Featured Posts

(இலங்கை) பிறை விசயத்தில் சமூகத்தை குழப்பியதும், குழம்பியவர்களும் யார்?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்-

இலங்கையில் சென்ற 2018 ஷவ்வால் தலை பிறை பார்க்கும் விடயத்தில் இலங்கை முழுவதும் பாரிய பிரச்சனையை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம் யார்? என்ன நடந்தது? ஏன் தவ்ஹீத்காரர்களின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தாட்டப்பட்டது? என்பதை ஒவ்வொன்றாக தெளிவான ஆதாரங்களோடு ஆராய்வோம். விருப்பு. வெறுப்புகளுக்கு மத்தியில் நடுநிலையோடும், அல்லாஹ்வை பயந்து நேர்மையாக ஒப்பு நோக்குமாறும் வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். பாதிமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நீதியை உலகத்திற்கு நபியவர்கள் அறிவித்தார்கள். அந்த அடிப்படையில் தனக்கு வேண்டிய முக்கியமான மௌலவியாக இருந்தாலும் அல்லாஹ்விற்கு பயந்து நேர்மையாக சிந்தியுங்கள்.

கடந்த 08-06-2018 வெள்ளிக் கிழமை ஜூம்ஆ குத்பா உரையில் அ. இ. உலமா சபை தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான (உண்மையான) செய்தியை எடுத்து கூறினார்கள். எதிர் வரும் 14-06-2018 வியாழக் கிழமை அன்று அதாவது நோன்பு 28ல் பிறை தென்பட்டால், பிறை பார்த்த செய்தியை இரண்டு சாட்சிகள் உறுதி படுத்தினால் நிச்சயமாக நாம் மறுநாள் வெள்ளிக் கிழமை (15-06-2018) பெருநாள் எடுப்போம். இப்படியான சம்பவம் அலி (ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் நடந்துள்ளது என்று கூறினார்.

ரமலான் 28-ல் இந்த பிறை பார்க்கும் செய்தியை இலங்கையில் உள்ள எந்த ஜமாத்தினர்களும் எந்த ஊடகத்திலும் சொல்லவில்லை, சொன்னவர் ரிஸ்வி முப்தி அவர்கள் தான் என்பதை உலகத்திற்கே தெரியும். காரணம் அவர் குத்பாவில் பேசிய உரை அடங்கிய கிளிப் உலகையே வலம் வந்தது. இதை நாம் ஏன் நினைவுப் படுத்துகிறோம் என்றால், அனைத்து குழப்பங்களுக்கும் அடிப்படை காரணமாக இருந்து விட்டு, தனது தவறுகளை அப்படியே மறைப்பதற்காக தவ்ஹீத்காரர்களின் மீது அபாண்டமாக பழியை சுமத்துகிறார்? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றடிப்படையில், பிறை (குழப்பத்தை) செய்தியை வானொலி மூலமாக சொன்னவரே ரிஸ்வி முப்தி அவர்கள்தான் என்பதை முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். இதை இல்லை என்று யாருக்காவது மறுக்க முடியுமா? பேசக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வை பயந்து பேசுங்கள். ஏன் நடந்த உண்மையை சொல்ல தடுமாறுகிறீர்கள்?

இதனை தொடர்ந்து பெரிய பள்ளிவாசல் அறிவிப்புகள், ஏனைய தனிப்பட்டவர்களுடைய கருத்துகள் பதட்ட நிலையின் உச்சக் கட்டத்தை அடைந்தது.

பெரிய பள்ளியின் முதல் அறிவிப்பு
வெள்ளிக்கிழமை (15-06-2018) நோன்பு 29ல் தான் பிறை பார்க்கப் படும். இதனை பெரிய பள்ளி, அ. இ. உலமா சபை, முஸ்லிம் பண்பாட்டு, கலாச்சார, அலுவல்கள் திணைக்களம் உள்ளடங்கிய பிறை குழு அறிவிக்கின்றது என்று வசந்தம் எப் எம் வானொலி நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பு செய்யப்பட்டது. இது இரண்டாவது குழப்பம். இங்கும் இலங்கையில் உள்ள எந்த ஜமாஅத்தார்களும் எந்த அறிவிப்பையும் அறிவித்து குழப்பத்தை ஏற்ப்படுத்தவில்லை. வெள்ளிக் கிழமை குத்பாவின் மூலம் ரிஸ்வி முப்தி அவர்களின் மூலம் ஒரு அறிவிப்பும், அதன் பிறகு அதற்கு நேர் மாற்றமாக பெரிய பள்ளி சார்பாக எதிர் அறிவிப்பும் வருகிறது. ஒரே பிறை குழுவில் உள்ள இவர்கள், இவர்களுக்குள் எந்த மசூராவும் இல்லாமல் ஏட்டிக்கு போட்டியாக அறிவிப்புகள் செய்து, மக்களை குழப்பியதும், இவர்களுக்குள் குழம்பியதும் இவர்கள் தான் என்பதை இவர்களின் செயல்பாடுகள் உறுதிப் படுத்துகின்றன. இதை இல்லை என்று யாருக்காவது மறுக்க முடியுமா? பேசக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வை பயந்து பேசுங்கள். ஏன் நடந்த உண்மையை சொல்ல தடுமாறுகிறீர்கள்?

மக்காவிலிருந்து செய்தி
இதற்கு மத்தியில் மக்காவிலிருந்து மௌலவி இஜ்லான் அவர்கள் பிறை விசயத்தில் ரிஸ்வி முப்தி அவர்கள் பித்னாவை ஏற்படுத்தி விட்டார் என்ற அறிக்கை அடங்கிய கிளிப்பை வெளியிட்டார். இதை இல்லை என்று யாருக்காவது மறுக்க முடியுமா? பேசக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வை பயந்து பேசுங்கள். ஏன் நடந்த உண்மையை சொல்ல தடுமாறுகிறீர்கள்?

அதன் பிறகு அடுத்தடுத்த நாள், நான் அப்படி பேசியது தவறு என்று மீண்டும் ஒரு கிளிப்பை மௌலவி இஜ்லான் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். தான் அப்படி பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டு, உடனே அடுத்த கிளிப்பை வெளியிட்டது அவரின் பெருந்தன்மையை எடுத்து காட்டுகிறது.

பெரிய பள்ளியின் அடுத்த அறிவிப்பு
வியாழன் (14- 06- 2018) பின்னேரம் நாட்டில் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் பெரிய பள்ளிக்கு அறிவிக்கவும் “பெரிய பள்ளி, அ. இ. உலமா சபை, முஸ்லிம் பண்பாட்டு, கலாச்சார, அலுவல்கள் திணைக்களம் உள்ளடங்கிய பிறை குழு அறிவிக்கின்றது என்று வசந்தம் எப் எம் வானொலி நிகழ்ச்சியில் முதலாவது அறிவிப்புக்கு மாற்றமாக மீண்டும் இரண்டாவதாக ஒலி பரப்பு செய்யப்பட்டது. இப்படி இவர்களுக்குள்ளே பல குழப்பங்கள் சரியான முறையில் எந்த அறிவிப்புகளும் அமையவில்லை.

வழமைக்கு மாற்றம்
(1) நாடு முழுவதும் உள்ள தனது பிறைபார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட கிளைகளுக்கு உத்தியோக பூர்வமாக பிறையை பார்க்க வழமையாக அறிவிப்பதை போல இம்முறை அறிவிக்கவில்லை, அப்படி பாருங்கள் என்று சொல்லியிருந்தால் இந்த பெருநாள் குழப்பம் வந்திருக்காது. ஏன் என்றால் அன்றைய தினம் இலங்கையில் வெற்றுக் கண்களால் நேரடியாக பார்க்க கூடிய அதிகமான வாய்ப்புகள் இருந்தன.
(2) பிறை பார்க்கும் நாளில் பெரிய பள்ளியில் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை வானொலி நிகழ்ச்சியின் மூலம் அடிக்கடி நாட்டு மக்களுக்கு அறிவித்தல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதுவும் இம்முறை சரியாக நடக்கவில்லை?
(3) குழப்பத்தை சமாளிக்க ஒரு கண் துடைப்புக்காக பெரிய பள்ளியில் அமர்ந்து விட்டு நாட்டில் எப்பாகத்திலும் பிறை தென்பட்டதாக செய்திகள் வரவில்லை என்று அறிவித்து விட்டார்கள்.
(4) மீண்டும் சுமார் 11 மணி அளவில் பெரிய பள்ளியில் ஒன்று கூடல்

இப்படி பல குழப்பங்களை மாறி, மாறி அவர்கள் செய்து விட்டு ஒட்டு மொத்த பழியையும் தவ்ஹீத்காரர்களின் மீது சுமத்தி விட்டு, தாங்கள் நல்லவர்கள் என்று மக்களிடத்தில் காட்டுவது எந்த விதத்தில் நியாயமானது? மக்களை சமாளிக்கலாம், படைத்த இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறானே?என்பதை மறந்து விட வேண்டாம்.
“நானே ராஜா, நானே மந்திரி என்பது போல நீங்களே ஒன்றை அறிவித்தீர்கள், மீண்டும் நீங்களே அதற்கு மாறும் செய்தீர்கள், குட்டையை குழப்பி விட்டவர்களே நீங்கள் தானே? பொது மக்களை சமாளித்து, அவர்களுடைய கண்களை மறைத்தாலும், இதன் பின்னணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சூழ்ச்சி செய்த அனைவரையும் அல்லாஹ் சும்மா விட மாட்டான்.

வானிலை அறிக்கையும், முடிவில் குழப்பமும்
14-06-2018 அன்று வியாழக் கிழமை அதிகாலை 1-13க்கு பிறை பிறந்து, சுமார் 18 மணித்தியாலங்கள் வளர்ந்து, மேற்கு திசையில் 10 பாகைக்கு மேல் தென்படும். இதை இலங்கையில் நேரடியாக வெற்றுக்கண்களால் பார்க்க முடியும் என்ற வானிலை அறிக்கையின் பின்னணியினாலேயே பிறை குழு, தானும் குழம்பி, மக்களையும் குழப்பியது?

நோன்பு 28ல் வியாழக்கிழமை (14-06-2018) பிறை தென்படும் என்று எந்த நம்பிக்கையில் நீங்கள் அனைவரும் பிறை செய்தியை எதிர்ப்பார்த்து பெரிய பள்ளியில் அமர்ந்தீர்கள்? அன்று பிறை தென்படும், நீங்கள் பெரிய பள்ளியில் அமருங்கள் என்று எடுத்து சொன்னவர்கள் தவ்ஹீத்வாதிகளா? அதை நம்பியா பெரிய பள்ளியில் உட்கார்ந்தீர்கள்? ஆரம்பத்தில் அதாவது ரமழான் தலை பிறை பார்க்கும் போது நாடு முழுவதும் மழையாகவும், மேகம் தெளிவில்லாமல் மப்பும், மந்தாரமாக இருந்ததினால் எங்களுக்கு பிறை தென்படவில்லை, எனவே வானிலை அறிக்கை படி இன்று (14) பிறை தென்படக் கூடிய சாத்தியக் கூறு இருக்கிறது, ஒரு நோன்பை களா செய்வோம் என்ற நம்பிக்கையில் தானே அமர்ந்தீர்கள். நீங்கள் எடுத்த பிழையான முடிவில் அடுத்த குழப்பத்தை நீங்கள் அவதானிக்கவில்லையா?
அன்றை தினம் பிறை தென்படாவிட்டால் நோன்பை 29 ஆக பூர்த்தியாக்கி, ரமழான் முப்பதாக பூர்த்தி செய்யப்படுகிறது. என்பது தான் வழமையாகும். மீண்டும் மறு நாள் பெரிய பள்ளியில் அமர்ந்து பிறையை கண்டால் அறிவியுங்கள் என்று அறிவித்தது. உங்களுக்கே குழப்பமாக தெரியவில்லையா? தொடர்ந்து இரண்டு நாட்கள் எந்த அடிப்படையில் பிறையை அறிவிக்க சொன்னீர்கள்? ரமழான் பூர்த்தியாக்கப்பட்டு விட்டது என்றால் அதன் பிறகு பிறை பார்க்க தேவை கிடையாதே? இல்லை நாங்கள் மறுநாள் பெரிய பள்ளியில் 15ம் திகதி அமர்ந்த நாள் தான் 29 என்றால், அதற்கு முன்னைய (14 திகதி) பிறை 28ம் நாள் ஏன் பிறை பார்க்க அறிவித்தீர்கள்? ஏன் பெரிய பள்ளியில் பிறைக்காக இருந்தீர்கள்? மேற்ச்சுட்டிக்காட்டிய அனைத்தும் உங்களின் தெளிவான பதட்டத்தையும், குழப்பத்தையும் வெளிச்சம் போட்டு காட்டவில்லையா? இதையும் தாண்டி பல இடங்களில் பிறை கண்ட செய்தியை பல பொருத்தமற்ற காரணங்களை கூறி மறுத்து விட்டீர்கள் அதற்கு நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பதில் கூறிக் கொள்ளுங்கள்.

மீண்டும் ரிஸ்வி முப்தியின் குத்பா
இவ்வளவு குழப்பங்கள் நடந்ததிற்கான காரணங்களை நீங்கள் நன்றாக தெரிந்து கொண்டு, 15-06-2018 அன்றை குத்பாவில் சர்வதேச பிறைகாரர்களின் திட்டமிட்ட வேலை என்று முழு பூசனிக்காயையும் சோற்றில் மறைக்க முற்ப் படுவது உலமா சபை தலைவருக்கு அழகானதா? எப்படி வாய் கூசாமல் மிம்பரில் இருந்து கொண்டு இந்த அபாண்டமான வார்த்தையை பேச துணிந்தீர்கள்? யாரும் என்னை தட்டி கேட்க முடியாது என்ற ஆணவமா? படைத்தவன் இருக்கின்றான் என்ற சிந்தனையை மறந்து விடாதீர்கள்? என் பின்னால் பல இலட்ச கணக்கான மக்கள் இருக்கிறார்கள், பல கோடி சொத்துகள் நமக்கு பின்னால் இருக்கிறது என்று தலைகீழாக ஆட்டம் போட்வர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று அன்றைய வரலாறிலிருந்து, நமது சமகால வரலாறு வரை நடந்த சம்பவங்களை ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். “அல்லாஹ்வுடைய பிடி மிகவும் கடுமையானது என்பதை மறந்து விடாதீர்கள். மேலும் பிறை பார்த்ததாக செய்தி சொன்னவர்கள் அனைவரும் சர்வதேச பிறைகாரர்களா? பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும். நிச்சயமாக நீங்கள் சொன்ன இந்த விடயத்தில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வுடைய உதவி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். இந்த விவகாரத்தை நாம் அல்லாஹ்விடமே ஒப்படைப்போம். இந்த பிறை விவகாரத்தில் நேரடியாகவும், திரைக்கு பின்னால் இருந்தும், சூழ்ச்சி செய்த அனைவரையும், தவறாக பழி சுமத்தியவர்களையும் அல்லாஹ்வே பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ் போதுமானவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *