– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 –
இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு உலகில் நிலவி வருகின்றது. இந்த நோய் இலங்கையையும் தொற்றியுள்ளது. இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் உள்ளன. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இந்த சந்தேகங்களை சாட்டாக வைத்து இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்து வருகின்றனர்.
பலதார மணம்.
உணவுக்காக உயிர்களை அறுப்பது.
பெண்களின் ஆடை.
பெண்களின் சொத்துரிமை.
இவ்வாறு மார்க்க ரீதியான சந்தேகங்கள் பல உள்ளன. எமது முஸ்லிம்களுக்கே இது பற்றி சரியான தெளிவு இல்லாத போது அவர்களுக்குத் தெளிவு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, அவர்கள் மொழியில் அவர்களும் புரிந்து கொள்ளக் கூடிய காரண-காரியங்களுடன் இவை பற்றி அவர்களுக்குத் தெளிவு படுத்துவது எமது கடமையாகும்.
இவ்வாறே முஸ்லிம்களின் பொருளாதார நடவடிக்கை, குடும்ப அமைப்பு, குழந்தை பெறும் வீதம் என பல சந்தேகங்கள் உள்ளன. இவற்றையும் நாம் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் உள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி விட்டால் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுபவர்களின் செயற்திட்டத்தில் பாதி பலவீன மடைந்துவிடும்.
இவ்வாறே முஸ்லிம்கள் பற்றி பரப்பப்படும் அவதூறுகளுக்கும் நாம் பதிலளிக்காது விட்டது பாரிய சந்தேகத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது எம்மைப் பற்றிய அவதூறுகளோ ஐயங்களோ எழ நாம் இடமளிக்கலாகாது.
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர் உம்ராவுக்காக வந்த நபியவர்கள், ‘நாம் உம்றாவுக்குத்தான் வந்துள்ளோம், போர் செய்ய வரவில்லை’ என்ற தகவலைத் தெரிவிக்க உஸ்மான்(வ) அவர்களைத் தூதனுப்பியது இதைத்தான் உணர்த்துகின்றது.
எம்மைச் சூழ்ந்துள்ள சமகால சூழ்நிலை மாற வேண்டும் என்றால் நாம் முதலில் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப எம்மை சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மத நல்லிணக்கம் என்ற பெயரில் செய்யும் சில வேலைகள் எமக்கு மத்தியில் பிளவையும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிதலையும் ஏற்படுத்திவிடும். அச்சமான சூழல் நீங்கி அமைதியான நிலை ஏற்பட வேண்டும் என்றால் என்னை மாத்திரம் வணங்குங்கள், எனக்கு யாதொன்றையும் இணைவைக்காதீர்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.
‘உங்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங் களும் புரிந்தோருக்கு இவர்களுக்கு முன்னுள் ளோர்களை பூமியில் அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் ஆக்குவதாகவும், இவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட இவர்களது மார்க்கத்தை உறுதிப்படுத்துவதாகவும், இவர்களது அச்சத்திற்குப் பின்னர் நிச்சயமாக பாதுகாப்பை இவர்களுக்கு ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கின்றான். இவர்கள் எனக்கு எதனையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள். இதன் பின்னரும் யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள்தாம் பாவிகள்.’ (24:55)
எனவே, சோதனைகளின் போது இஸ்லாமிய அகீதாவில் உறுதியாக இருப்பதுதான் சரியான தீர்வாகும்.
அத்துடன் இஸ்லாம் என்றால் என்ன என்பதை அடுத்தவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படைகளை அவர்களுக்கு கற்பித்து செய்து விட்டால் அவர்களுக்காக நாங்கள் நடிக்க வேண்டிய தர்ம சங்கட நிலைக்கு ஆளாக வேண்டி இருக்காது.
இந்த நாட்டில் 50-100 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை மாற்று மத்தவர்களுக்கு மத்தியில் தஃவா செய்யும் பணியை நாம் ஆரம்பித்திருந்தால் இலங்கையின் நிலை மாறியிருக்கலாம். இப்போது காலம் சென்றுவிட்டாலும் கடமை நீங்கிவிடவில்லை. இஸ்லாத்தினை அதன் தூய்மையான வடிவில் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியில்; முன்வைக்கும் பணியை நாம் துவங்கினால் மாற்றங்களைக் காணலாம்.
இதற்கு மார்க்க அறிவும், மொழியாற்றலும், செய்திகளை தர்க்கரீதியான சான்றுகளுடன் முன்வைக்கும் திறமையும் கொண்டவர்கள் களமிறக்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களை இதற்கு நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நனிநபர் விமர்சனங்கள் வரும் போதும் தனிப்பட்ட ரீதியில் ஜமாஅத்துக்கள் விமர்சிக்கப்படும் போதும் விழுந்து விழுந்து பதில் சொல்லும் நாம் இஸ்லாமும் முஸ்லிம்களும் விமர்சிக்கப்படும் போதும், தவறாகச் சித்தரிக்கப்படும் போதும் பதில் சொல்ல களம் இறங்காதது இஸ்லாத்திற்கு நாம் செய்யும் பாரிய துரோகமாகவோ பார்க்க வேண்டியுள்ளது.