Featured Posts

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 077]

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்!

ஸூfபித்துவ அறிஞர், முஹம்மத் பின் அல்fபழ்ல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுவதாக அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் நான்கு தரப்பினரிடம் இருக்கின்றபோது, இஸ்லாம் (மதிப்பிழந்து) போய் விடுகின்றது….

  1. அறிந்ததைக்கொண்டு செயல்படாதவர்கள்.
  2. அறியாததை வைத்து செயல்படுகின்றவர்கள்.
  3. செயல்படாமலும், அறிந்து கொள்ளாமலும் இருப்பவர்கள்.
  4. அறிவைத் தேடும் மக்களைத் தடுப்பவர்கள்!”.

இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதை இவ்வாறு விளக்கப்படுத்திக் கூறுகின்றார்கள்:

முதலாம் தரப்பினர்:
அறிவிருந்தும் செயல் இல்லாத மனிதன் இத்தரப்பைச் சேர்ந்தவனாவான். இவன், பாமர மக்களுக்கு அதிக தீங்கை ஏற்படுத்தக்கூடியவன். (தம்மால் நிகழும்) குறைபாடு, அற்பத்தனம் ஆகிய ஒவ்வொன்றுக்கும் இவன்தான் இவர்களுக்குரிய ஆதாரமாவான்.

இரண்டாம் தரப்பினர்:
அறிவில்லாத வணக்கசாலி! இவரது வணக்க வழிபாட்டிற்காகவும், இவரின் நல்ல தன்மைக்காகவும் இவரில் மக்கள் நல்லெண்ணம் வைத்திருப்பார்கள்; இதனால், அறியாமையில் இவர் இருக்கும்போதே இவரை இவர்கள் பின்பற்றி விடுகின்றார்கள்.
எமக்கு முன் வாழ்ந்த ஸலFபுஸ் ஸாலிஹீன்களில் சிலர் இவ்விரு தரப்பினர் குறித்துத்தான், “கெட்ட அறிஞர், அறிவில்லாத வணக்கசாலி ஆகிய இருவரின் குழப்பத்திலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கின்றார்கள். ஏனெனில் பொதுவாக மக்கள், தமது அறிஞர்களையும் தமது வணக்கசாலிகளையும்தான் பின்பற்றுவார்கள். எனவே, அறிஞர்கள் கெட்டவர்களாகவும், வணக்கசாலிகள் அறிவில்லாதவர்களாகவும் இருந்தால் முஸீbபத்து (சோதனை)தான் ஏற்படும்; அத்துடன் குறிப்பிட்ட தரப்பு, பொதுத்தரப்பு என எல்லோர் மீதும் குழப்பம் பாரதூரமாகி விடும்.

மூன்றாம் தரப்பினர்:
இவர்களிடம் அறிவும் இருக்காது; செயலும் இருக்காது. இவர்கள் சுயமாக மேய்ந்து திரியும் கால்நடைகளைப் போன்றவர்கள்.

நான்காம் தரப்பினர்:

பூமியில் இருக்கின்ற இப்லீசின் பிரதிநிதிகள்தான் இவர்கள்! அறிவைத் தேடுவதை விட்டும், மார்க்கத்தை விளங்குவதை விட்டும் மக்களை இவர்கள் தடுத்துக் கொண்டிருப்பார்கள்; ஜின் இனத்து ஷைத்தான்களை விட, இவர்கள் மக்களுக்கு அதிக தீங்கிழைக்கக்கூடியவர்கள்; ஏனெனில், இவர்கள் உள்ளங்களுக்கிடையிலும், அல்லாஹ்வின் வழிகாட்டல் மற்றும் அவனது பாதைக்கிடையிலும் திரையாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நான்கு வகைத் தரப்பினரைத்தான் ஸூfபித்துவ அறிஞர் ‘முஹம்மத் பின் fபழ்ல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேலே குறிப்பிட்டிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் அரிப்புக்குள்ளாகும் ஓடைக் கரையிலும், அழிவுப் பாதையிலும் இருந்துகொண்டிருப்போராவர். அல்லாஹ்வின் பக்கமும், அவனின் தூதரின் பக்கமும் அழைப்பு விடுக்கும் இஸ்லாமிய அழைப்பாளர் ஒருவர் எதிர்கொள்கின்ற தொல்லையும் போராட்டமும் இவர்கள் மூலமாகத்தான் ஏற்படுகின்றன.

தான் நேசிக்கின்றவர்களை தனது திருப்தியில் அல்லாஹ் பயன்படுத்திக்கொள்வது போல், தான் நாடியோரை தனது கோபத்திலும் அவன் பயன்படுத்திக்கொள்கிறான். நிச்சயமாக அவன் தனது அடியார்களைப் பற்றி நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்”.
{ நூல்: ‘மிfப்தாஹு தாரிஸ் ஸஆதா’, 01/455

قال العلّامة إبن القيم الجوزية رحمه الله تعالى…….
قال محمد بن الفضل الصّوفي الزاهد: [ ذهاب الإسلام على يدي أربعة أصناف من الناس؛ صنف لايعملون بما يعلمون، وصنف يعملون بما لايعلمون، وصنف لايعملون ولايعلمون، وصنف يمنعون الناس من التّعلّم ]
قلت:
الصنف الأول: من له علم بلا عمل؛ فهو أضرّ شيئ على العامّة، فإنه حجة لهم في كل نقيصة ومبخسة.
والصنف الثاني: العابد الجاهل؛ فإن الناس يحسنون الظّنّ به لعبادته وصلاحه، فيقتدون به على جهله.
وهذان الصنفان هما اللّذان ذكرهما بعض السلف في قوله: “إحذروا فتنة العالم الفاجر والعابد الجاهل، فإن فتنتهما فتنة لكل مفتون”؛ فإن الناس إنما يقتدون بعلمائهم وعبّادهم، فإذا كان العلماء فجرة والعبّاد جهلة عمت المصيبة بهما، وعظمت الفتنة على الخاصة والعامة.
والصنف الثالث: الذين لاعلم لهم ولاعمل؛ وإنما هم كالأنعام السّائمة.
والصنف الرابع: نواب إبليس في الأرض؛ وهم الذين يثبطون الناس عن طلب العلم والتّفقّه في الدين. فهؤلاء أضرّ عليهم من شياطين الجنّ، فإنهم يحولون بين القلوب وبين هدى الله وطريقه.
فهؤلاء الأربعة أصناف هم الذين ذكرهم هذا العارف رحمة الله عليه! وهؤلاء كلهم على شفا جرف هار، وعلى سبيل الهلكة، وما يلقى العالم الداعي إلى الله ورسوله ما يلقاه من الأذى والمحاربة إلا على أيديهم، والله يستعمل من يشاء في سخطه كما يستعمل من يحبّ في مرضاته، إنه بعباده خبير بصير”.
{ مفتاح دار السعادة، ١/٤٥٥ }

தமிழில்: அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
[ 02/07/2018 ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *