Featured Posts

காரியாலயமும் நானும்

அன்று காரியாலயத்தில் பொதுமக்கள் தினம் என்பதனால் பொறுப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. காலை 9.00 மணியுடன் ஆரம்பித்த வேலைகள் பகற்பொழுதைக் கடந்த பின்னர்தான் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்த நேரம் பார்த்து லுஹருடைய தொழுகையை முடித்துக் கொள்ள எண்ணி வுழு செய்துவிட்டு, தொழுகையறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அப்போது, என்னை நோக்கி அவசரமாக அங்கு வந்த ஒரு பொதுமகன் வயதான தாயுடன் வந்ததாகவும், தனது வேலையை அவசரமாக முடித்து தரும்படியும் வேண்டி ஆவணங்களை நீட்டினார். அவற்றினை வாங்கப் போனபோது,

“முதலில் தொழுகையை முடித்துவிட்டு வரலாமே” என்றார் ஒரு சக உத்தியோகத்தர்.

வந்த பொதுமகனும் முஸ்லிமானவர் என்பதால் அவரின் அனுமதியுடன் தொழுகைக்காக ஒருசில நிமிடங்களை எடுத்திருக்கலாம். ஆனால், அவரது சுகயீனமுற்ற தாய் வாகனத்தில் இருத்தப்பட்டுள்ளார் என்ற விடயம் என்னை தடுத்தது.

அமல்களில் சிறந்தது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுது கொள்வதாகும். தொழுகையிலுள்ள முக்கிய தியாகமே உரிய நேரத்தில் ஒவ்வொரு தொழுகையையும் தொழுவதாகும்.

இருப்பினும், எனக்காக அந்தத் தாயின் அசௌகரியப் பொழுதுகளைக் களவாட விரும்பவில்லை. தொழுகைக்கு வெறும் ஐந்து நிமிடங்களே போதுமாயினும் அஸருடைய வக்து (நேரம்) வரும்வரைக்கும் லுஹரைத் தொழுது கொள்ள முடியும் என்ற வரையறையையும் அந்த அர்ரஹ்மான் வழங்கியுள்ளான்.

அதை நான் பயன்படுத்திக் கொள்வதற்குப் பின்னால் அந்தப் பொதுமகன் சீக்கிரமாகச் சேவையைப் பெறுகிறான் என்பது கவனிக்கத்தக்கது. இப்படியான சூழலை எதிர்கொள்ளும்போது, தனக்குப் பாரமாகவும் பிறருக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் சில உத்தியோகத்தர்கள் தொழுகையினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி விடுகிறார்கள்.

பிறருக்கு வெளிப்படுத்துவற்காக தொழுகையை நிறைவேற்றுவோருக்கு கேடுதான் என மார்க்கம் எச்சரிக்கின்றது. இவ்வாறான தொழுகைகளால் வேலைத்தலங்களில் ஏனைய சமூகத்தவருக்கு நாம் எதனைச் சொல்ல விளைகின்றோம் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

சேவை நாடிகள் அவர்களின் வருகையில் இருக்கும் அவசரத்தின் காரணங்களை அவர்களாக சொன்னால் தவிர நாம் அறியமாட்டோம். ஆணாயின், தனது வர்த்தக முயற்சிகளை முடக்கிவிட்டு வந்திருக்கலாம். அல்லது, வேறு நிறுவனக் கடமையிலிருந்து குறுகிய விடுமுறையில் வந்திருக்கலாம். பெண்ணாயின், தனது குழந்தைகளை கதறக் கதற பிரிந்து வந்திருக்கலாம். அல்லது, சமையல் வேலையை பாதியில் விட்டுவிட்டு வந்திருக்கலாம். காரணம் எதுவாயினும் அதை அவர்களாகக்கூறி அவசரப்படுத்தும் அளவுக்கு உத்தியோகத்தர்கள் நடந்து கொள்ளாது அவர்கள் வந்த ஒழுங்கு முறைப்படி சீக்கிரமாக சேவைகளை வழங்கி அவர்களின் புன்னகை கலந்த விடைபெறுதலை தனதாக்கிக் கொள்வதில்தான் வெற்றி தங்கியுள்ளது.

இதனை எதிர்பார்த்தே சேவை நாடிகளின் திருப்தியை பதிவு செய்யும் வண்ணமாக அண்மையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 01/2018(1) ஆம் இலக்கச் சுற்றறிக்கையை குறிப்பிடலாம்.

இதன்மூலம் சேவை நாடிகளின் திருப்தி மற்றும் திருப்தியின்மையை பதிவுசெய்து கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன், அதுவே உத்தியோகத்தர்களின் சேவையை அளவிடும் கருவியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை பயனாளிகளுக்கு வரப்பிரசாதமே.

– பர்சானா றியாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *