Featured Posts

வானவர்கள்!

அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது இஸ்லாத்தில் இரண்டாவது அம்சமாகும். இவர்களை அரபு மொழியில் ‘மலாஇகா’ எனக் கூறப்படும். கண்களுக்குப் புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்பட முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.

இவர்களுல் பிரதானமானவர் பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர் வசம் கொண்டு வந்து சேர்ப்பதாகும். இவர்களையடுத்து இன்னும் பல முக்கியமான வானவர்கள் உளர். இவர்களின் எண்ணிக்கையை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.


“கண்களுக்குப் புலப்படாத இந்த மலாஇகாமார்களை எப்படி நம்புவது? நாம்தான் காணவில்லையே” என நீங்கள் கேட்கலாம். எனினும் முக்கியமான இரண்டு அடிப்படைகளில் இக்கேள்வி அவசியமற்றதாகி விடுகிறது என நினைக்கிறேன்.

1. மனிதன் கற்காலத்திலிருந்து எத்தனையோ இயற்கையான அம்சங்களை நம்பி வந்துள்ளான். இன்றும் நம்புகின்றான். அவற்றுள் பலவற்றை அவன் கண்ணால் பார்க்கவில்லை. காதால் கேட்கவில்லை. மூக்கால் நுகரவில்லை. கைகளால் தொட்டுப் பார்க்கவும் இல்லை. எனினும், அவற்றை நம்பினான். நம்புகிறான். காரணம், அவற்றைப் பற்றிய அறிவுள்ளவர்கள் நம்பும்படி மொழிந்ததுதான்.

2. ‘மலாஇகாமார்கள் என்றொரு படைப்பினர் இருக்கின்றனர்; நம்புங்கள்’ என்று மொழிந்தது முதலில் அல்லாஹ்வும், அப்பால் அவனது தூதர்களுமாகும்.

அல்லாஹ்வோ அவனுடைய தூதர்ளோ ஒருபோதும் பொய்யுரைப்பவர்கள் அல்லர். எனவே ஒரு முஸ்லிம் எத்தகைய வினாவும் எழுப்பாது வானவர்கள் மீது நம்பிக்கைக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.

 குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *