கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
இலங்கையின் அரசியல் பின்னணி:
இலங்கையின் உள்ளாட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளாட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது.
இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. மகிந்தவின் வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் இனவாத செயற்பாடுகள் மீள் எழுச்சி பெறலாம் என்ற ஐயம் எழுந்தது. முன்னால் ஜனாதிபதியின் அரசியல் எழுச்சியடைந்தால் பிரச்சனை வரும் என்று காட்டுவதற்காக இன்னொரு பிரிவால் கூட பிரச்சனை உருவாக்கப்படலாம் என்ற எண்ணங்களும் எழுந்துள்ளன.
அம்பாறைப் பிரச்சினை:
2018.02.26 ஆம் திகதி இரவு அம்பாறையில் ஒரு முஸ்லிம் வர்த்தகர், தனது கொத்து ரொட்டியில் ஆண்மை நீக்க மாத்திரை பயன்படுத்தினார் என்ற வதந்தி பரப்பப்பட்டு கடைக்காரர் தாக்கப்பட்டதுடன் அம்பாறை ஜூம்ஆ மஸ்ஜிதும் தாக்கப்பட்டது. பள்ளிக்கு அருகில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் சுமார் 1 1/2 மணி நேரத்திற்குப் பின்னரே காவல்துறையினர் வந்தனர். இனவாதிகள் பஸ்கள் மற்றும் பைக்குகளில் வந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலின் பின்னரும், காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு சாதகமாகவே செயற்பட்டனர். அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் பிரதமரின் UNPயுடன் இணைந்து நின்றதால் அம்பாறை முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கே தமது வாக்குகளை அளித்தனர். இருந்தும், இங்கு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
திகண நிலவரம்:
தற்போது கைது செய்யப்பட்டுள்ள “மகசொன் பலகாய” இனவாத அமைப்பின் தலைவர் திகண நகரில் இருந்து ஒரு நேரலை பேஸ்புக் வீடியோவைப் பதிவிடுகின்றார். அதில் திகண நகரில் 80% கடைகள் முஸ்லிம்களுடையது என்றும், தான் சுற்றிச் சுற்றி வந்தும் ஒரு ஊனு கடை மட்டும்தான் சிங்களவருக் குரியது என்றும் இனவாதத்தைத் தூண்டும் பதிவை இடுகின்றார்.
21 ஆம் திகதி தாக்குதல்:
2018.02.21 ஆம் திகதி முஸ்லிம் ஒருவரின் வண்டி சிங்கள சகோதரர் ஒருவரின் ஆட்டோவுடன் மோதி இலேசாகக் கீறல் ஏற்படுகின்றது. இருவரும் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் செல்கின்றார். பின்னர் சிங்கள சகோதரருடன் மற்றும் சிலர் சேர்ந்து அவரைத் தாக்குகின்றனர். அவர் தப்பிப்பதற்காக ஒரு முஸ்லிம் கடைக்குள் நுழைகின்றார். அந்தக் கடை தாக்கப்படுகின்றது. இதில் ஆறுபேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
22 ஆம் திகதி:
22 ஆம் திகதி இரவு சிங்கள சகோதரர் ஒருவர் வாகனத்தைத் திருப்பும் போது முஸ்லிம் ஒருவரின் ஆட்டோவின் பக்கக் கண்ணாடி உடைகின்றது. அதில் முறுகல் ஏற்படுகின்றது. அந்த ஆட்டோவில் இருந்த மூவர் மற்றும் சாரதியும் சேர்ந்து அந்த லாறியை விரட்டிச் சென்று தாக்குகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவம் ஊஊவு கெமராவில் பதிவாகியுள்ளது. சாதாரண தாக்குதலாகவே இது தென்படுகின்றது.
முஸ்லிம் இளைஞர்களின் இச்செயல் நிச்சயமாக கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத் தக்கதுமாகும். இருப்பினும், 21 ஆம் திகதி நடந்த பிரச்சினையுடன் ஒப்பிடும் போது அந்தப் பின்னணிதான் இந்த இளைஞர்களை இப்படிச் செயற்பட வைத்திருக்கலாம்.
தாக்கப்பட்ட சிங்கள சகோதரர் நல்லவர், வறியவர். உண்மையில் அனுதாபத்திற்குரியவர். தாக்குதலுக்குப் பின்னர் அவரே வாகனத்தை ஓட்டிச் சென்று காவல் துறையில் முறையிட்டுள்ளார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வைத்தியசாலையில் மிக சாதாரணமாகவே இருந்துள்ளார். ஏற்கனவே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இருந்த இனவாதிகள் தமது கலவரத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக இவரைத் திட்டமிட்டுக் கொலை செய்திருக்கலாம் என்ற பலமான யு+கம் இப்போது ஆதாரங்களுடன் எழுந்தவண்ணம் உள்ளது.
அவர் வைத்தியசாலையில் இருந்த போது 03 ஆம் திகதி மரணித்திருக்கின்றார். அதாவது தாக்கப்பட்டு பத்து நாட்களின் பின்னர் மரணிக்கின்றார். (முஸ்லிம்கள் ஒரு சிங்களவரைக் கொன்றதால் கலவரம் மூண்டது என்பது தவறானதாகும்.) இதன் பின்னர் தாக்குதல் நடத்திய இளைஞர்களின் ஊரார் அந்தப் பகுதி மதகுருவுடன் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்கியதுடன் மேலும் பத்து இலட்சம் வழங்க வாக்களிக்கின்றனர்.
சமாதானமாக இருந்த இந்தச் சூழ்நிலையைக் குழப்பி இனவாத சக்திகள், இனவாத மதகுருக்கள் ஒன்றிணைந்து பிரச்சினையை ஏற்படுத்த முற்படுகின்றனர்.
காவல்துறையின் துரோகம்:
இந்த சந்தர்ப்பத்தில் காவல் துறை தரப்பினர் கடைகளையும் பள்ளிகளையும் மூடிவிட்டு வீட்டிற்குள் இருக்கும் படியும், தாம் அவற்றைப் பாதுகாப்பதாகவும் முஸ்லிம்களிடம் வாக்களிக்கின்றனர். இந்த வாக்குறுதியை நம்பிய முஸ்லிம்கள் கடைகளை மூடுகின்றனர். 05 ஆம் திகதி இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் போலி சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு இனவாத சக்திகள் களமிறங்குகின்றனர்.
பயிற்றப்பட்ட இனவாதிகள்:
சுமார் 2500-3000 இற்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகளைக் கொண்ட குழுவினர் இத்தாக்குதலில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டன’ பின்னர் எரிக்கப்பட்டன. ஒருவரும் இல்லாத முஸ்லிம் வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சிங்களவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்து வந்ததால், அந்தக் கட்டிடம் சேதமாகாத விதத்தில் தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது. தாக்க வந்தவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்கள், கற்றுக் கொடுக்கப்பட்டவர்கள். இது அவர்களின் தாக்குதல் வேகத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தாலே புரிந்துவிடும்.
இவர்கள் ஏற்கனவே எங்கு, எப்போது, எப்படித் தாக்க வேண்டும் என்பது பற்றி தீர்மானித்து அது பற்றிய முழுமையான தெளிவையும் பயிற்சியையும் பெற்றுவிட்டனர். முஸ்லிம்கள் தற்காப்புச் சண்டையில் ஈடுபட்ட பகுதிகளில் மட்டும் சேதங்கள் குறைவாக இருந்தன. இந்தத் தாக்குதல் திட்டத்தைப் பார்க்கும் போது இது திடீரென ஏற்பட்டதொன்றன்று என்பது மட்டும் வெளிப்படையாகும்.
எனவே, முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்ட இளைஞரை இனவாதிகளே திட்டமிட்டுக் கொலை செய்து விட்டு முஸ்லிம்களைக் கருவறுத்துள்ளனர். அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி தீயிட்டு துவம்சம் செய்துள்ளனர் என்ற யு+கம் பலம் பெறுகின்றது.
பின்னணி?:
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் முன்னாள் ஜனாதிபதி இருப்பதாகவும், இந்நாள் நல்லாட்சி இருப்பதாகவும் பலவாறு சந்தேகிக்கப்படுகின்றது. அவ்வாறே எல்லாக் கட்சியிலும் உள்ள இனவாத அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகள் அனைவருக்கும் இதில் பங்கிருப்பதாகவும் நம்பப்படுகின்றது. இத்தோடு இலங்கை ஜனாதிபதி அவர்கள் இந்தக் கலவரம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், கலவரத்தை முன்னின்று நடத்திய மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி சுமனரத்ன தேரரை சந்தித்து ஆசி வாங்குகின்றார். கலவரம் முடிந்த பின்னர் ஜப்பானில் ஜனாதிபதியின் கூட்டத்தில் மற்றொரு இனவாத மதகுருவான ஞானசார தேரர் பங்கு கொள்கின்றார். இவையெல்லாம் சந்தேகத்தை வலுவடையச் செய்கின்றன.
எனவே, அரசின் முக்கிய புள்ளிகள் இதற்குப் பின்னால் உள்ளனர் என்ற குற்றச்சாட்டை இன்று அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின் நோக்கம் முஸ்லிம்களைக் கொல்வது அன்று. மாறாக, அவர்களின் மத நிலையங்களைத் தாக்குவதும் அவர்களது பொருளாதாரத்தை ஒடுக்குவதுமே இதன் இலக்காகும். தமிழ் மக்களின் கல்வியை அழித்த பேரினவாதம் இன்று முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் அழித்தால் அவர்கள் அடிமைப்பட்டுவிடுவார்கள் என்று எண்ணுகின்றது.
அத்துடன் இத்தாக்குதல்கள் மூலம் முஸ்லிம்களை வெறுப்படையச் செய்து ஆயுதம் ஏந்த வைத்துவிட்டால் சட்ட ரீதியாக அவர்களை அழிக்கலாம் என்றும் அவர்கள் கணக்குப் போட்டிருக்கலாம்.
எனவே, முஸ்லிம் சமூகம் இந்தப் பிரச்சினைகளை ஆழ்ந்து நின்று நிதானித்து அறிவு ரீதியாகவும், ஜனநாயகப் போராட்டங்கள் மூலமுமே எதிர் கொள்ள வேண்டும்.
உலக நாடுகளில் இச்செய்தியின் பரவலானது இலங்கைக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓரளவு திருப்திப்படும் விதத்தில் கைதுகள் நடந்து காய்கள் நகர்த்தப்படுகின்றன. முக்கிய குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்பட்டால் நாட்டையும் நாட்டின் நற்பெயரையும் காக்கலாம்.
இது தேசியப் பிரச்சினை:
கண்டி-திகண இனவாதத் தாக்குதலை இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையாகவே பலரும் பார்க்கின்றனர். அதனால்தான் குறிப்பிட்ட ஒரு சில அரசியல் தலைவர்களைத் தவிர வேறு எவரும் இது பற்றி வாய் திறக்கவே இல்லை. ஆனால், இது ஒரு தேசிய பிரச்சினையாகும்.
இலங்கையின் நற்பெயருக்கு அயல் நாடுகளில் கலங்கம் ஏற்பட்டுள்ளது. மியன்மாருக்குப் பின்னர் இலங்கையின் இத்தகைய செயற்பாடுகளால் பௌத்த மதத்திற்குக் கலங்கம் ஏற்பட்டுள்ளது. சிங்கள இனம் பற்றிய தப்பபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வினால் உல்லாசப் பயணிகளின் வருகை தடைப்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்கு வரத்து, உல்லாச விடுதிகள், சுற்றுலாத் தளங்கள் என்பன வருவாயை இழந்துள்ளன.
மேலும், புதிய முதலீடுகளில் பின்னடைவு ஏற்படும். வளைகுடா நாடுகளில் தொழில் பெறுவதில் வீழ்ச்சி ஏற்படும். இன்னும் சர்வதேச அளவில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படை பற்றிய தப்பெண்ணம் ஏற்பட்டுள்ளது. கடந்த கால போர் குற்றங்கள் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்தும் விதத்தில் கலவர சூழலில் அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இவ்வாறு நோக்கும் போது நிச்சயமாக இது ஒரு தேசியப் பிரச்சினையாகும் என்பது தெளிவாகின்றது.
இந்த இனவாத சக்திகள் தேசத்தினதும், சிங்கள இனத்தினதும், பௌத்த மதத்தினதும் மதிப்பைக் கெடுத்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதார நலன்களையும் சிதைத்து சீரழித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பல சிங்கள மத குருக்கள் இன நல்லுறவுக்காக போராட்டங்களை நடத்தியுள்ளனர். கருத்துக்களையும் பகிரங்கமாக வழங்கி வருகின்றனர். இது ஒரு நல்ல மாற்றமாகும்.
ஆகவே, அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்ற இந்த ஒரு சில நல்ல மாற்றங்களை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். இந்த நிலையில் நாம் பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடக் கூடாது என்பதை மனதில் கொண்டு நடக்க வேண்டும்.
எனவே. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் பாதுகாப்பையும் பொருளாதார அபிவிருத்தியையும் அவனின் ரஹ்மத்தையும் தந்தருள்வானாக!