– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் –
ஆசிரியர் பக்கம் – May 2018
‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்)
எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் திகழ்கின்றார்களோ அதே போல் ஏனைய சமூகத்திற்கு முஸ்லிம் சமூகம் சாட்சியாகத் திகழ வேண்டும் என்பது குர்ஆனின் கூற்றாகும்.
இன்று முஸ்லிம் சமூகத்தின் மதிப்பையும் மானத்தையும் முஸ்லிம்களே அழித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் சமூகத்திற்கும் சமயத்திற்கும் தலை குனிவை ஏற்படுத்தத்தக்க கேவலமான செயல்களில் ஈடுபட்டு சமூக மரியாதையை கப்பல் ஏற்றுகின்றனர். மற்றும் சிலர் சமூக சீர் திருத்தம் செய்கின்றோம் என்ற பெயரில் அதை ஊதிப் பெருப்பித்து மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிப் பகிர்ந்து தெரியாதவர்களுக்கும் தெரியச் செய்து பார்க்காதவர்களையும் பார்க்கச் செய்து சமூகத்தின் மானத்தையும் மதிப்பையும் கலங்கப்படுத்தி வருகின்றனர்.
தவறு செய்கின்றவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்களைத் திருத்த முனைகின்றவர்கள் தமது செயற்பாடுகளால் தீமை இன்னும் அதிகம் பரவாமல் தவறு குறைவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து காரியமாற்ற வேண்டும்.
‘ ‘நீங்கள் பூமியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், ‘நாம் தாம் சீர்திருத்தம் செய்பவர்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள்.’
‘அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பம் விளைவிப்பவர்கள். எனினும், அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.’ (2:11-12)
சீர் திருத்தம் செய்கின்றோம் என்ற பெயரில் சிலர் தம்மையும் அறியாமல் ‘பஸாத்’ – குழப்பத்தை ஏற்படுத்தி வருவர் என்பதை இந்த வசனம் மூலம் அறியலாம். இன்றைய சமூக வலைத்தள போராளிகளில் சிலர் இதைத்தான் செய்து வருகின்றனர்.
இவர்கள் பரப்பும் செய்திகளால் தப்புச் செய்தவர்களது மானம் மட்டும் போவதில்லை. தப்புச் செய்தவர்கள் பற்றி ஏனைய சமூகங்களுக்கு எதுவும் தெரியாது முஸ்லிம்கள் மோசம் என்று நினைப்பார்கள். அதில் தப்புச் செய்தவர், அதைப் பரப்பியவர் அனைவரும் அடங்குவர். நாம் நமது சமூகத்தின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் தகர்த்து வருகின்றோம் என்பதை முதலில் உணர வேண்டும்.
குறிப்பாக இந்த சமூகப் போராளிகளின் இலக்காக இருப்பது முஸ்லிம் பெண்கள்தான். தவறு செய்யும் பெண்கள் பற்றிய செய்திகளைத்தான் பரப்பி வருகின்றனர். குறிப்பாக பாடசாலை பல்கலைக்கழகங்கள் செல்லும் பெண்கள் இவர்களது குறியில் முதலிடம் பெறுகின்றனர்.
இத்தகைய செய்திகள் மக்கள் மனதில் பெண் பிள்ளைக்குக் கல்வித் தேவை இல்லை என்ற மனநிலையை ஏற்படுத்தும் எமது சமூகப் பெண்கள் கல்வியைத் தவிர்த்தால் அதுவும் குறிப்பாக ஒழுக்கத்தை மதிக்கும் குடும்பப் பின்னணியில் வளர்ந்த திறமையான பெண்கள் கல்வியை விட்டால் சமூகத்திற்கு ஏற்படப் போகும் ஆபத்தை நாம் உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.
இன்றைய இலங்கை முஸ்லிம்களின் கல்வியின் 80 வீதமான பங்கு பெண்களின் கையில்தான் உள்ளது. முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் பெரும்பான்மையானவர்கள் ஆசிரியைகளே! 50 பெண் ஆசிரியைகளுக்கு 10 அல்லது 15 ஆண் ஆசிரியர்களே எமது சமூகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பெண் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டால் அது முஸ்லிம் பாடசாலைகளைப் பெருமளவில் பாதிக்கும். அதன் பின்னர் மாற்று மதப் பெண் அல்லது ஆண் ஆசிரியர்கள் கையில்தான் எமது பிள்ளைகளைக் கல்விக்காக ஒப்படைக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். இது எவ்வளவு பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் சமூகத்தில் அதிலும் பெண்கள் மத்தியில் கல்வியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. கீழே நான் குறிப்பிடும் புள்ளி விபரங்களைச் சற்று அவதானியுங்கள்.
1900 இல் அரசாங்க உதவி பெற்ற ஆரம்ப பாடசாலைகளின் விபரம் இப்படி இருந்தது.
பௌத்த பாடசாலை 142 மாணவர்கள் – 18,700
ஹிந்து பாடசாலை 45 மாணவர்கள் – 6,560
முஸ்லிம் பாடசாலை 04 மாணவர்கள் – 362
இந்த நிலையில் இருந்த சமூகத்தை கல்வி வழிக்குக் கொண்டு வர எமது மூதாதையர்கள் நிறையப் போராட்டங்களும் தியாகங்களும் செய்துள்ளனர். நாம் நமது பதிவுகளால் பழைய நிலைக்கு சமூகத்தைத் துரத்தி விடக் கூடாது. தற்போது முஸ்லிம்களின் பல்கலைக்கழக நுழைவும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.
2002-2003 4.5%
2003-2004 5.46%
2004-2005 6.1%
2005-2006 6.4% Sri Lanka University Statistics – 2006)
இவ்வாறு வளர்ந்து வந்த நிலை பின்வருமாறு உயர்ந்துள்ளது.
2013-2014 7.95%
2014-2015 8.07% (Sri Lanka University Statistics – 2006)
இதில் மருத்துவ மற்றும் பொறியியல் துறையில் போதியளவு முன்னேற்றம் இல்லை என்றாலும் எமது விகிதாசாரத்திற்கு ஏற்ற பல்கலைக்கழக நுழைவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்களை கல்வித் துறையை விட்டும் துரத்தும் விதத்திலாக நடந்து கொள்வது பெண் படிக்கச் சென்றால் ஒழுக்கம் கெட்டு விடுவாள் என்ற எண்ணத்தை நல்ல பெற்றோர் மனதில் ஏற்படுத்துவது பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.
இந்த சூழ்நிலையில் ஆண்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவதுடன் பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்விக்குச் செல்லும் மாணவ-மாணவியர்களை உலமா சபை, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் அவர்கள் கல்விச் சாலைக்குள் நுழையும் முன்னரே தனியாக எடுத்து தர்பிய்யா கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது.
நல்ல பிள்ளைகள் எங்கு சென்றாலும் நன்றாகவே இருப்பார்கள். ஒரு பெண் கெட்டுப் போக வேண்டும் என்றால் அவளது வீடு கூட அவளுக்குப் போதுமானதுதான். எனவே, பல்கலைக்கழகம் சென்றுதான் அவள் கெட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே நேரம் சூழல் தாக்கத்தையும் மறுப்பதற்கில்லை.
படித்த பெண்கள் மீது தப்பெண்ணம் ஏற்படுத்தப்பட்டால் படித்த பெண்களை மணம் முடிக்க ஆண்கள் தயங்குவர். அவர்களை மருமகளாக்க ஆணைப் பெற்றவர்கள் பின்நிற்பார்கள். இப்போதே படித்த பெண்களுக்கு மாப்பிள்ளைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலை ஏற்பட்டால் எமது சமூகத்தில் உள்ள படித்த பெண்கள் அந்நியர்களுடன் கலப்பு மணம் செய்யும் நிலை இன்னும் அதிகரிக்கும். இது எமது சமூகத்தைப் பெரிய அளவில் சரித்துவிடும்.
எனவே, எமது பதிவுகள், எமது செயற்பாடுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் மானத்தையும் மரியாதையையும் சிதைக்கக் கூடாது என்பதில் முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கூரையை எரித்து குளிர் காய முடியாதல்லவா?
அத்துடன், கல்வி நிலையங்களில் எமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கக் கூடிய அமைப்பிலான செயற்திட்;டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏதாவது நடந்தால் அசிங்கப்படுத்தி நாரடிக்க வேண்டும் என்ற கோணத்தில் செயற்படாமல் இந்தத் தவறு இனி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்ற கோணத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும். தீமையைத் தடுப்பதில் தீவிரம் காட்டினால் வரம்புகளை மீறி செயற்பட்டால் அது அழிவைத்தான் தரும் என்பதைத்தான் முன்னர் நாம் கூறிய ஹதீஸ் மூலம் அறிய முடிகின்றது.
இறுதியாக, புனித ரமழான் எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. ரமழான் கால செயற்பாடுகள் சில போது வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. ஜமாஅத்துக்கள் ரமழானை சண்டைக்கும், சர்சைக்குமுரிய மாதமாக்காமல் முடிந்தவரை ரமழானை ஆன்மீகப் பக்குவத்திற்குப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
இனவாதப் பேச்சுக்கள் அடங்கிவிட்டது போல் இருந்தாலும் அது ஓய்ந்துவிடவில்லை. எனவே, ரமழான் காலங்களில் பிற சமய மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதத்தில் செயற்பட்டு இனவாத செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் நாம் செயற்பட்டுவிடக் கூடாது.
பெண்கள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தால் பாதுகாப்பு விவகாரத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பிற சமய மக்கள் சூழ இருக்கும் பள்ளிகளில் ஒலிபெருக்கிகளை அதிகம் பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும். உலமாக்களினதும் கல்விமான்களினதும் வழிகாட்டலுக்கு ஏற்ப ரமழானுக்குக் கலங்கம் ஏற்படாத வண்ணத்தில் நடந்து கொள்வதுடன் ஆன்மீகப் பக்குவத்தையும் நோன்பின் நோக்கத்தையும் அடைந்து கொள்ள முயல்வோமாக!