Featured Posts

மறுமை நாள் (அத்தியாயம்-6)

மறுமை நாள் எப்போது தோன்றும்?

மறுமை நாள் எப்போது தோன்றும்? இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு முஸ்லிம் எப்படி விளங்கிக் கொள்வது என்பது மறுமை நாள் பற்றிய அறிவில் அடுத்த முக்கிய அம்சமாகும். மறுமை எப்போது தோன்றும் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்த உண்மையாகும். அல்லாஹ் அதுபற்றி தன் தூதர்களுக்குக் கூட அறிவிக்கவில்லை.

“மக்கள் உம்மிடம் அந்த இறுதி வேளை பற்றி கேட்கின்றனர். அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என நீங்கள் சொல்வீர்களாக!” (ஸூரா அஹ்ஜாப் : 33)

ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘மறுமை நாள் எப்போது நிகழும்?’ எனக் கேட்டபோது, ‘அதுபற்றிக் கேட்கப்படுபவர் கேட்பவரை விட கூடுதலாக எதுவும் அறிந்தவர் அல்லர்‘ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஆதார நூற்கள்: ஸஹீஹ் முஸ்லிம், இமாம் நவவி (ரஹ்) அவர்களின் 40 ஹதீஸ்கள் தொகுப்பின் 2வது ஹதீஸ். மேற்கூறப்பட்டது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி.)

இங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) போன்ற ஒரு மலக்குக்கும் கூட அதுபற்றி எதுவும் தெரியாது என்கிறார்கள். இவ்வாறு மறுமை நாள் நிகழும் அந்த நாள் முழுமையாக மறைக்கப்பட்டு விட்டது. எனினும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதி நபியாக அனுப்பப்பட்டமை உலகத்தின் ஆயுளில் இன்னும் எஞ்சியிருக்கும் காலம் கொஞ்சமே எனக் காட்டுகிறது. இதனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு விளக்கினார்கள்:

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது சுட்டு விரலையும், நடு விரலையும் காட்டி, ‘நானும் மறுமை நாளும் இவ்விரண்டும் அண்மித்து இருப்பது போன்று இருக்கும் நிலையில் நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்’ என்றார்கள். (ஆதார நூற்கள்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நபியாக வருமுன்னர் சென்றுவிட்ட காலத்தையும், எஞ்சியிருக்கும் காலத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது மிகக் குறுகியதொரு காலமே மறுமை நாள் தோன்ற மிச்சமிருக்கிறது என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இங்கு விளக்குகிறார்கள்.

மறுமை நாள் நிகழும் நாள் இவ்வாறு முழுமையாக மறைக்கப்பட்டு விட்டாலும், மறுமை நாள் தோன்று முன்னர் நிகழும் சில அடையாளங்களை அவ்வபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். மறுமை நாள் அண்மித்து விடும்போது தோன்றும் இந்நிகழ்வுகளே மறுமை நாளின் அடையாளங்கள் என அழைக்கப்படுகின்றன. அவை மொத்தமாக கீழ்வரும் ஹதீஸில் குறிக்கப்படுகின்றன:

ஹுதைபா இப்னு உஸைத் அல் கிபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாம் சில விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். ‘நீங்கள் என்ன பேச்சிக் கொண்டிருக்கிறீர்கள்?’ எனக் கேட்டார்கள். ‘நாம் மறுமை நாள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்’ என தோழர்கள் பதில் சொன்னார்கள். ‘மறுமை நாள் பத்து அடையாளங்கள் தோன்று முன்னர் தோன்றாது’ என அப்போது சொன்ன இறைத்தூதர் (ஸல்) அவர்கள் : ‘புகை, தஜ்ஜால், ஒரு மிருகம், சூரியன் மேற்கில் உதித்தல், ஈஸா (அலை) இறங்குதல், யஃஜூஜ் மஃஜூஜ் தோன்றுதல், கிழக்கிலும், மேற்கிலும், அரபு தீபகற்பத்திலும் மூன்று பூமி உள்வாங்கி விடும் நிகழ்வுகள், இறுதியாக யெமனிலிருந்து தோன்றும் நெருப்பு. அது மக்களை மஹ்ஷர் வெளி வரை துரத்திச் செல்லும்.’ என்பவற்றைக் குறிப்பிட்டார்கள்.

இவற்றில் முக்கியமான ஐந்து அடையாளங்களை மட்டும் கீழே விளக்குகிறோம்:

1) தஜ்ஜால் தோன்றுதல் :

தஜ்ஜால் என்பவன் இறுதிக் காலப்பிரிவில் தோன்றும் ஒரு மனிதன். அசத்தியத்தை சத்தியம் போன்று காட்டுவதில் அதி பாரிய சக்தி கொண்டிருப்பான். அவன் தஜ்ஜால் என அழைக்கப்படக் காரணம் அதுவே. ஏனெனில் தஜ்ஜால் என்ற சொல்லின் மொழிப்பொருள் அசத்தியத்தை சத்தியமாகக் காட்டும் பாரிய திறமை மிக்கவன், பொய்யும் புரட்டும் நிறைந்தவன் என்பதாகும். இத்தகைய விஷேட திறமைகளும், அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தும் ஆற்றலும் கொண்ட அவன் மக்களை அப்போது வழி கெடுப்பான். இவன் யூத இனத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். இறுதியில் ஈஸா (அலை) அவர்களால் கொலை செய்யப்படுவான்.

இந்த வகையில் தஜ்ஜால் இறுதிக் காலப்பிரிவில் மக்களின் ஈமானுக்கு பெரும் சோதனையாக அமைவான். எனினும் உண்மையான முஃமின்கள் இவன் போலி, பொய்யன் என அடையாளங்கண்டு கொள்வர். தஜ்ஜால் பற்றிய இத்தகவல்கள் ஹதீஸ்கள் பலவற்றில் வந்துள்ளன. இதுபற்றி வந்துள்ள இரு ஹதீஸ்களை மாத்திரம் கீழே தருகிறோம்:

ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தஜ்ஜால் தோன்றுவான். அவனிடம் நெருப்பும், தண்ணீரும் இருக்கும். மக்கள் தண்ணீராகக் காண்பது எரிக்கும் நெருப்பாக இருக்கும். மக்கள் நெருப்பாகக் காண்பது குளிர்ந்த தண்ணீராக இருக்கும். அப்போது உங்களில் யாரும் இருந்தால் அவர் நெருப்பாகத் தெரிவதில் போய் விழட்டும். அது சிறந்த தண்ணீராக இருக்கும்.’ (ஆதார நூற்கள்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்தார்கள். அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்றவாறு புகழ்ந்தார்கள். பின்னர் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ‘நான் அவனைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன். அவனைப்பற்றி தமது சமூகத்துக்கு எச்சரிக்காத நபி யாருமில்லை. எனினும் நான் எந்த நபியும் தனது சமூகத்துக்கு அவனைப்பற்றி சொல்லாத ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் குருடனாக இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் குருடனல்ல.’ (ஆதார நூற்கள்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

2) ஈஸா (அலை) இறங்குதல்.

ஈஸா (அலை) அவர்களது பிறப்பிலிருந்த அற்புதத்தின் காரணமாக அல்லாஹ்வின் மகன் என்ற கருத்து ஈஸா (அலை) மறைந்து கொஞ்ச காலத்தில் தோன்றி வளர்ந்தது. கிறிஸ்தவ மார்க்கத்தில் செல்வாக்குப் பெற்ற கருத்தாக மாறியது. பெருந்தொகையான மக்கள் அக்கருத்தால் வழி தவறினர். உலக பெரும் சாம்ராஜ்யமொன்றே அந்தப் பெயரால் உறுவாகியது.

இஸ்லாம் உலகில் தோன்றியபோது மிகப் பெரும் எதிர்ப்புச் சக்திகளில் அந்த கிறிஸ்துவ சாம்ராஜ்யம் முதன்மை பெற்று விளங்கியது. இன்று வரையில் அந்நிலைமையே காணப்படுகிறது. உலகை ஆளும் அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளையினத்தவரில் பெருந்தொகையினர் இக்கருத்தை ஏற்றோரே. அவர்களின் அரசுகளே இன்றும் உண்மையான இறைத்தூதின் முதல் தர எதிரிகளாகவும் உள்ளனர்.

இந்நிலையில் இப்பெரும் பொய் மறுக்கப்படுவது அவசியம். அதனை யார் காரணமாக அப்பொய் உருவானதோ அந்த ஈஸா (அலை) அவர்களே இறங்கி மறுத்தால் மிகச் சரியானதாக இருக்கும். அந்தவகையில் தான் உலக அழிவுக்கு முன்னால் ஈஸா (அலை) அவர்கள் உலகுக்கு இறங்கி இம்மாபெரும் பொய்யை மறுக்கும் ஒழுங்கை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான் போலும்.

ஈஸா (அலை) அவர்கள் சத்திய மார்க்கத்தை போதிக்க முற்பட்டபோது ரோம் சாம்ராஜ்யத்திற்கு அது ஒரு சவாலாக மாறியது. அம்மன்னன் ஈஸா (அலை) அவர்களை தேடினான். அந்த நிலையில் தான் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் மேலே வானத்திற்கு உயர்த்திக் கொண்டான். ஈஸா (அலை) அவர்களின் தோற்றம் கொண்டிருந்த ஒருவரை அவர்கள் கொன்றனர். அந்த வகையில் ஈஸா (அலை) அவர்கள் மறுமை நாள் துவங்குவதற்கு சற்று முன்னால் உலகத்திற்கு இறங்குவார்கள். அங்கு வாழ்ந்து மரணமடைவார்கள். இவ்வாறு ஈஸா (அலை) இறங்குவது மறுமை நாள் தோன்றுவதற்கான ஒரு முக்கிய அடையாளமாகிறது. இக்கருத்தை கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சொல்கின்றன:

1). “அவர் மரணிக்கும் முன்னால் (ஈஸா (அலை) அவர்களை இது குறிக்கிறது) வேதங்கொடுக்கப்பட்டவர் யாரும் அவரை நம்பிக்கைக் கொள்ளாதிருக்க மாட்டார். மறுமை நாளில் அவர் அவர்களுக்கு சான்றாக இருப்பார்.’ (ஸூரா நிஸா : 159)

அதாவது ஈஸா (அலை) அவர்களை வேதங் கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களோ, யூதர்களோ சரியாக ஈமான் கொள்ளாது விடமாட்டார்கள். இது ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கும் முன்னர் நிகழும். அதாவது ஈஸா (அலை) அவர்கள் உலகுக்கு இறங்கும்போது காணப்படும் அனைத்து யூத , கிறிஸ்தவர்களும் அவரை அல்லாஹ்வின் மகனாக அல்லாமல் அல்லாஹ்வுடைய அடியார், தூதர் என ஏற்பார்கள் என இந்த வசனம் கூறுகிறது. ஏனெனில் ஈஸா (அலை) அவர்கள் பூமிக்கு மீண்டும் இறங்கியதன் பின்னரே மரணமடைவார்.

இக்கருத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு கூறினார்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘என்னுடைய ஆத்மா யார் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா (அலை) இறங்கும் காலம் நெருங்குகிறது. அவர் நீதியான தீர்ப்புச் சொல்பவராக இறங்குவார். அப்போது சிலையை உடைத்தெறிவார். பன்றியைக் கொல்வார். யுத்தத்தை நிறுத்துவார். எடுப்பதற்கு யாரும் இல்லாத அளவுக்கு செல்வம் நிறைந்து வழியும். ஒரு ஸஜ்தா உலகத்தையும், உலகத்தில் இருப்பவற்றையும் விட சிறந்ததாக இருக்குமளவு செல்வம் பெருகி வழியும்.’

பின்னர் அபூஹுரைராவே! நீங்கள் விரும்பினால் ஓதிப்பாருங்கள்,  “அவர் மரணிக்கும் முன்னால் வேதங்கொடுக்கப்பட்டவர் யாரும் அவரை நம்பிக்கைக் கொள்ளாதிருக்க மாட்டார். மறுமை நாளில் அவர் அவர்களுக்கு சான்றாக இருப்பார்.’ (ஸூரா நிஸா : 159) எனக் கூறினார்கள்.’

2). “நிச்சயமாக அவர் மறுமை நாளுக்கான ஒரு ஆதாரமாவார். நீங்கள் மறுமைப் பற்றி சந்தேகம் கொண்டு விட வேண்டாம்.” (ஸூரா ஜுக்ருப் : 61)

இந்த வசனத்தில் வரும் ‘அவர்’ என்பது ஈஸா (அலை) அவர்களையே குறிக்கிறது. ஏனெனில் இதற்கு முன்னுள்ள வசனங்கள் ஈஸா (அலை) அவர்களைக் குறித்தே பேசுகின்றன. ஸூரா ஜுக்ருபின் 57ம் வசனத்திலிருந்து 61ம் வசனம் வரை ஓதும்போது இது நன்கு தெளிவாகின்றது. இவ்வசனத்தில் வரும் ‘இல்ம்’ என்ற சொல்லுக்கு இரு வகையான கிராஅத்துக்கள் உள்ளன. ஒன்று ‘இல்ம்’ அதாவது மறுமை நாளைச் சொல்வதாக அதற்கான ஆதாரமாக அவர் அமைகிறார் என்ற கருத்துக் கொடுக்கக்கூடிய வகையில் அமைகிறது. இன்னொரு கிராஅத் ‘அலம்’ என அமைந்து மறுமை நாளுக்கான அடையாளமாக அவர் இருக்கிறார் என்ற கருத்தைக் கொடுக்கிறது. அதிகமான அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் இக்கருத்தையே இந்த வசனத்திற்குக் கொடுக்கின்றனர்.

ஈஸா (அலை) அவர்கள் உலகத்திற்கு இறங்குவார்கள் என்பது குறித்து (எந்த சந்தேகமும் இல்லாத வகையில் முதவாத்திர் ஆக) ஹதீஸ்கள் நிறைய வந்துள்ளன. ஈஸா (அலை) உலகுக்கு இறங்கி முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றியே வாழ்வார்கள். இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மார்க்கங்களும் அவர்களது காலத்தில் அழிந்து போகும். தஜ்ஜாலைக் கொலை செய்து விடும் அவர்கள் 40 ஆண்டுகள் உலகில் வாழ்ந்து மரணிப்பார்கள். முஸ்லிம்கள் அவருக்காக ஜனாஸாத் தொழுவார்கள் என்ற இவ்வனைத்து விஷயங்களும் அந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றன.

3). பூமியின் ஒரு மிருகம் :

மறுமை நாளின் ஓர் அடையாளமாக ‘தாப்பதுல் அர்ள்’ குறிக்கப்படுகிறது. அல்குர்ஆனும், ஸுன்னாவும் இதற்கு இப்பெயரையே இடுகின்றன. அதன் நேரடி மொழிபெயர்ப்பு ‘பூமியின் மிருகம்’ என்பதாகும். இதுபற்றி வரும் திருமறை வசனத்தை முதலில் கீழே தருகிறோம்:

“தண்டனை நிகழும் என்ற வார்த்தை அவர்கள் மீது உறுதியாகி விடும்போது நாம் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை வெளியாக்கி விடுவோம். மக்கள் எமது அத்தாட்சிகளை உறுதியாக நம்பிக்கை கொண்டோராயிருக்கவில்லை என்று அவர்களுக்கு அது சொல்லும்.” (ஸூரா நம்ல் : 82)

கீழ்வரும் ஹதீஸ் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது:
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் மனனமிட்டேன். இன்னும் நான் அதனை மறக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்வதை நான் கேட்டேன். ‘அடையாளங்களில் முதலாவது வெளியாவது சூரியன் மேற்கில் உதிப்பதும், முற்பகல் நேரத்தில் அம்மிருகம் தோன்றி மக்களிடம் வருவதும் தான். இவற்றில் எது முதலில் தோன்றுகிறதோ அடுத்தது அதனையடுத்து கிட்டடியிலேயே தோன்றி விடும்.’ (ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ் பற்றிய, மறுமை நாள் பற்றிய உண்மைகளை அல்குர்ஆன் ஊடாக அல்லாஹ் பல்வேறு ஆதாரங்கள் சொல்லி விளக்கியுள்ளான். எனினும் மக்களில் பலர் அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் மறுமை நாள் நெருங்குகையில் அறிவைப் பயன்படுத்தி சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியாத மனிதனுக்கு இப்படியொரு மிருகத்தை அனுப்பி அல்லாஹ் உண்மையைச் சொல்ல வைக்கிறான் போலும்.

4) சூரியன் மேற்கில் உதித்து, கிழக்கில் மறைதல் :

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘சூரியன் மேற்கில் உதிக்கும் வரை மறுமை நாள் தோன்ற மாட்டாது. அவ்வாறு அது உதித்து மக்கள் அதனைக் கண்டால் அவர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் அப்போது ஈமான் கொள்ளல் எந்த ஆண்மாவுக்கும் (அது ஏற்கனவே ஈமான் கொண்டு இல்லாவிட்டால்) பயன் கொடுக்க மாட்டாது. அல்லது தன் ஈமானில் அது எந்த நன்மையை சம்பாதிக்கவும் மாட்டாது.’

‘சூரியன் மேற்கில் உதிப்பது போன்றே ஏனைய மறுமை நாளுக்கான பெரும் அடையாளங்கள் தோன்றி விட்டால் அப்போது ஈமான் கொள்ளல் பிரயோசனம் கொடுக்க மாட்டாது. தவ்பாவின் வாயில் அப்போது மூடப்பட்டு விடும்.’

இக்கருத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்.

சூரியன் மேற்கில் உதிக்கும் இந்த அடையாளம் பற்றி தாப்பத்துல் அர்ள் பற்றிய ஹதீஸிலும், 10 அடையாளங்கள் பற்றிய ஹதீஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமி உலக அழிவு நெருங்குகின்ற போது இப்போது சுற்றுவதற்கு எதிர்பக்கமாக சுற்றலாம். அதன் காரணமாகவே இவ்வாறு சூரியன் மேற்கில் உதிக்கும் நிலை தோன்றுகிறது என இந்த ஹதீஸை விளங்கலாம்.

5) யஃஜூஜ், மஃஜூஜ் இனத்தினரின் தோற்றம் :

மறுமை நாள் தோன்றுவதற்கான 10 அடையாளங்கள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸில் யஃஜூஜ், மஃஜூஜ் என்ற இனம் தோன்றுவதும் ஓர் அடையாளமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி ஸூரா அன்பியாவில் அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்:

“யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் திறந்து விடப்படுகையில், அவர்கள் அனைத்துப் புறமிருந்தும் விரைந்து வருவார்கள். அந்த சத்திய வாக்குறுதி நிறைவேறல் நெருங்கி விட்டது. அப்போது நிராகரிப்பாளர்களின் பார்வைகள் இமைக்காது நோக்கியவாறு இருக்கும்.” (ஸூரா அன்பியா : 96, 97)

ஸூரா கஃபில் அல்லாஹ் துல்கர்னைன் என்ற மன்னன் பற்றிக் குறிப்பிடும் போதும் இந்த யஃஜூஜ், மஃஜூஜ் என்ற இனம் பற்றிக் குறிப்பிடுகிறான். துல்கர்னைன் நாகரீகத்தில் பின்தங்கியிருந்த ஒரு சமூகத்தினரை இவ்வினத்தினரின் அநியாய அட்டூழியங்களிலிருந்து காக்க இரு மலைகளிடையே ஒரு பெரும் இரும்புச் சுவரை எழுப்பியதாகவும் அல்லாஹ் அங்கு விளக்குகிறான். இது ஸூரா கஃபில் 94 முதல் 99 வரையுள்ள வசனங்களில் விளக்கப்படுகிறது.

ஸூரா கஃபில் வரும் குகைவாசிகள், துல்கர்னைன் போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து பெரும் ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியாவின் தலைச்சிறந்த அறிஞர் அபுல் கலாம் ஆஸாத், ‘காக்கஸஸ் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்தவர்களே இந்த இனத்தவர்’ எனவும், ‘அவர்களுக்குப் பக்கத்தில் வாழ்ந்த ஓரினத்தவரை இவர்களது அழிவு நடவடிக்கையிலிருந்து காக்கவே துல்கர்னைன் காக்கஸஸ் மலை இரு தொடர்களிடையே ஒரு பெரும் இரும்புச் சுவரை எழுப்பினார்’ எனவும் கூறுகிறார்.

இன்னமும் அச்சுவர் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த யஃஜூஜ் மஃஜூஜ் என்போர் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் பாரிய பல படையெடுப்புகளை மேற்கொண்டு உலகில் பல அழிவு நடவடிக்கைகளைச் செய்ததாகவும் அபுல் கலாம் ஆஸாத் விளக்குகிறார்.

உலக அழிவு நெருங்கும் போது இத்தகைய இனத்தவர்கள் மேற்கொள்ளும் அத்தகையதொரு பெரும் அழிவையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கலாம். இது பற்றிய உண்மை நிலையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இந்தப் பத்து அடையாளங்களுமே மறுமை நாள் மிக அண்மிக்கும் போது தோன்றும் அடையாளங்களாகின்றன. இவை தவிர வேறு சில நிகழ்வுகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளங்களாகக் கூறியிருக்கிறார்கள். அறிஞர்கள் அவற்றை மறுமை நாள் தோன்றுவதைக் காட்டும் சிறிய அடையாளங்கள் என அழைக்கின்றனர். எனவே அத்தகைய நிகழ்வுகள் தோன்றின் மறுமை நாள் மிக அண்மித்து விட்டது எனக் கொள்ள வேண்டியதில்லை. அவற்றை வைத்து மறுமை நாள் மிக அண்மித்து விட்டது எனக் கணிப்பீடு செய்ய முடியாது. அத்தகைய ஹதீஸ்களுக்கு உதாரணமாக கீழே சிலவற்றைத் தருகிறோம்:

1). அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அறிவு நீங்கல், அறியாமை அதிகரித்தல், விபச்சாரமும், மது அருந்துதலும் அதிகரித்தல், 50 பெண்களை பராமரிக்க ஒரு ஆண் இருக்குமளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் கூடி விடுதல் என்பன மறுமை நாளின் அடையாளங்களாகும்.” (ஆதார நூல்கள்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

2). அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாடோடி அரபி ஒருவர்: ‘மறுமை நாள் எப்போது தோன்றும்?’ எனக் கேட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பொறுப்புகள் வீணடிக்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார்த்திரு’ என்றார்கள். ‘பொறுப்புகளை வீணடிப்பது எவ்வாறு?’ எனக் கேட்டார். ‘பொறுப்பு அதற்குத் தகுதியில்லாதவரிடம் கொடுக்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார்’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஆதார நூல் : ஸஹீஹ் புகாரி)

3). அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘ஒரு மனிதன் தன் செல்வத்திலிருந்து ஜக்காத்தை ஒதுக்கி விட்ட போதும் அதனைப் பெறுவதற்கு யாரும் இல்லாத அளவுக்கு செல்வம் பெருகி வளம் கொழிக்கும் அந்நிலை வரும்வரை மறுமை நாள் தோன்றாது. அரபிகளது பூமியில் ஆறுகள் ஓடி அப்பூமி பசுஞ்சோலைகளாக மாறும் வரை மறுமை நாள் தோன்றாது.’ (ஆதார நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)

4). அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘முஸ்லிம்கள் யூதர்களோடு போராடும் வரை மறுமை நாள் தோன்ற மாட்டாது. அப்போது முஸ்லிம்கள் யூதர்களைக் கொல்வார்கள். யூதன் மரங்களுக்கும், கற்களுக்கும் பின்னால் போய் ஒளிவான். அப்போது அந்த மரங்களும், கற்களும் ‘முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ என் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான். வா… வந்து அவனைக் கொலை செய்!!’ எனச் சொல்லும். எனினும் கர்கத் எனும் மரம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கும். ஏனெனில் அது யூதர்களின் மரமாகும். அது முற்களுள்ள ஒரு வகை மரம்.’ (ஆதார நூற்கள் : ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.)

இக்கருத்தில் பல ஹதீஸ்களை அவதானிக்க முடியும். அவை சமூகத்தில் உருவாகும் சீர்கேடுகளைச் சொல்லும். அல்லது முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைக்கும் வெற்றிகளை அல்லது நன்மாராயங்களைச் சொல்லும். எவ்வாறாயினும் அவை மறுமை நாள் மிக அண்மித்து விட்டது என்பதைக் காட்டாது. ஏறத்தாழ அவை ‘நான் மறுமை நாள் மிக அண்மையில் இருக்கையில் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்’ என ஏற்கனவே இப்பகுதியின் ஆரம்பத்தில் குறித்த ஹதீஸை ஒத்ததாகும். சமூக சீர்கேடுகள் அதிகரிக்க அதிகரிக்க மறுமை நாளும் நெருங்குகிறது. சமூக வாழ்விலும், பூமியின் நிலையிலும் சில வித்தியாசமான மாற்றங்கள் உருவாதலும் மறுமை நாள் நெருங்கி வருகிறது என்பதற்கு அடையாளங்கள் என்று தான் இங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிக்க விரும்புகிறார்கள்.

மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *