இலங்கை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்ன கும்பர பகுதியில் உள்ள மஸ்ஜிதில் பௌத்த மத குருமார்கள் அடங்கிய குழுவினரை பள்ளி நிர்வாகம் பள்ளிக்குள் வரவழைத்து பன, பிரீத் போன்ற அவர்களின் ஷிர்க்கான வணக்க வழிபாடுகளை கச்சிதமாக செய்யக் கூடிய காட்சிகளை முஸ்லிம் உலகமே பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியது.
சாதாரண பொதுமகன் முதல் படித்தவர்கள் வரை காரி துப்பக் கூடிய அளவிற்கு பகிரங்கமாக ஷிர்க் என்ற பாவத்தை அல்லாஹ்வுடைய பள்ளிக்குள் அந்த பள்ளி நிர்வாகிகளும் மௌலவிமார்களும் சேர்ந்து அரங்கேற்றியுள்ளார்கள்.
இது வரைக்கும் இது சம்பந்தமாக அ. இ. உலமா சபை பகிரங்கமாக பேசவில்லை. அவர்களிடத்தில் கேட்டால் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் தொலை பேசி மூலமாக பேசி விட்டோம் என்று இலேசாக சொல்லி முடித்து விடுவார்கள். பகிரங்கமாக பேசினால் பௌத்த மக்களுக்கு விளங்கி விடும் என்று ஏதாவது சாட்டு போக்கு சொல்லி வழைமைப் போன்று சாமளித்து கொள்வார்கள்.
இது இலங்கைக்கு புதிய விசயமல்ல இது போல பல தடவைகள் இப்படியான ஷிர்கான விடயங்கள் சில மௌலவிமார்களின் தலைமையில் நடைப் பெற்றுள்ளது. அப்போதெல்லாம் இதே பல்லவியை தான் இவர்கள் பாடுவார்கள்.
அன்று தொலை காட்சியில் உலமா சபை சார்பாக பேசிய மௌலவியின் பேச்சை நம்பி இன்று அல்லாஹ்வுடைய பள்ளிக்குள் பகிரங்கமாக ஷிர்க் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றால் முழுப் பொருப்பையும் அ. இ. உலமா சபை தான் ஏற்க வேண்டும். நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் ஆராதனைகளை செய்ய அனுமதி வழங்கினார்கள் என்று பகிரங்மாக தொலைக் காட்சியில் பேசி அனுமதி அளித்ததின் முதல் விளைவை உலகம் கண்டு கொண்டது.
மார்கத்தை பேச பொது இடங்களுக்கு அனுப்பும் போது. குர்ஆன் ஹதீஸ் விளக்கமுள்ளவர்களை அனுப்புங்கள். அப்படி ஏதாவது தவறான கருத்தை பேசி விட்டாலும் பலரால் அது தவறான கருத்து என்று சுட்டிக் காட்டும் போது, சரியாக இருந்தால் உடனே முன் வந்து அதை ஏற்று திருத்திக் கொள்ளுங்கள். சொல்பவர்கள் எல்லாம் சொல்லி விட்டு போகட்டும் என்று காது கேளாதவர்களைப் போல இருக்காதீர்கள் இது உலமாக்களுக்கு அழகல்ல. உடனே அந்த தவறை பகிரங்கமாக திருத்திக் கொண்டிருந்தால். இந்த தவறை பள்ளி நிர்வாகிகள் தவிர்ந்து இருக்கலாம்.
எங்களுக்கு கீழ் இத்தனை ஆயிரம் மஸ்ஜிதுகள், இத்தனை ஆயிரம் மௌலவிமார்கள் உள்ளனர் என்று பேசி,பேசி இருக்காமல் அல்லாஹ்வைப் பற்றிய தெளிவையும் அகீதா (இஸ்லாமிய அடிப்படை கொள்கை )பாடத்தையும் தெளிவாக கற்று கொடுத்து மக்களையும், இப்படியான மௌலவிமார்களையும் ஷிர்கிலிருந்து காப்பாற்றுங்கள்.
மத நல்லிணக்கம், சக வாழ்வு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற வாசகங்களை சொல்லி, எல்லாம் ஒன்று தான் என்று ஷிர்க்கான செயல்பாடுகளை செய்ய தூண்டி மறுமையில் மக்களை நஷ்டவாளிகளாக மாற்றி விடாதீர்கள்.
அந்நிய மக்களோடு இரண்டரக் கலந்து இன்பமாக வாழ வேண்டும். அவர்களின் இன்ப, துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளையும், ஒத்தாசைகளையும் செய்து கொடுக்க வேண்டும். இவைகள் அனைத்தும் இஸ்லாமிய நெறி முறைகளை மீறாத அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.
செய்யக் கூடாத பல ஷிர்க்கான காரியங்களை அவர்களோடு சேர்ந்து செய்து விட்டு, சக வாழ்வு, மத நல்லிணக்கம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். இப்படியான காரியங்களை எச்சரிக்கும் பல குர்ஆன் வசனங்கள், பல ஹதீஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன நிதானமாக சிந்தியுங்கள். நாம் யாரை முன்மாதிரியாக பின் பற்றுகிறோம் என்பதை எல்லாம் பொது மக்கள் சற்று ஆழமாக சிந்தித்து அமல்களில் ஈடுபடுங்கள்.சொல்வதை எல்லாம், அல்லது காண்பதை எல்லாம் நல்லது என்று செய்து உங்கள் மறுமை வாழ்வை வீணாக்கி விடாதீர்கள்.
இறை தண்டனைகளை பயந்து கொள்ள வேண்டும். ஷிர்க் என்றால் என்ன ? இதனுடைய விபரீதங்கள் என்ன ? என்பதை மக்களுக்கு உலமாக்கள் ஆழமாக படித்துக் கொடுங்கள். அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டுவானாக !