழலின் அடிப்படையில் ஆய்வு செய்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டியது உலமாக்களின் பணியாகும். நபி(ச) அவர்களைப் பற்றி அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“அவர் அவர்களுக்கு நன்மையை ஏவுவார்’ தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி கெட்டவற்றைத் தடுப்பார்.” -7:157
நல்லவற்றை ஆகுமாக்குவதும் கெட்டவற்றைத் தடுப்பதும் உலகம் அழியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்தப் பணியை உலமாக்கள் இஜ்திஹாத் எனும் திறணாய்வு மூலம் தொடர வேண்டும்.
05. விலங்குகள் உடையட்டும்:
சமூகத்தின் கரங்களில் மாட்டப்படும் சங்கிலிகளை உடைத்து அவர்களை சுதந்திரமாக இயங்கச் செய்யும் பணியும் உலமாக்கள் மீதுள்ளது. மக்களின் சுமைகளை அகற்றும் பணியும் உலமாக்கள் செய்ய வேண்டிய பாரிய பணிகளாகும்.
“அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப்பட்டிருப்பதை, தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் கண்டு கொள்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவி, தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி, தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும், அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரை கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.” -7:157
இவ்வாறு உலமாக்களின் பொறுப்புக்கள் நிறையவே உண்டு. உலமாக்கள், சமூகத்தையும் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அசட்டை செய்யாமல் சத்தியப் பாதையில் தமது இலட்சியப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். ஓயாத அலைகள் போல் தொடரான போராட்டத்தின் மூலம் சமூக மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
உலமாக்கள் தமது அந்தஸ்தையும் உயர்வையும் உணர்ந்து தமது பொறுப்புக்களை முறையாக முன்னெடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
இது போன்று வாசிக்கவும் பதிவிடவும்
சலாம்.
“உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகளாவார்கள். அவர்கள் அறிவைத்தான் விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த அறிவைப் பெற்றவர்கள்தான் நிறையப் பாக்கியம் பெற்றவர்களாவார்கள்.” (புகாரி)
இப்படி ஒரு ஹதீஸ் புகாரியில் இருப்பதாக தெரியவில்லையே?? ஹதீஸ்களை குறிப்பிடும்போது கிதாபுடன் எண்ணையும் சேர்த்து குறிப்பிடுங்கள். அதுவும் எந்தெந்த எ
கிதாபுகள் தமிழில் வந்துள்ளதோ அந்த எண்ணை குறிப்பிடுங்கள் எடுத்துப்பார்க்க இலகுவாக இருக்கும்.
masha allah