நோன்புப் பெருநாள் எனக்கு சிறிய சோதனையுடனேயே கடந்துபோனது. பெருநாளைக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கால் பெருவிரலில் ஏற்பட்டிருந்த சிறிய சிரங்கொன்று வேலைப்பழுக்களால் வீக்கமுற்று வீட்டு வைத்தியத்திற்கும் அடங்காத வகுதிக்குள் முன்னேறியிருந்தது.
அது ஒருபுறம் இருக்க, பெருநாள் தொழுகைக்கிடையில் பித்ராவைக் கொடுத்து நோன்பை வழியனுப்பும் முக்கிய கடமை அனைவருக்கும் காத்திருந்தது. வீட்டிலுள்ளவர்கள் சார்பாக, தேவையான அரிசியினை மனக்கணக்கிட்டு தானே அளந்து ஏழைகளுக்கு கொடுத்துவிடுவது எனது தாயின் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், வழமைக்கு மாறாக வீட்டாரிடம் அளவைச் சாடியைக் கொடுத்து தத்தமது கைகளாலேயே தானியத்தினை அளந்து வேண்டிக் கொண்டதோடு, யார் யாருக்கு கொடுப்பது என்பதையும் சேர்ந்தே தீர்மானித்துக் கொண்டோம். அது வீட்டாரின் ஈமானியத்தையும் நோன்பின் மீதான அபிமானத்தையும் அதிகரிக்க உதவியிருக்கும்.
பெருநாளைக்கு முதல்நாளே விடுமுறையில் வந்த உறவுகள், முதிய உறவுகள், இளைய உறவுகள், குழந்தையர் வட்டங்கள், கணவரது உறவினர்கள் என அனைவரினதும் மகிழ்ச்சியை தளம்பாமல் வைத்திருக்க நானும் கணவரும் முடிந்தவரை முயற்சித்தோம். அல்ஹம்துலில்லாஹ்! இறைவனும் பொருந்திக் கொண்டான்.
இதற்கிடையில், காலின் வேதனை அதிகரித்திருந்தது. தாயார் மஞ்சளை எண்ணையுடன் சூடுகாட்டி தடவி விட்டதோடு, பள்ளிவாயலில் பெருநாளை பறைசாற்றும் தக்பீர் முழக்கமும் சேர்ந்து ஓர் உத்வேகத்தைக் கொடுத்திருந்தது.
நோன்புப் பெருநாளன்று தொழுகைக்கு முன்னர் சாப்பிடுவது நபிவழி என்பதால், பிரதான உணவையே அந்தச் சாப்பாடாக்கி விடவேண்டும் என்ற அவாவில் முதல் நாளிரவு ஆரம்பித்த சமையல் மறுநாள்:- தொடங்கிய பாதி, முடித்த பாதி என்று தொழுகைக்கு பின்னராகவே சாப்பிடக் கிடைத்தது. சுபஹின் பின்னர் எடுத்துக்கொண்ட சிற்றுண்டி தேனீர் உடன்தான் அதிகமானோர் தொழுதிருக்கலாம்.
ஏனெனில், தொழுகைக்காக திடலுக்கு போவது அல்லது, பள்ளிவாயலுக்கு போவதென்பது பெண்களுக்கு வருடமொருமுறை வரும் புது அனுபவமாகும். இரண்டாம் முறை தொழுவிக்கப்படமாட்டாது என்ற ஒலிபெருக்கிச் செய்தி வேலைகளுக்கு மத்தியில் சிந்தையில் வந்து எச்சரிக்கும்.
வீட்டிலுள்ள வயதானோருக்கு வாகன வசதி செய்து, சிறுவர்களை ஆயத்தப்படுத்தி, தானும் புத்தாடையணிந்து, சன சந்தடிக்குள் கவனத்தைச் செலுத்தி, கால்கள் தரதரவென நடந்து தொழுமிடம் சென்றடைந்த பின்னரே ஒவ்வொரு குடும்பத் தலைவியையும் அழகிய பெருமூச்சொன்று கடந்து செல்லும்.
கொண்டு வந்த முசல்லாவை விரித்து சவ்வில் நேர்பார்த்து நிற்கையிலே தன் இருப்பினை ஞாபகப்படுத்தி ஒரு குழந்தை அழுகையை ஆரம்பிக்க, மற்றக்குழந்தைகளும் உதவிக்கு அழத்தொடங்கும். தொழுகை ஆரம்பிப்பதற்கிடையில், அழும் குழந்தைகளை பின்வரிசையில் தொழ முடியாமல் உட்கார்ந்திருக்கும் சகோதரிகளிடம் குழந்தையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு, ஜமாஅத்துடன் தக்பீர் கட்டி சலாம் கொடுப்பதுவரை, எவ்வித அழுத்தங்களுமின்றி இமாமுடன் முடித்துக் கொண்டால், அதுவே மனதிற்கினிய பெருநாளாகிவிடும்.
அதிலும், இமாம் தக்பீர் கட்டிய பின்னர், திடலை நோக்கி அரக்கப்பறக்க ஒடிவருவோருக்கு, ஓரமாக நிற்பவர் அணியுடன் மேலும் நெருங்கி நின்று, தனது முசல்லாவில் இடம் கொடுத்துதவுதல் பெறுமதியான உதவியாக இருக்கும்.
சிலவேளை, பிந்தி வருவோர் சவ்புகளின் ஒழுக்கத்தினை மீறி குறுக்கே நடப்பது, தொழஆயத்தமாக நிற்போருக்கு சிரமம் தருவது, பாதணிகளை அறியாமல் மாற்றிவிடுவது, அல்லது, தொலைத்து விடுவது என்பனவெல்லாம் எமது பொறுமைக்கு சவாலாக நடந்துவிடும் விடயங்களாகும்.
பெருநாள் ஜும்ஆவை செவிமடுப்பது அடுத்த கடமை. ஆதலால் யாரும் வெளியேற வேண்டாம் என இமாம் கட்டளையிட, அதற்கிசைந்து அனைவரும் உட்கார்ந்திருக்க, குழந்தைகளின் அழுகைக் குரல்கள் தொடர்ந்து பின்னணி இசைக்க, கொண்டு வந்த காணிக்கைகள் சேவகர்களால் திரட்டப்பட்ட பின்னர், திரும்பும் திசையெல்லாம் புன்னகைப்போர், சலாம் சொல்வோர், முசாபஹா செய்வோர், ஆனந்தக் கண்ணீர் சொரிவோர் என அளவளாவி நிற்கும் உறவுகள் ஓர் அழகு என்றால், சிறுவர்கள் தங்கள் மருதாணியழகு மற்றும் ஆடையழகுடன் அன்பையும் பகிர்ந்து கொள்வது இன்னோர் அழகு.
இத்தனைக்கும் மத்தியில் ஊர்க் குளக்கரைத் தென்றல் ஈத் முபாறக்கூறி அனைவரையும் வருடிச்செல்ல, எனது காலில் ஏற்பட்டிருந்த வேதனை இன்னும் சற்று இலேசாகியிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
பர்சானா றியாஸ்