அண்மையில் ஊரில் நிகழ்ந்த இளம் பெண்ணொருவரின் மரணம் என்னையும் பாதித்திருந்தது. அவர் சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவியிருந்தார்.
வைத்தியர்கள் மூலம் தனது இறுதிமூச்சு நெருங்குவதை அறிந்திருந்த அப்பெண் ஆத்மீக ரீதியாக ஏற்கெனவே பண்பட்டவராயினும் தன்னை அதில் மேலும் ஈடுபடுத்தியதோடு, தான் நினைத்த எல்லைவரை இறை திருப்திக்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த முயற்சியின் உச்சமாக புனித உம்றாக் வணக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார்.
எதிர்வு கூறியபடியே சில மாதங்களுக்குப் பின்னர் கிடைத்த அவரது மரணச் செய்தி எமக்குப் பிரிவுத் துயரை தந்திருந்தாலும் தனக்குள் திருப்தியோடு மரணிக்கும் அவகாசத்தை இறைவன் அப்பெண்ணுக்கு வழங்கியிருந்தமை பாக்கியம் என்றே எண்ணுகிறேன்.
மரணத்தறுவாயில் ஆத்மாக்கள் “எனக்கு இன்னும் ஒரு வினாடிப் பொழுதேனும் நீடித்து தரமாட்டாயா?…
என இறைவனிடம் மன்றாடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படியொரு நிலைமை இப்பெண்ணைத் தழுவாமல் சில மாதங்களை மரணத்திற்கான முன்னாயத்திற்காகப் பெற்றிருந்தார் என்பது சிந்திக்கத்தக்கது.
அண்மையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அலி பெனார்ட் என்ற பணக்கார இளைஞரும் இப்படியான மரணத்தையே தழுவியிருந்ததாக ஊடகங்கள் ஆச்சரியம் கலந்த கோணத்தில் அதை வெளியிட்டிருந்தன.
திடீர் மரணங்களிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுமாறு நபியவர்கள் எமக்கு ஏவியிருக்கிறார்கள். எமது மரணங்களின் நிலை எவ்வாறானது என்பதை இறைவன் வெளிப்படுத்தினால் தவிர எம்மால் யூகிக்க முடியாததொன்றாகும்.
மரணம் நிச்சயிக்கப்பட்டதாயினும், மரணத்திற்கும் எமக்கும் இடையிலான தூரம் அதிகரிக்கவும் எம் ஆயத்தங்கள் ஈருலக வெற்றியை நோக்கி நடைபோடவும் இறைவனது பேரருளை வேண்டுகிறேன்.
– பர்சானா றியாஸ்