Featured Posts

மறுமை நாள் (அத்தியாயம்-9)

விசாரணை

மஹ்ஷர் வெளியில் மிக முக்கிய அம்சம் அங்கு நடக்கும் விசாரணையாகும். மனிதர்கள் அனைவரும் தமது இறுதியான உலகுக்குப் போகும் முன்னால் அவர்கள் அங்கு செல்வதற்கான நியாயத்தை முன்வைப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.

இந்த விசாரணை குறித்து அல்குர்ஆன் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்குகிறது :

“நிச்சயமாக அவர்கள் எம்மிடமே மீண்டு வர வேண்டும். அத்தோடு அவர்களை விசாரணை செய்வதும் எமது பொறுப்பேயாகும்.
(ஸூரா வாகியா : 25, 26)

எனக் கூறும் அல்குர்ஆன் விசாரணைக்காக மனிதர்கள் இறைவன் முன்னால் கொண்டு வரப்படுவார்கள் எனவும் கூறுகிறது :

“உமது இரட்சகன் முன்னே அவர்கள் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்.” (ஸூரா கஹ்ப் : 48)

விசாரணைப் பற்றியும் அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது :

“உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி அவர்கள் அனைவரிடமும் நாம் கேட்போம்.” (ஸூரா ஹிஜ்ர் : 92, 93)

தொடர்ந்து அல்லாஹ் அணுவளவும் பிசகாத வகையில் ஓர் அற்ப செயல் கூட தவறி விடாத வகையில் மிகுந்த நுணுக்கமாக அன்று நீதி வழங்கப்படும் எனக் கூறுகிறான் :

“மறுமை நாளுக்காக நாம் நீதியான அளவுகோல்களை அமைப்போம். எந்த ஆன்மாவும் கொஞ்சமும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. ஒரு கடுகளவு விஷயமாயினும் அதனை நாம் கொண்டு வருவோம். கணக்கிடுவதற்கு நாமே போதும்.”
(ஸூரா அன்பியா : 47)

செயல்களை நிறுவும் வழிமுறை பற்றியும் அல்குர்ஆன் விளக்குகிறது. உலகில் வாழும் போதே மனிதனின் செயல்களைப் பதித்த மலக்குகளும், அவர்கள் பதித்த ஏடுகளும் நிறுவுவதற்கான முதற் சான்றாக அமையும். அத்தோடு மனிதனே அவனுக்கு சாட்சியாக அமைவான். அதாவது அவனது கைகள், கால்கள் போன்ற உறுப்புகளே அன்று சாட்சி சொல்லும். அல்குர்ஆன் இவற்றை கீழ்வருமாறு விளக்குகிறது :

“யாருக்கு அவரது செயற்பதிவேடுகள் வலது கையில் கொடுக்கப்படுகிறதோ அவர் இலேசான விசாரணைக்கு உட்படுவார். தன்னைச் சேர்ந்தவர்களிடம் அவர் மீண்டு செல்வார். யாருக்கு செயற்பதிவேடுகள் முதுகுப்புறத்தால் கொடுக்கப்படுகிறதோ அவர் அழிவையே அழைப்பார். நரகில் நுழைந்து எரிவார்.” (ஸுரா இன்ஷிகாக் : 7, 12)

“அந்நாளில் அவர்களது நாவுகளும், கைகளும், கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து சாட்சி சொல்லும்.”
(ஸூரா நூர் : 24)

“இன்று நாம் அவர்களது வாய்களுக்கு முத்திரை இட்டு விடுவோம். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை குறித்து அவர்களது கைகள் எமக்கு சொல்லும். அவர்களது கால்கள் சாட்சி சொல்லும்.” (ஸூரா யாஸீன் : 65)

மனிதர்களது நிலையைப் பொறுத்து இந்த விசாரணையின் கால அளவு குறுகியதாகவோ, மிக நீண்டதாகவோ, இலகுவானதாகவோ, கடினமானதாகவோ அமையும். செயற்பதிவேடுகள் காட்டப்படுவது தவிர்ந்து வேறெந்த விசாரணையும் இல்லாமலே சுவர்க்கம் செல்வோருமிருப்பர். நீண்ட நெடுங்காலம் விசாரணைக்காக நின்று அல்லல் படுவோரும் அங்கிருப்பர்.

ஸிராத்

விசாரணை முடிந்ததன் பின்னர் சுவர்க்கமோ நரகமோ செல்பவர்கள் ஒரு பாதை மீது நடந்தே அவற்றை அடைவார்கள்.

அல்குர்ஆன் இது பற்றிக் கீழ்வருமாறு சுட்டிக் காட்டுகிறது :

“உங்களில் எவரும் நரகத்தைக் கடந்து செல்லாதவராய் இருக்க முடியாது. இது முடிவு செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயமாகும். இதனை நிறைவேற்றுவது உமது இரட்சகனின் பொறுப்பாகும். இறையச்சம் கொண்டு வாழ்ந்தவர்களை நாம் காப்பாற்றுவோம். அநியாயக்காரர்களை அதிலே முழந்தாளிட்டு நிற்க விட்டு விடுவோம்.” (ஸூரா மர்யம் : 71,72)

முஸ்லிமாக வாழ்ந்தவர்கள் தமது நம்பிக்கை செயல்களுக்கேற்ப பல வித்தியாசமான வேகத்தில் இந்தப் பாலத்தைக் கடந்து செல்வர். நிராகரிப்பாளர்களோ இப்பாலத்தைக் கடக்க முயல்கையில் நரகத்தின் கிடுக்கிகளால் பிடிக்கப்பட்டு நரகில் விழுந்து விடுவர். முஸ்லிம்களில் சிலரும் அவர்கள் இழைத்து விட்ட பாவங்களின் காரணமாக இந்நிலை ஏற்படும். எனினும் அவர்கள் நரகில் நிரந்தரமாகத் தங்கி விடமாட்டார்கள்.

இவ்வுண்மைகள் அனைத்தையும் ஸுன்னா விரிவாகச் சொல்கிறது. எனவே தான் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமுக்கு தாம் எழுதிய விரிவுரை நூலில் கீழ்வருமாறு கூறுகிறார் :

‘ஆரம்ப கால அறிஞர்கள் ஸிராத் இருக்கிறது என்பதை ஏகோபித்த கருத்தாக சொல்கின்றனர். அது மக்கள் நடந்து செல்கின்ற நரகின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலமாகும். முஃமின், நிராகரிப்பாளன் அனைவருமே இதனைக் கடந்து செல்வர். முஃமின்கள் தமது நிலைகளுக்கேற்ப தப்பி விடுவர். ஏனையோர் நரகில் வீழ்ந்து விடுவர். உயர்ந்த கொடையாளனாகிய அல்லாஹ் எம்மைக் காக்கட்டும்.

மஹ்ஷர் வெளி குறித்த உண்மைகள் இவையே. எனினும் அல்குர்ஆன் மஹ்ஷர் வெளி குறித்து சித்தரிக்கும் காட்சிகளை வாசிக்கும் போதே மஹ்ஷர் வெளியின் பயங்கரம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மக்காவில் இறங்கிய ஸூராக்கள் அதிகமாக இக்காட்சிகளைத் தருகின்றன.

சுவர்க்கமும் நரகமும்

மறுமை நாளின் இறுதிக் கட்டம் சுவர்க்கம், நரகம் என்பதாகும். அங்குதான் நன்மை, தீமைகளுக்கான பூரண கூலியும் கிடைக்கப் பெறுகிறது.

சுவர்க்கம் முஃமின்களின் தங்குமிடமாக அமையும் எனவும் அது பல்வேறு தரங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும் எனவும், முஃமின்கள் அவர்களது ஈமான், செயல்கள் என்பவற்றின் தரத்திற்கேற்ப அங்கு அவர்களுக்கான இடத்தைப் பெறுவார்கள் எனவும் அல்லாஹ் கூறுகிறான். இதனை நாம் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் தெளிவாகக் காண்கிறோம்.

இந்த வகையில் அல்குர்ஆன் முஃமின்களை அஸ் ஸாபிகூன் (முண்ணனியில் நிற்பவர்கள்), அஸ்ஹாபுல் யமீன் (வலது சாரியினர்) என அவர்களது ஈமான், செயல்கள் என்பவற்றிற்கேற்ப பிரித்துக் காட்டுகிறது. ஸூரா வாகிஆவின் ஆரம்ப வசனங்களே இதனை விளக்குகின்றன.

அல்குர்ஆன் சுவர்க்கம் நரகங்களை விளக்கும் அமைப்பை நோக்கும் போது கீழ்வரும் உண்Mஐகளை விளங்க முடிகிறது :

1). மிகப்பெரிய உலகம் நாம் வாழும் இப்பிரபஞ்சத்தைப் போன்ற அல்லது அதனை விடவும் பெரியதொரு உலகமாக அது காணப்படும். அதாவது இன்னொரு தனி உலகில் இவ்வுலகை விட வித்தியாசமான ஒழுங்குகள் கொண்டதொரு உலகில் நாம் வாழப்போகிறோம். எத்தகைய குழப்பமும் பிரச்சினைகள், சிக்கல்களுமற்ற அமைதி நிறைந்த உலகமாக அது அமையும். அல்லது தீயவர்கள் தண்டனை பெறும் தனியான இன்னொரு உலகமாக அது காணப்படும். கீழ்வரும் வசனங்கள் அந்த உண்மையை விளக்குகின்றன :

“நீர் எங்கு நோக்கினாலும் அருட்கொடைகள் நிறைந்திருப்பதையும் ஒரு பெரும் பேரரசாக அது இருப்பதையும் காண்பீர்!” (ஸூரா இன்ஸான் : 20)

2). நரகமும், சுவர்க்கமும் பௌதீக ரீதியானவை. ஸ்தூல அமைப்புக் கொண்டவை. மனிதன் பௌதீக உடலோடும், உள்ளத்தோடும் அதனை அனுபவிப்பான். மனிதனை இவ்வுலகில் பௌதீக உடம்போடு படைத்து புலன்களைக் கொடுத்து அனுபவிக்க வைத்த அல்லாஹ் மீண்டும் அவனை உயிர்ப்பித்து வாழ வைக்கும் போது அதே ஒழுங்கையே ஏற்படுத்துகிறான்.

அல்குர்ஆனை வாசிக்கும் எவரும் இவ்வுண்மையை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில் தான் அல்குர்ஆன் மிக விரிவாக சிறு சிறு பகுதிகளாகக் கூட உடலின் பங்கினை அல்லது உடலுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை வர்ணித்துள்ளது. உதாரணத்துக்கு கீழே சில அல்குர்ஆன் வசனங்களைத் தருகிறோம் :

“சில முகங்கள் அந்நாளில் பொழிவுற்றிருக்கும், தமது செயல்கள் குறித்து திருப்தியுற்றிருக்கும். உன்னதமான சுவர்க்கத்தில் இருக்கும். வீணானவற்றை அவை அங்கு செவியுறமாட்டா. ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று அங்கிருக்கும். உயர்ந்த கட்டில்கள் இருக்கும். கிண்ணங்கள் வைக்கப்பட்டிருக்கும். தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அழகிய விரிப்புகளும் ஆங்காங்கே சிதறி விரிக்கப்பட்டிருக்கும்.” (ஸூரா காஷியா : 9, 16)

“அங்கு அவர்கள் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பர். அங்கு கடும் வெப்பத்தையோ கடும் குளிரையோ அவர்கள் காணமாட்டார்கள். அங்கு நிழல் அவர்கள் மீது தாழ்ந்திருக்கும். அதன் கனிகள் எப்போதும் அவர்கள் அருகில் இருக்கும். வெள்ளிக் குவலைகளும் கண்ணாடிப் பாத்திரங்களும் அவர்களைச் சுற்றி சுற்றி வரும். அக்கண்ணாடிக் குவலைகள் வெள்ளியால் ஆகியிருக்கும். அவை மிகச் சரியாக நுணுக்கமாக ஆக்கப்பட்டிருக்கும். அக்கிண்ணங்களில் இஞ்சிச் சுவை கலந்த பானங்கள் அவர்களுக்குக் குடிக்க கொடுக்கப்படும். அது சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றாகும். ‘ஸல்ஸபீல்’ என அது அழைக்கப்படும். மாறாத இளமைக் கொண்ட சிறுவர்கள் அவர்களைச் சுற்றி திரிந்து கொண்டே இருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் சிதறிய முத்துக்கள் எனக் கருதுவீர்.
(ஸூரா இன்ஸான் : 13, 20)

தண்டனை பற்றி விளக்கும் கீழ்வரும் வசனம் இக்கருத்தை நன்கு உறுதிப்படுத்துகிறது :

“எனது வசனங்களை நிராகரிப்போரை நரகில் எரிய விடுவோம். அவர்களின் உடற் தோல்கள் கருகி விடும் போதெல்லாம் வேதனையைச் சுவைப்பதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருப்போம்.” (ஸூரா அந்நிஸா : 56)

நோவையோ இன்பத்தையோ உணர தோல் அவசியம். தோல் கருகிப் போகும் போதெல்லாம் புதிய தோல்களை உருவாக்கி அல்லாஹ் வேதனையை உணரச் செய்கிறான் என இங்கு அல்குர்ஆன் விளக்கமாகக் கூறும்போது சுவர்க்க இன்பமும் நரகத்தின் துன்பமும் பௌதீக ரீதியானது என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

3). மறு உலக வாழ்வு என்பது அழிவற்ற நிரந்தர வாழ்வாகும். இக்கருத்தை அல்குர்ஆன் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்குகிறது. உதாரணமாகக் கீழ்வரும் வசனங்களைத் தருகிறோம்.

“யார் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை உபசரிக்க ‘பிர்தௌஸ்’ எனும் சுவனங்கள் உள்ளன. அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றை விட்டு வேறெங்கும் சென்று விட அவர்கள் சற்றும் விரும்ப மாட்டார்கள்.” (ஸூரா ஜுக்ருப் : 74,75)

கீழ்வரும் ஹதீஸ் இக்கருத்தை விளக்குகிறது :

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ‘சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் என் ஆகிவிட்டால் மரணம் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே கொண்டு வரப்பட்டு அறுக்கப்படும். பின்னர் ஒருவர் : சுவர்க்கவாசிகளே இனி மரணம் என்பது கிடையாதெனச் சத்தமிடுவார். அப்போது சுவர்க்கவாசிகளுக்கு ஏற்கனவே இருந்த சந்தோசம் மேலும் அதிகரிக்கும். நரகவாசிகளுக்கு ஏற்கனவே இருந்த கவலை மேலும் கூடும்.’ (ஆதார நூற்கள் : ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ் மனிதனை உண்மையில் நிரந்தர வாழ்வு கொண்டவனாகவே படைத்தான். இடையில் வரும் மரணம் தற்காலிகமானதே. இந்த உலக வாழ்வை சோதனைக்கட்டமாக அமைத்தான். இதன் விளைவாகவே அம்மரணம் அவசியப்பட்டது. இந்த அதி முக்கிய உண்மையை அல்குர்ஆன் இதனூடாகத் தருகிறது.

4). சுவர்க்க இன்பங்களோ, நரக வேதனையோ மனித கற்பனைக்கு எட்டாத மிகப்பெரிய விஷயங்களாகும்.

அல்குர்ஆன் சுவர்க்க இன்பங்களையும் நரக வேதனைகளையும் விவரித்து சொல்லியிருப்பினும் அவை அந்த வடிவைக் கொண்டிருக்கும் என்பதல்ல. மனிதன் கற்பனையிலும் எண்ணிப்பார்த்திராத உயர்ந்த, அழகிய இன்பங்களை அவன் பெறுவான்.

சுவர்க்க, நரகத்தின் பொதுவான அமைப்பை விளக்கவும், அங்கு காணப்படும் இன்ப, துன்பங்கள் பற்றிய ஓரளவாக அறிவைக் கொடுக்கவுமே அவற்றை அல்குர்ஆன் விவரித்துள்ளது. ஆனால் அவற்றின் உண்மை நிலையை அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதனால் இவ்வுலகில் இருந்து கொண்டு அவற்றைப் புரிந்து கொள்வது சாத்தியமானதல்ல. இவ்வுண்மையை கீழ்வரும் இறைவசனம் விளக்குகிறது :

“அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை எந்த மனிதனும் அறிய மாட்டான்.” (ஸூரா : ஸஜ்தா -17)

இதனைக் கீழ்வரும் ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது :

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; ‘அல்லாஹ் சொல்கிறான் : எனது நல்லடியார்களுக்காக நான் எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளத்திலும் தோன்றியிராதவற்றைத் தயார்படுத்தி வைத்துள்ளேன்.’

அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்து விட்டு கீழ்வரும் இறைவசனத்தை ஓதுங்கள் என்பார் : “அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை எந்த மனிதனும் அறிய மாட்டான்.” (ஸூரா : ஸஜ்தா -17) (ஆதார நூற்கள் ; ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் திர்மிதி, ஸஹீஹ் புகாரி, முஸ்னத் அஹ்மத், போன்றோரும் இதே கருத்தைத் தரும் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளனர்.)

மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *