Featured Posts

மனிதர்கள் நான்கு வகை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 –

மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் – உலகில் வளமாக வாழ்பவர்.
2. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் – உலகில் கஷ்டமாக வாழ்பவர்.

3. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் – உலகில் வளமாக வாழ்பவர்.
4. அல்லாஹ்வுக்கு மாறு செய்பவர் – உலகில் கஷ்டமாக வாழ்பவர்.

இதில் நீங்கள் எந்த வகை? நீங்கள் முதலாம் தரத்தில் உள்ளவர்களா? இது இயல்பானதுதான். இது பற்றி அல் குர்ஆன் இப்படிக் குறிப்பிடுகின்றது.

‘ஆணோ அல்லது பெண்ணோ நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறம் புரிந்தால் அவருக்கு நல்வாழ்வு அளிப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்கு வழங்குவோம்’ (16:97)

நீங்கள் நான்காம் தரத்தைச் சேர்ந்தவர்களா? அதுவும் இயல்பானதுதான். இகு குறித்தும் அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

‘எவன் எனது உபதேசத்தைப் புறக்கணிக் கின்றானோ நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. மேலும், நாம் அவனை மறுமை நாளில் குருடனாக எழுப்புவோம்.’ (20:124)

நீங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் என்றால் உங்கள் நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1. அல்லாஹ் உங்களை நேசிக்கின்றான். அதனால் உங்கள் பொறுமையைச் சோதித்து உங்கள் அந்தஸ்த்தை உயர்த்த விரும்புகின்றான்.

‘நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!

‘அவர்கள் யாரெனில் தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறுவார்கள்.

‘அத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிடமிருந்து புகழுரைகளும், கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.’
(2: 155-157)

2. நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராக இருந்தாலும் உங்களை அறியாமல் தவறுகளும் தப்புக்களும் செய்பவர்களாக இருக்கலாம். அதனால் அல்லாஹ் உங்களுக்கு கஷ்டத்தைத் தந்து அதனால் நீங்கள் தவ்பா செய்வதற்குரிய சூழலை உண்டுபண்ணலாம்.

உங்களுக்கு மறுமையில் தண்டனையை இல்லாமலாக்குவதற்காக இம்மையில் உங்கள் பாவங்களுக்கான கஷ்டங்களைத் தருவதாக இது இருக்கலாம்.

‘அவர்கள் (பாவங்களிலிருந்து) மீண்டு விடும் பொருட்டு பெரிய வேதனைக்கு முன் குறைந்த வேதனையை நிச்சயமாக நாம் அவர்களுக்குச் சுவைக்கச் செய்வோம்.’ (32:21)

நீங்கள் நான்காம் வகையைச் சார்ந்தவராக அதாவது, பாவம் செய்தும் வளமாக வாழ்பவராக இருந்தால் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், அல்லாஹ் உங்களை விட்டுப் பிடிக்கின்றான். தூண்டில்காரன் தூண்டிலில் சிக்கிய மீனை வசமாக மாட்ட வைப்பதற்காக விட்டுக் கொடுப்பது போல் விட்டுப் பிடிக்கின்றான். எங்காவது ஓரிடத்தில் நீங்கள் வசமாக மாட்டிக் கொள்வீர்கள்.
‘அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்து விட்டபோது, சகலவற்றின் வாயில்களையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டோம். தமக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த போது திடீரென அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் (அனைத்து நலன்களிலிருந்தும்) நிராசையடைந்து விட்டனர்.’ (6:44)

‘மேலும், நான் அவர்களுக்கு அவகாசம் அளிப்பேன். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக வலிமையானது. ‘ (68:45)

எனவே, நீங்கள் நல்லவராக இருந்தும் வாழ்வில் கஷ்டங்களை அனுபவிப்பவராக இருந்தால் கவலை கொள்ளாதீகள். நீங்கள் மார்க்க விதிகளை மீறி நடந்தும் உங்களுக்கு வளமான வாழ்வு அமைந்திருந்தால் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து உங்களை மாற்றிக் கொள்ள முற்படுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *