Featured Posts

மறுமை நாள் (அத்தியாயம்-4)

மறுமை நாள் என்ற நம்பிக்கை பகுத்தறிவு ரீதியானது. அது மனித இயற்கை வேண்டுகின்ற ஒரு அம்சம். அத்தோடு இறை நம்பிக்கை கொண்டவன் தவிர்க்க முடியாமல் மறுமை நம்பிக்கையையும் ஏற்க வேண்டியவனாகிறான். மறுமை நாள் நம்பிக்கையை ஏற்காதவன் இறைவனை மிகச் சரியான முறையில் நம்பிக்கைக் கொள்ள முடியாது. அந்நிலையில் அவன் இணைவைத்தலோடு அல்லது நிறைய பிழையான கருத்துக்களோடு தான் இறைவனை நம்பக் கூடியவனாக இருப்பான். அல்லது மறுமை நாள் நம்பிக்கைப் புரிந்து ஏற்காதபோது இறை நிராகரிப்புக்கும் அது இட்டுச் செல்ல முடியும். இவ்விஷயங்களை முதல் இரண்டு அத்தியாயங்களில் பார்த்தோம்.

மறுமை நாளை இவ்வாறு நம்பிக்கைக் கொள்ளும் போது மறு உலக வாழ்வு என்பது என்ன? அது எவ்வாறான தோற்றத்தைப் பெற்றிருக்கும்? அது எப்பொழுது நிகழும்? எவ்வாறு நிகழும்? என்ற கேள்விகள் இயல்பாகவே எழும்புகின்றன.

இக்கேள்விகளுக்கான பதிலை வெறும் பகுத்தறிவு மூலம் கண்டு பிடிக்க முடியாது. பகுத்தறிவு ஒன்றிருப்பதன் சாத்தியப்பட்டை சொல்ல முடியும். அது எவ்வாறிருக்கும் என்பதனை அதனால் விளக்க முடியாது. அதாவது ஏன்? என்ற கேள்விக்கு அது பதில் சொல்லும். எப்படி? என்ற கேள்விக்கு அது பதில் சொல்ல முடியாது.

மறுமை நாள் என்பது மறை உலகோடு சம்பந்தப்பட்ட விஷயமாகும். எனவே அது சம்பந்தமான மேற்கூறிய கேள்விகளுக்கும் வஹி (என்ற இறை செய்தி)யே பதில் சொல்ல முடியும். எனவே இக்கேள்விகளுக்கான பதிலை அல்குர்ஆன் சுன்னாவின் ஊடாக விளங்க முயற்சிப்போம்.

முதலில் மறுமை நாள் நம்பிக்கை என்பது இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டின் ஒரு முக்கிய அம்சம் என்பதனை அல்குர்ஆனினூடாக நேரடியாகப் புரிந்து கொள்ளல் அவசியமானது. எனவே அந்த அம்சத்தைக் கீழே தருகிறோம்:

அல்குர்ஆனை வாசிக்கும் யாரும் இந்த உண்மையை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் மறுமை நாள் பற்றி சொல்லாத ஸூரா(அத்தியாயம்(க்கள் மிகக் குறைவு. ஒரு சில சிறிய ஸூராக்கள் மறுமை நாள் பற்றி பேசாது விட முடியும். தனியாக மறுமை நாளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசும் ஜுஸ்உ (பாகம்)வையே அல்குர்ஆனில் காண முடிகிறது. ‘ஜுஸ்உ அம்ம’ வே அதுவாகும். அந்த ஜுஸ்உவின் ஒரு சில ஸூராக்கள் தவிர மற்ற ஸூராக்கள் அனைத்துமே மறுமை நாள் பற்றி பல கோணங்களில் விளக்குவதை அவதானிக்க முடியும்.

இந்த வகையில் மறுமை நாள் நம்பிக்கை என்பது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரணமான அம்சமாகும். அவனது அன்றாட வாழ்க்கையில் இந்த நம்பிக்கையோடு சம்பந்தப்படும் வகையிலான வார்த்தைகளையும், நடத்தைகளையும் அவன் அதிகமாகக் கொண்டிருக்கிறான். ஐந்து வேளை அவன் தொழும்போது ஸூரா பாத்திஹாவை அவன் ஓதுகிறான்.

“கூலி கொடுக்கும் நாளின் அதிபதி”

என அந்த ஸூராவில் வசனத்தை ஓதும்போது அவனுக்கு மறுமை நாள் ஞாபகத்திற்கு வருகிறது. அவன் தூங்கும் போது ஓதும் துஆவும், விழிக்கும் போது ஓதும் துஆவும் மறுமை நாளை அவனுக்கு நினைவு கூற வைக்கின்றது. இந்த வகையில் மறுமை நாள் நம்பிக்கை என்பது அவனது அன்றாட வாழ்வின் ஓர் அம்சம். எனினும் மறுமை நாள் இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டின் ஓர் அம்சம் எனக் காட்டும் சில அல்குர்ஆன் வசனங்களை இங்கே தருவது மறுமை நாள் பற்றிய இஸ்லாத்தின் விளக்கத்தைப் பார்க்க ஆரம்பமாக அமையும் எனக் கருதுகிறோம்.

“விசுவாசிகளே! அல்லாஹ்வையும், அவன் தூதரையும், அவனது தூதர் மீது அவன் இறக்கிய வேதத்தையும், முன்பு அவன் இறக்கிய வேத்ங்களையும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வையும், அவனது மலக்கு(வானவர்)களையும், வேதங்களையும், அவனது தூதர்களையும், மறுமை நாளையும் நிராகரிக்கிறாரோ அவர் பெரும் வழிகேட்டில் சென்று விடுகிறார்.” (ஸூரா நிஸா: 136)

“மறுமை நாளை நம்பிக்கை கொள்ளாதோர் வேதனையிலும் பெரும் வழிகேட்டிலுமே உள்ளார்கள்.” (ஸூரா ஸபஉ:8)

மனித வாழ்வு இவ்வுலகுடன் முடிந்து விடுகிறது. அதன் பிறகு எந்த வாழ்வுமில்லை என்ற நம்பிக்கை நிராகரிப்பு என்பதை அல்குர்ஆன் கீழ்வருமாறு வலியுறுத்திச் சொல்கிறது:

“நாம் இறந்து பூமியில் மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டால் நாம் நிச்சயம் புதிதாகப் படைக்கப்படுவோமா? என அவர்கள் கேட்கின்றனர். இல்லை! அவர்கள் தமது இரட்சகனைச் சந்திப்பதை நிராகரிக்கிறார்கள்.” (ஸூரா ஸஜ்தா: 10)

இவ்வாறு சொல்வது மட்டுமின்றி இறை தூதின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று அந்த மறுமை பற்றி எச்சரிப்பதும், நன்மாராயம் சொல்வதுமே என அல்குர்ஆன் சொல்கிறது.

“தனது அடியார்கள் மீது கோணல் ஏதுமற்ற, மிகச் சீரான வேதத்தை இறக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தாகுக! இது அவனிடமிருந்து வரும் கடும் தண்டனையொன்றை எச்சரிக்கவும், நற்செயல்கள் புரியும் விசுவாசம் கொண்டோருக்கு நன்மாராயம் சொல்லவுமே ஆகும்.” (ஸூரா கஹ்ப்: 1-2)

எனவே, மறுமை நாள் நம்பிக்கையை ஏற்காது விடல் இறைத் தூதையே நிராகரிப்பதாகும் என இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இவற்றிலிருந்து மறுமை நாள் நம்பிக்கை இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டில் ஓர் அம்சம் என்பதுவும், அதனை ஏற்காமை இறை நிராகரிப்பு, பெரும் வழிகேடு என்பதுவும் தெளிவாகின்றது.

இனி மறை உலகோடு சம்பந்தபட்ட அந்த மறுமை நாளை அல்குர்ஆனும், ஸுன்னாவும் முன்வைக்கும் அமைப்பை நோக்குவோம். அதனை கீழ்வரும் தலைப்புகளின் கீழ் ஒழுங்கு படுத்தலாம்:

1. மரணமும், அதனைத் தொடரும் (B) பர்ஜக் வாழ்வும்
2. மறுமை நாளுக்கான அடையாளங்கள்
3. உலக அழிவும், மறுமை நாளின் தோற்றமும்
4. மஹ்ஷர் வெளி
5. சுவர்க்கமும், நரகமும்

இப்போது மறுமை நாள் பற்றிய தெளிவைத் தரும், அதனோடு சம்பந்தப்பட்ட இத்தலைப்புகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் தெளிவாக நோக்குவோம்.

மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *