Featured Posts

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

நாம் அனுதினமும் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும், நபியவர்களின் வழி முறையுமாகும்.

குர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் ! வழமையாக ஓதி வரும் இந்த குர்ஆனை ரமலான் காலங்களில் அவரவர்களின் நிலையை பொருத்து வேகமாக ஓதி ஒரு தடவையோ, இரண்டிற்கு மேற்ப்பட்ட தடவைகளோ ஓதுவார்கள். அதே நேரம் ரமலான் இருபத்தி ஏழாம் நாள், ஓரிரு பள்ளிகளில் இந்த குர்ஆனை தராவீஹ் தொழுகையில், இரவின் குறிப்பிட்ட நேரத்தில் ஓதி முடிக்க வேண்டும் என்றடிப்படையில் ஹாபிலைக் கொண்டு ஓதி முடிக்கிறார்கள். அதை சாதனையாகவும். பேசிக் கொள்கிறார்கள். நபியவர்கள் தடுத்த ஒன்றை செய்து விட்டு அதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும் ? மார்க்கத்தின் பெயரால் மாறு செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிக்க வேண்டும் என்பதை பின் வரும் நபி மொழி தெளிவுப் படுத்துகிறது.
“ அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது’ என்று கூறினேன். ‘அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே’ என்று கூறினார்கள். (புகாரி 5054) இப்படி ஹதீஸ் தெளிவாக இருக்கும் போது, எப்படி குறிப்பிட்ட நேரத்தில் முழுக் குர்ஆனையும் ஓத முடியும். ? இனம் புரியாத வேகத்தில் ஓதும் போது, என்ன ஓதுகிறேன் என்று தெரியாத அளவிற்கு குர்ஆனை முறை தவறி ஓதி விடுவார்கள் என்பதற்காக தான் நபியவர்கள் இப்படியான சட்டத்தை நமக்கு வழி காட்டுகிறார்கள். எனவே நபியவர்களின் வழி காட்டலின் படி, குர்ஆனை ஓதுவதில் அதிக கவனம் செலுத்துங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *