கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே..! மனிதன் தவறு செய்கின்றவன் தவறு செய்யாதவன் மனிதன் கிடையாது என்பது அடிப்படை அவன் சொந்த வாழ்வில் செய்யும் தவறுகளில் எவை அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியிலான தவறுகளாக இருக்கின்றதோ அவற்றை எந்த காரணம் கொண்டும் இரண்டாம் நபர் ஒருபுறபிருக்க சம்பந்தபட்ட நபர் வெளியில் பேசி பகிரங்கபடுத்துவதை கூட அல்லாஹ் விரும்ப வில்லை இப்படியானவர்களை அல்லாஹ் மன்னிக்கவும் மாட்டான் என்று இருக்க ஒருவரின் தவறை மற்றவர் பேசித்திரிந்தால் அதற்கான தண்டனை என்ன..? அதை அல்லாஹ் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவானா..?
தான் இரகசியமாக செய்த தவறைக் கூட பகிரங்கபடுத்துவதை தடை செய்துள்ள மார்க்கத்தில் இருந்து கொண்டு அடுத்தவன் செய்த தவறை சந்தி சந்தியாகவும் முக்காடு போட்டு இணைய தளங்கள் வழியாகவும் பேச முன்வைக்கப்படும் வாதங்களை ஒவ்வொன்றாக உங்களோடு பகிர்ந்து கொள்வது இன்றைய சூழலில் மிக பொறுத்தம் என கருதுகிறேன்.
வாதம் 01: நாம் உண்மையை தானே கூறுகின்றோம்..? அவரை பற்றி இல்லாததை பேசவில்லையே..?
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது , “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5048
வாதம் 02: நாம் இந்த நபர் பற்றி கேள்விப்பட்ட பின் அனைவரிடமும் விசாரித்து அவரின் தொலைதொடர்பு சாதனங்கள் முதல் அணைத்தையுமே கண்காணித்து தான் இந்த முடிவை எடுத்தோம்
அல்லாஹ் பேசுகின்றான்:
நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 49:12
குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். திருக்குர்ஆன் 104:1
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது, பெரும் பொய்யாகும்.(பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; ( அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் 5006
புறம் பேசுகின்றவர்களின் மண்ணறை நிலை
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்து சென்றார்கள். அப்போது (மண்ணறை களிலுள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப் படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்) இருவரும் வேதனை செய்யப்படவில்லலை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும் போது (தம் உடலை) மறைக்க மாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள் சொல்லி (புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நட்டார்கள். பிறகு, இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று சொன்னார்கள். நூல்: புகாரி 6052
புறம் பேசியவர்களின் மறுமை நிலை
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள் தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார். நூல்: அபூதாவூத் 4235
தொடரும்… இன்ஷா அல்லாஹ்