மறுமை வாழ்வென்பது பகுத்தறிவு ரீதியான உண்மை என வாதிக்கும் அல்குர்ஆன் அந்த நம்பிக்கையை இரு சிந்தனைகள் ஊடாக முன்வைக்கிறது. ஒன்று இறை நம்பிக்கையோடு தொடர்பு படுகிறது. இங்கு அவ்விரு சிந்தனைகளும் விளக்கப்படுகிறன:
(1) இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும்:
அல்குர்ஆன் மறுமை நாள் நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என விளக்குகிறது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்பவன் இதனைப் படைத்த ஒரு மாபெரும் படைப்பாளன் உள்ளான் என நம்புகிறான். அந்த இறை நம்பிக்கையின் தர்க்கரீதியான விளைவாக மறுமை நாள் நம்பிக்கை அமைகிறது. அதாவது அல்குர்ஆன் காட்டுகின்ற இறைவனை நம்புபவன் மறுமை நாளையும் கண்டிப்பாக நம்ப வேண்டியவனாகிறான்.
அல்லாஹ் ஞானமுள்ளவன், ஆழ்ந்த அறிவு படைத்தவன் என்ற கருத்தை அல்குர்ஆன் பல நூற்றுக்கணக்கான வசனங்களின் ஊடாக முன்வைக்கிறது. அத்தோடு அல்லாஹ் மிகுந்த கண்ணியமும், பெருமையும் கொண்டவன். எனவே அல்லாஹ்வின் செயல்கள் அனைத்தும் இப்பண்புகளைப் பிரதிபலிப்பதாகவே அமையும். அவனது செயல்கள் அறிவு பூர்வமானதாக இருக்கும். ஆழ்ந்த நோக்கம் கொண்டதாக அமையும். விளையாட்டும், கேளிக்கையும் கொண்டதாக அமையாது. மிகுந்த பொறுப்பு வாய்ந்த உயர்ந்த செயல்களாக அவை அமையும். இந்த உண்மையை இப்பௌதீக உலகமும், அதன் இயக்கமும் நன்கு தெளிவு படுத்துகின்றன.
இந்தப் பின்னணியில் மனித வாழ்வு நோக்கப்பட வேண்டும். ஞானமும், அறிவும், கண்ணியமும், பெருமையும், உயர்வும் கொண்ட இறைவன் மனித வாழ்வை பொருளோடும், கருத்தோடும், ஆழ்ந்த நோக்கத்தோடுமே அமைத்திருக்க வேண்டும். எப்பொருளும், கருத்துமின்றி வீணாக, விளையாட்டாக அவன் இந்த மனித வாழ்வை ஆக்கியிருக்க மாட்டான். அது அல்லாஹ்வின் இத்தகைய அடிப்படைப் பண்புகளுக்கே முரணானது. இக்கருத்தை அல்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. அவற்றில் ஒன்றை இங்குத் தருகிறோம்:
“உங்களை நாம் படைத்ததெல்லாம் விணாக, விளையாட்டாகத்தான் எனவும், நீங்கள் எம்மிடம் திரும்பி கொண்டு வரப்படமாட்டீர்கள் எனவும் நினைக்கிறீர்களா? சத்தியமான ஆட்சியாளன் அல்லாஹ் மிக உயர்ந்தவனாவான். அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை. அவன் கண்ணியமிக்க அர்ஷின் அதிபதியாவான்” (முஃமினூன்: 115, 116)
மனிதன் இறந்தால் அத்தோடு அனைத்தும் முடிந்து விடுகிறது. அவன் அல்லாஹ்விடம் செல்வது, செயல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எதுவும் கிடையாதென்றால் இந்த வாழ்வுக்கு எந்தப் பொருளும் இருக்காது. இவ்வளவு பாரிய பிரபஞ்சமும், உயர்ந்த மனித வாழ்வும் வீண் விளையாட்டு என்றாகி விடும். உண்மை அவ்வாறன்று. இந்த உலகை ஆளும் அல்லாஹ் சத்தியமானவன், உயர்ந்தவன்,அவனது சிம்மாசனம் உயர்ந்தது, கண்ணியத்திற்குரியது, எந்தப் பொருளுமின்றி, கருத்துமின்றி அவன் தொழிற்படுவதில்லை. எனவே இவ்வுலகைப் படைத்த அவன் நிச்சயமாக இன்னொரு நிரந்தர உலக வாழ்வையும் உருவாக்கியுள்ளான். இக்கருத்தை இந்த வசனம் மிகத் தெளிவாக சொல்கிறது.
ஸூரா பாத்திஹாவின் ஆரம்ப வசனங்கள் மறுமை நாள் நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது என்பதை மிகவும் அழகாகவும், தர்க்க ரீதியான ஒழுங்கோடும் விளக்குகின்றன. அந்த ஸூரா இந்த உலகையும், மனித வாழ்வையும் ஆய்கின்ற ஒரு மனிதனின் உளப் பதிவுகளின் வெளியீடு போன்று அமைக்கப்பட்டுள்ளது. மனிதன் பேசுவது போன்றே அதன் வசனங்கள் அமைந்துள்ளன.
மனிதன் இந்த உலகையும், அதில் காணப்படும் மனித வாழ்வையும் ஆராய்கிறான். இப்பாரிய பிரபஞ்சமும், அதில் அமைந்துள்ள மனித வாழ்வையும் கண்டு அதிசயிக்கிறான். பிரமித்துப் போகிறான். விளைவாக புகழுணர்ச்சியால் உந்தப்பட்டு இவற்றைப் படைத்த அந்த மாபெரும் படைப்பாளனைப் புகழ்கிறான்:
“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!”
தொடர்ந்து அவன் இவ்வுலகைப் படைத்து, காத்து, இரட்சித்து, வளர்த்து வருகின்றான் என்கிறான்:
“உங்களின் இரட்சகன் அவன்.”
இந்த உலகையும் மனித வாழ்வையும் வளர்க்கும், காக்கும், ஆளும் அந்த அல்லாஹ் இரட்சகன் அன்போடும், இரக்கத்தோடும் இவ்வுலகை ஆள்வதாக அவனுக்குத் தெரிகிறது. அன்பும், எல்லையற்ற கருணையுமே இந்த உலகு காக்கப்படுவதன், வளர்க்கப்படுவதன் அடிப்படை என அவனுக்குப் புரிகிறது. எனவே அடுத்தது:
“அவன் அருளாளன், அன்புடையோன்.” என்கிறான்.
இந்தப் பாரிய பிரபஞ்சமும், மனித வாழ்வும் எந்த அர்த்தமுமின்றி, நோக்கமின்றித் தோன்றுவது சாத்தியமில்லை. இந்த உலகைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறன் என்பதை ஏற்கும்போது இந்த உலகையும், வாழ்வையும் அர்த்தமில்லாமல் அவன் முடித்து விடுவான் என்பது அந்த மாபெரும் படைப்பாளனையே, இரட்சகனையே குறை காண்பதாக அமையும். எனவே அவன் தொடர்ந்து சொல்கிறான்”
“அவன் கூலி கொடுக்கப்படும் நாளின் அதிபதியாவான்.”
கீழ்வரும் வசனத்தில் இக்கருத்தை அல்குர்ஆன் மிகவும் நுணுக்கமாகச் சொல்கிறது:
“வானத்தையும், பூமியையும் அவற்றிடையே இருப்பவற்றையும் நாம் விளையாட்டாகப் படைக்கவில்லை. விளையாட்டொன்றை செய்து கொள்ள வேண்டியிருப்பின் எம்மிலிருந்தே அதனைச் செய்திருப்போம். நாம் அவ்வாறு செய்பவர்களாக இருக்கவில்லை.” (ஸூரா அன்பியா: 16,17)
அதாவது இந்த உலகமும் இந்த மனித வாழ்வும் இப்படியே மறுமையின்றி முடிந்து விட்டால் அது ஒரு விளைடாட்டாக, அர்த்தமற்றதாக முடிந்து விடும். அப்படியொரு விளையாட்டைச் செய்வதாயின் இவ்வளவு பாரிய பிரபஞ்சத்தையும், உயர்ந்த மனித வாழ்வையும் அல்லாஹ் ஆக்கியிருக்க மாட்டான். அப்படியொரு விளையாட்டுத் தேவையாயின் அவனுக்குள்ளேயே அல்லாஹ் அதனை வைத்துக் கொண்டிருப்பான். அல்லாஹ் அப்படியானவனன்று. கருத்தோடும், காரணத்தோடும், அறிவோடும், ஞானத்தோடும் அவன் செயற்படுகிறான். எனவே அவன் படைத்த பிரபஞ்சமும், மனித வாழ்வும் மிகுந்த கருத்தோடும், பொருளோடுமே முடிவுறும் என விளக்குகின்றன இந்த வசனங்கள்.
அல்குர்ஆன் முன்வைக்கின்ற அல்லாஹ்வின் முக்கிய பண்புகளில் இன்னொன்று அவன் நீதியானவன் என்பதாகும். அல்லாஹ்வை நீதியாளன் என ஏற்கின்ற போது மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்வது அவசியமாகிறது. மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளாத போது அது அல்லாஹ்வை அநீதியானவன் எனக் கூறியதாகும். அது இறைநிராகரிப்பு என்பதில் சந்தேகமில்லை. கீழ்வரும் இறைவசனங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன:
“நாம் முஸ்லிம்களை பாவிகள் போன்றாக்குவோமா….. என்ன நீங்கள் எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?” (ஸூரா கலம்: 35,36)
பாவங்கள் செய்தவர்களை ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்கள் போன்று நாம் ஆக்குவோம் என அவர்கள் நினைக்கிறார்களா? அவர்களின் வாழ்வும் மரணமும் சமமாகவே அமைந்து விடும் என நினைக்கிறார்களா? அவ்வாறாயின் அவர்களது தீர்ப்பு எவ்வளவு மோசமாக அமைந்து விடுகிறது!
நல்லவன், தான் செய்த நற்செயலுக்கான கூலியை இவ்வுலகிலேயே பூரணமாகப் பெற்றுக் கொள்வதில்லை. தீமைகளில் உழன்று வாழ்பவனும் எந்தத் தீங்கும் அண்டாமலே அழகாக, சந்தோசமாக வாழ்ந்து விட்டுச் செல்லும் சந்தர்ப்பங்களும் இந்த உலக வாழ்வில் உள்ளன. குற்றங்கள் புரிந்தவன் பிடிபட்டு தண்டனை அனுபவிக்காமல் போய்விடும் சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. இவ்வாறு வாழ்க்கைஒருவகை முரண்பாடான நிலையிலேயே முடியுமாயின் இவ்வுலகைப் படைத்தவன் பெரிய அநீதியாளன் என்று கொள்ள வேண்டி வரும். அல்லாஹ் அப்படியானவன் அல்ல. அவன் மிகுந்த நீதியாளன். அல்குர்ஆன் ஸூரா அத்தீன் இக்கருத்தை சிறப்பாக விளக்குகிறது:
“மனிதனை நாம் மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம். பின்னர் அவனை மிகத் தாழ்ந்தவனாக மாற்ற விடுகிறோம்.
நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் புரிந்தவர்களைத்தவிர, அவர்களுக்கு அறுபடாத கூலியுண்டு.
இவ்வாறிருக்க மறுமை நாளைஉம்மிடம் எது நிராகரிக்க முடியும்?
அல்லாஹ் நீதி வழங்குபவர்களிலெல்லாம் உயர்ந்த நீதி வழங்குபவனல்லவா?
இந்த வகையில் மறுமை நாள் நம்பிக்கை என்பது அல்லாஹ்வை ஈமான் கொள்வதன் ஒரு பகுதியாகிறது. அதாவது ஞானம், அறிவு, நீதி என்ற இறைப்பண்புகளை மிகச் சரியான முறையில் விளங்கி நம்பிக்கை கொண்டதாக அது அமைகிறது. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு மறுமையை நிராகரித்தால் அது சரியான இறைநம்பிக்கை ஆகாது. இறை நிராகரிப்பாகவே அது அமையும். அல்லாஹ்வை அநியாயக்காரன் எனவும், அவன் அர்த்தமின்றி பொருளின்றி செயற்படுபவன் என்று சொன்னதாகவும் அது அமையும். இது இறை நிராகரிப்பு என்பதில் சந்தேகமில்லை. அல்குர்ஆன் இக்கருத்தை சில வசனங்களில் விளக்கியுள்ளது. உதாரணமாக கீழ்வரும் வசனத்தைத் தருகிறோம்:
“நீர் ஆச்சரியப்படுவதாயின் நாம் மண்ணாகிப்போனால் ஒரு புதிய படைப்பாக நிச்சயம் தோன்றுவோமா? என அவர்கள் சொல்வது குறித்தே ஆச்சரியப்பட வேண்டும். அவர்கள் தாம் தமது இரட்சகனை நிராகரித்தவர்களாவர்.” (ஸூரா ரஃது:5)
மறுமை நாளை நம்பிக்கைக் கொள்ளாத உள்ளம் அல்லாஹ்வை சரியாக நம்புவது சாத்தியமில்லை என்பதை மிக நுணுக்கமாகக் கீழ்வரும் வசனமும் தருகிறது:
“அல்லாஹ் மாத்திரம் ஞாபகப்படுத்தப்பட்டால் மறுமை நாளை நம்பாதோரின் உள்ளங்கள் ஒடுங்கி விலகிக் கொள்கின்றன.” (ஸூரா ஜுமர்: 45)
மறுமை நாளை ஈமான் கொள்ளாதவர்கள் அல்லாஹ் ஒருவன் என்ற தௌஹீதை ஏற்க முடியாது போவார்கள். சமூக வாழ்வில் அற்றுப்போயுள்ள நீதி முரண்பாடான நிலைகள் என்பனவும் அவர்கள் பல தெய்வ வணக்கங்களில் ஈடுபடக் காரணமாக உள்ளன. சமூக வாழ்வின் ஒவ்வொரு வித்தியாசமான நிலைக்கும், காணப்படும் தீமைகளுக்கும் கூட ஒவ்வொரு கடவுளை ஆக்கிக் கொண்டு வணங்குவர். இந்நிலையில் ஒரே கடவுட் கொள்கையைக் கேட்கும் போது அவர்களது உள்ளங்கள் மிரள்கின்றன. ஏற்கமுடியாத நிலைக்கு உட்படுகின்றன என இவ்வசனம் சொல்கிறது. எனவேதான், இவ்வசனத்தின் அடுத்தபகுதி…
“அவன் அல்லாதவர்கள் ஞாபகப்படுத்தப்படும் போது அவர்கள் சந்தோசமடைகிறார்கள்.” என்கிறது.
நாஸ்திக சிந்தனைப்போக்கு பரவலாகிவிட்ட நவீன காலப்பிரிவில், அந்த நாஸ்திக சிந்தனைக்கு விஞ்ஞான ரீதியான ஆய்வு காரணம் என்பதை விட மறுமை நாள் பற்றியே அறிவின்மையே காரணம் என்பது மிகவும் பொருந்தும். சமூக வாழ்வில் நீதி சரியாக செயற்படாமை முரண்பட்ட சமூக நிலைகள் என்பன இறை நிராகரிப்புக்கு காரணமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.