பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2320
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்மை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2321
முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், ‘இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2322
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
“கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
“கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2323
சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். ‘அஸ்த் ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) என்னிடம், ‘விவசாயப் பண்ணைணையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத்தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டேன்” என்றார்கள். நான், ‘இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று வினவினேன். சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி), ‘ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2324
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “ஒருவர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்து கொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, ‘நான் இதற்காக (சுமை சுமந்து செல்வதற்காக) படைக்கப்படவில்லை; நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைக் கூறிவிட்டு அண்ணலார், ‘நானும், அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம். மேலும், (ஒரு முறை) ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓடலாயிற்று. அந்த ஆட்டை மேய்த்துக் கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, ‘மன் லஹா யவ்மஸ் ஸபுஇ – கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்க மாட்டானே’ என்று கூறியது. நானும், அபூ பக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்” என்று கூறினார்கள். பிறகு, (இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த) அபூ ஸலமா(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறிய அந்நாளில் அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2325
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (மதீனாவாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களிடம், ‘எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்ச மரங்களைப் பங்கிட்டு விடுங்கள்” என்றனர். அதற்கு அண்ணலார், ‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, ‘அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்கு பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கிறோம்” என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், ‘செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2326
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிலிட்டுக் கொளுத்தியும் (இன்னும் பல மரங்களை) வெட்டியும்விட்டார்கள். இந்தப் பேரீச்சந் தோப்புகளுக்குத்தான் ‘அல் புவைரா’ என்று கூறுவர். இதைக் குறிப்பிட்டுத்தான் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி), ‘புவைராவின் நெருப்பு பரவிக் கொண்டிருக்க, அதை (அணைத்திட) எதுவும் செய்ய முடியாமல் (இயலாமையுடன்) பார்த்துக் கொண்டிருப்பது ‘பனூ லுஅய்’ குலத்து (குறைஷித்) தலைவர்களுக்கு எளிதாம்விட்டது” என்று (பரிகாசம் செய்து) கவிதை பாடுகிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2327
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) ‘நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் நிபந்தனையுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில் அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (பயிர் நோய்களாலும், பயிர்ப் பூச்சிகளின் தாக்குதலாலும்) பாதிக்கப்பட்டு விடும். மீதமுள்ள (எங்கள் வருவாய்க்கான) நிலப்பகுதி (அவற்றின் தாக்குதல்களிலிருந்து) தப்பித்துக் கொள்ளும். இன்னும் சில வேளைகளில் மீதமுள்ள நிலப்பகுதி பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதி தப்பித்துக் கொள்ளும். எனவே, நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) இவ்விதம் குத்தகைக்கு எடுக்க வேண்டாமென்று தடை செய்யப்பட்டோம். அந்நாள்களில் தங்கமும், வெள்ளியும் (குத்தகைத் தொகையாகப் பயன்படுத்தப்படும் வழக்கம்) இருக்கவில்லை.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2328
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்தார்கள்.
இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிருந்து, நபி(ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும் இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர். உமர்(ரலி) (கலீஃபாவாக வந்த போது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக் கொள்வது அல்லது முன்பு நடை பெற்று வந்த வழக்கத்தின் படியே, நூறு வஸக்குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக் கொள்வது என்ற இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) வஸக்குகளையே தொடர்ந்து பெற்றனர். அன்னை ஆயிஷா(ரலி) நிலத்தைப் பெற்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2329
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் ‘அவற்றில் விளையும் (பழங்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றின்) விளைச்சலில் பாதியை (இஸ்லாமிய அரசுக்குக்) கொடுத்து விட வேண்டும்’ என்னும் நிபந்தனையின் பேரில் கைபர் வாழ் மக்களுடன் ஒப்பந்தம் செய்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2330
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் தாவூஸ்(ரஹ்) அவர்களிடம், ‘(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள்விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்” என்றேன். இதைக்கேட்ட தாவூஸ்(ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், ‘நபி(ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. மாறாக, ‘உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி அதைக்) கொடுத்து விடுவது சிறந்ததாகும்’ என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று மக்களில் பேரறிஞரான இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2331
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, ‘அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (மீதிப்பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்துவிடவேண்டும்)’ என்னும் நிபந்தனையின் பேரில் கொடுத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2332
ராஃபிஉ(ரலி) அறிவித்தார். நாங்கள் மதீனாவாசிகளிலேயே அதிகமாகப் பண்ணை வயல்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தோம். நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது நிலத்தின் உரிமையாளரிடம், ‘(நிலத்தின்) இந்தத் துண்டு(டைய விளைச்சல்) எங்களுக்குரியது” என்று சொல்வது வழக்கம். சில வேளைகளில், நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் தரும்; இன்னொரு பகுதி விளைச்சல் தராது. எனவே, நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு நிபந்தனையிட வேண்டாமென்று எங்களைத் தடுத்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2333
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்தது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர் பாராதவிதமாக) பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், ‘நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக – துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மைவிட்டு அகற்றி விடக் கூடும்” என்று பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் மன்றாடலானார்;
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒரு நாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான் வீட்டை அடைந்தபோது) நெடு நேரம் கழிந்து இரவாகி விட்டிருந்தது. (என் தாய் தந்தை) இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன். வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் (ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலைமாட்டில் நின்று கொண்டேன். என் (தாய் தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தைகளோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக் கொண்டிருந்தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாம்விட்டது. நான் இச்செயலை உன் திருப்தியை நாடியே செய்திருக்கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம்.
அவ்வாறே அல்லாஹ் (அவர்களுக்கு) சிறிதளவு நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.
மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி – முறைப்பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரண்டு கால்களுக்கும் இடையே அமர்ந்தபோது அவள், ‘அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே” என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக!
உடனே, பாறை இன்னும் சற்று விலகியது.
மூன்றாமவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:
இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், ‘என்னுடைய உரிமையை (கூலியைக்) கொடு” என்று கேட்டார். நான் (நிர்ணயம் செய்திருந்த) அவரின் கூலியை அவர் முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். (அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எதுவரையென்றால் அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சில காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து, ‘அல்லாஹ்வுக்கு அஞ்சு” என்று கூறினார். நான் அவரிடம், ‘அந்த மாடுகளிடமும் இடையர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்” என்றேன். அதற்கு அம்மனிதர், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சு என்னைப் பரிகாசம் செய்யாதே” என்று கூறினார். நான், ‘உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. நீ இவற்றை எடுத்துக் கொள்ளு என்று பதிலளித்தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக!
(இந்தப் பிரார்த்தனையைச் செவியற்றவுடன்) அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2334
அஸ்லம்(ரலி) அறிவித்தார். “முஸ்லிம்களின் வருங்காலத் தலைமுறைகள் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களைப் பங்கிட்டதைப் போன்று நானும், நான் வெற்றி கொண்ட ஊர்களின் நிலங்களையெல்லாம் (இஸ்லாமியப் படையின் வீரர்களிடையே) பங்கிட்டு விட்டிருப்பேன்” என்று உமர்(ரலி) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2335
அன்னை ஆயிஷா(ரலி) கூறினார். “யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தைப் பயிரிடுகிறவரே அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அதிக உரிமையுள்ளவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“உமர்(ரலி) தம் ஆட்சிக் காலத்தின்போது இதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளித்தார்கள்” என்று உர்வா(ரஹ்) கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2336
உமர்(ரலி) அறிவித்தார். ‘அல் அகீக்’ பள்ளத்தாக்கின் கீழே (பத்னுல் வாதியில்) ‘துல் ஹுலைஃபா’ என்னுமிடத்தில், தம் ஓய்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் இரவைக் கழித்துக் கொண்டிருந்தபோது கனவொன்று கண்டார்கள். அதில் அவர்களுக்கு, ‘நீங்கள் அருள் வளம் நிரம்பிய (ஆசிர்வதிக்கப்பட்ட) ஒரு பள்ளத்தாக்கில் தங்கியுள்ளீர்கள்” என்று கூறப்பட்டது.
(அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரலி) கூறினார்:
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் ஒட்டகத்தை எங்கே மண்டியிட்டு அமரச் செய்வது வழக்கமோ அதே இடத்தில், இறைத்தூதர் ஓய்வெடுக்கும் இடத்தைத் தேடியவராக, எங்கள் ஒட்டகத்தையும் சாலியும்(ரஹ்) மண்டியிட்டு அமரச் செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அந்த ஓய்விடம் ‘அகீக்’ பள்ளத்தாக்கின் அடி வாரத்தில் அமைந்திருந்த பள்ளி வாசலுக்குக் கீழ்ப்பகுதியில் இருந்தது. பள்ளிவாசலிலிருந்து (வரும்) நடுவழியொன்று அந்த ஓய்விடத்திற்கும் நெடுஞ்சாலைக்கும் இடையே அமைந்திருந்தது.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2337
உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘அல் அகீக்’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது, ‘இன்றிரவு (என் கனவில்) என் அதிபதியான இறைவனிடமிருந்து ஒருவர் (ஜிப்ரீல்) வருகை தந்து, ‘இந்த அருள் வளம் நிரம்பிய பள்ளத்தாக்கில் தொழுவீராக! மேலும், ஹஜ்ஜுடன் உம்ரா செய்ய நாடுகிறேன்’ என்று சொல்வீராக” என்றார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2338
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாம் விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், ‘நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் ‘பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)” என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்” என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2339
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். “எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைக் கூடாது என்று இறைத்தூதர் எங்களைத் தடுத்தார்கள்” என்று (என் தந்தையின் சகோதரர்) ளுஹைர்(ரலி) கூறினார். (உடனே), ‘இறைத்தூதர் சொன்னதே சரியானது” என்று கூறினேன்.
(அதற்கு) அவர் சொன்னார்; ஒரு முறை என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து, ‘நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நீரோடைகளின் கரைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அல்லது சில வஸக்குகள் பேரீச்சம் பழங்களை அல்லது வாற்கோதுமையை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்குவிட்டு விடுகிறோம்” என்று நான் பதிலளித்தேன். அதற்கு அண்ணலார், ‘அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே அவற்றில் வேளாண்மை செய்யுங்கள்; அல்லது பிறருக்கு இலவசமாக (கைம்மாறு பெறாமல்) பயிரிடக் கொடுத்து விடுங்கள்; அல்லது பயிரிடாமல் அப்படியேவிட்டுவிடுங்கள்” என்றார்கள். (இதைக் கேட்ட) நான், ‘நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறினேன்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2340
ஜாபிர்(ரலி) அறிவித்தார். மக்கள் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்), விளைச்சலில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது பாதியைத் தமக்குக் கொடுத்து விடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் தம் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர், தானே அதனைப் பயிரிடட்டும். அல்லது அதனை (தன் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது பிரதிபலன் எதிர் பார்க்காமல்) இலவசமாகப் பயிர் செய்யக் கொடுத்து விடட்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், தன் நிலத்தை அவர் அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2341
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதனைத் தானே பயிரிடட்டும்; அல்லது அதனை தன் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது (பிரதிபலன் எதிர் பார்க்காமல் இலவசமாகப் பயிர் செய்யக் கொடுத்து விடட்டும். இவ்வாறு செய்ய அவர் மறுத்தால் தன் நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2342
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். (ஹதீஸ் எண் 39ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த நபிமொழியை, நான் தாஊஸ்(ரஹ்) அவர்களிடம் கூறிய பொழுது அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டுப் பயிரிடச் செய்வது அனுமதிக்கப்பட்டதேயாகும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் அதனை (நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத்) தடை செய்யவில்லை. மாறாக, ‘ஒருவர் தம் சகோதரருக்குத் தன் நிலத்தை இலவசமாகப் பயிரிட்டு (அதன் விளைச்சல் முழுவதையும் எடுத்து)க் கொள்ளக் கொடுத்து விடுவது அதற்காக ஒரு குறிப்பிட்ட பங்கை (குத்தகைத் தொகையாகப்) பெற்றுக் கொள்வதை விடச் சிறந்தது” என்றே கூறினார்கள்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2343
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் தம் நிலங்களை இப்னு உமர்(ரலி) குத்தகைக்குவிட்டு வந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2344
பின்னர் இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு (ஹதீஸ் எண் 2339ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த, ‘நபி(ஸல்) அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள்” என்னும் நபிமொழி எடுத்துரைக்கப்பட்டது. இப்னு உமர்(ரலி) இதைச் செவியுற்றவுடனே ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். இப்னு உமர்(ரலி) ராஃபிஉ(ரலி) அவர்களிடம் இது குறித்து விசாரித்தார்கள். ராஃபிஉ(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள். இதனைச் செவியுற்ற இப்னு உமர்(ரலி) ராஃபிஉ(ரலி) அவர்களிடம், ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் கரையோரமாக உள்ள நிலங்களின் விளைச்சலையும் சிறிது வைக்கோலையும் எங்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்கு கொடுத்து வந்ததைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்களே” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2345
சாலிம்(ரஹ்) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்” என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். பிறகு, அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (மேற்கண்ட ஹதீஸ் எண் 2344ல் ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறியதைக் கேட்ட பின்) நிலக்குத்தகை தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் எதனையாவது பிறப்பித்து (பழைய விதிகளை மாற்றியமைத்து) விட்டிருக்க, அதனை நாம் அறியாதிருந்து விட்டோமோ என்று அஞ்சி நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்திவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2346
ராஃபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர்கள் இருவர், ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் அல்லது நில உரிமையாளர்(களான நாங்கள்) வரையறுக்கிற (ஒரு பகுதி) விளைச்சலை எங்களுக்குக் கொடுத்து விடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்குவிட்டு வந்தோம். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவிட்டார்கள்” என்று என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஹன்ழலா இப்னு கைஸ்(ரஹ்) கூறினார்:
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களிடம், ‘தங்க மற்றும் வெள்ளி நாணயங்களைப் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடலாமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதில் (தங்க, வெள்ளி நாணயங்களைப் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடுவதில்) தவறில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் லைஸ்(ரஹ்), ‘ஹலாலையும் (அனுமதிக்கப்பட்டதையும்) ஹராமையும் (விலக்கப்பட்டதையும்) வேறுபடுத்தி விளங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் தடை செய்யப்பட்ட குத்தகை முறைகளை ஆய்வுக் கண்கொண்டு பார்ப்பார்களாயின் அவற்றிலுள்ள ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு அவற்றை அனுமதிக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2348
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:
சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்” என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது” என்று கூறுவான்.
(நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்” என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2349
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார். நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம். ஏனெனில், எங்களுடன் கிழவியொருத்தி நட்பாக இருந்தாள். அவள், நாங்கள் எங்கள் நீரோடைகளின் ஓரமாக நட்டு வந்த ‘சில்க்’ என்னும் கீரைத் தண்டுகளைப் பிடுங்கி, அவற்றைத் தன்னுடைய பாத்திரமொன்றில் போட்டு, அவற்றுடன் வாற்கோதுமை விதைகள் சிலவற்றையும் கலந்து (ஒரு வகை உணவைத் தயார் செய்து) தருவாள். நாங்கள் ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டோமென்றால் அந்தக் கிழவியைச் சந்திப்போம். அவள் அந்த உணவை எங்களுக்குப் பிரியமாகத் தருவாள். இதன் காரணமாக நாங்கள் வெள்ளிக் கிழமையன்று மகிழ்ச்சியுடன் இருப்போம். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் உண்போம்; மதிய ஓய்வு கொள்வோம்.
மூன்றாவது அறிவிப்பாளரான யஃகூப்(ரஹ்) கூறினார்:
இரண்டாம் அறிவிப்பாளர் அபூ ஹாஸிம்(ரஹ்), ‘அந்த உணவு கெட்டியான கொழுப்போ திரவக் கொழுப்போ எதுவும் அற்றதாக இருந்தது” என்று கூறினார்கள் எனறே கருதுகிறேன்.
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2350
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா ஏராளமான நபி மொழிகளை அறிவிக்கிறாரே என்று மக்கள் (என்னைக் குறை கூறும் தொனியில்) பேசிக் கொள்கிறார்கள். அல்லாஹ்விடம் இதற்கெனக் குறித்த வேளை ஒன்று உண்டு. மேலும், அவர்கள், ‘முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்துவிட்டது? அபூ ஹுரைரா நபிமொழிகளை அறிவிப்பதைப் போல் அவர்கள் அறிவிப்பதில்லையே ஏன்?’ என்று கேட்கிறார்கள். என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தனர்; என் அன்சாரித் சகோதரர்களோ தங்கள் சொத்துகளைப் பராமரிக்கும் வேலையில் (விவசாயம் போன்ற பணிகளில்) ஈடுபட்டிருந்தனர். (அதே நேரத்தில்) நானோ என் வயிற்றை நிரப்பும் (வருவாய் போதுமென்ற) திருப்தியுடன் (மேற்கொண்டு வருவாய் எதுவும் தேடாமல்) அல்லாஹ்வின் தூதருடனேயே எப்போது இருப்பதை வழக்கமாகக் கொண்ட ஏழை மனிதனாயிருந்தேன். நபி(ஸல்) அவர்களுடன் மற்றவர்கள் இல்லாத போதும் (சம்பாத்தியத்தைத் தேடி அவர்கள் வெளியே சென்று விடும் போதும்) நான் (நபியவர்களுடன் இருப்பேன். அவர்கள் (நபி மொழிகளை) மறந்து விடும்போது நான் (அவற்றை) நினைவில் (பாதுகாப்பாக) வைத்திருப்பேன். மேலும், ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள், ‘நான் என்னுடைய இச்சொல்லைச் சொல்லி முடிக்கிற வரை, தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து, பிறகு தன் நெஞ்சோடு அதைச் சேர்ந்து வைத்துக் கொள்கிறவர் என் வாக்கு எதனையும் மறக்கமாட்டார்” என்று கூற, நான் என் அங்கியை விரித்தேன். அதனைத் தவிர என் மீது வேறு ஆடை எதுவும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் தம் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை அதை அப்படியே விரித்து வைத்திருந்துவிட்டு, பிறகு அதனை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க் கொண்டேன். நபி(ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அப்போதிருந்து அவர்களின் சொற்களில் எதனையுமே இன்று வரை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தின் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் நான் (நபிமொழிகளில்) எதனையுமே உங்களுக்கு ஒருபோதும் அறிவித்திருக்க மாட்டேன்.
இவைதாம் அந்தத் திருக்குர்ஆன் வசனங்கள்.
நாம் இறங்கியருளிய தெளிவான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவர்க்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும் மறைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கிறான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கிறார்கள். ஆனால், (இத்தவற்றிலிருந்து) திருந்தி, தம் செயல் முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, (தாம் மறைத்து வைத்தவற்றை) எடுத்துரைக்கிறவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கிறேன். (திருக்குர்ஆன் 02:159, 160)