Featured Posts

42.முஸாக்காத் (நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்)

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2351

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2352

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்திவிட்டு, தம் (திரு)வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் இடப்பக்கத்தில் அபூ பக்கர்(ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். எனவே, உமர்(ரலி), நபி(ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, ‘உங்களிடம் இருப்பதை அபூ பக்ருக்கு கொடுத்து விடுங்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் வலப்பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, ‘(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப்பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2353

‘(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்தாகி விடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2354

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகி விடுவீர்கள். இதையும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2355

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சுரங்கத்தினாலோ, கிணற்றினாலோ, மிருகங்களாலோ ஏற்படும் இழப்பு மன்னிக்கப்பட்டதாகும். புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (அரசுக்கு ஸகாத்தாகக்) கொடுத்துவிடவேண்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2356

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். “ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (திருக்குர்ஆன் 03:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ்(ரலி) வந்து (மக்களை நோக்கி, ‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?’ என்று கேட்டார்கள். நான், ‘என்னிடம் சாட்சிகள் இல்லை’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், பிரதிவாதி (‘அந்த நிலம் என்னுடையது தான்’ என்று) சத்தியம் செய்யவேண்டும்’ என்றார்கள். நான், ‘அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே’ என்று கூறினேன். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2358

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.

ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.

இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன்.

மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, ‘எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.

இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்…” என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2359

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓட விடு” என்று கூறினார். ஸுபைர்(ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), ‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மதே!) உங்களுடைய இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தனைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 04: 65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2361

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். ஸுபைர்(ரலி) அவர்களுக்கு ஓர் அன்சாரித் தோழருடன் (பேரீச்சந் தோப்புக்கு நீர் பாய்ச்சும் விஷயத்தில் சச்சரவு ஏற்பட்டது. அப்போது (நபி(ஸல்) அவர்களிடம் இந்த விஷயம் தீர்ப்புக்காகச் சென்றபோது) நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! (உங்கள் தோப்புக்குத்) தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு (அதை அன்சாரியின் தோப்புக்கு) அனுப்பி விடுங்கள்” என்றார்கள். உடனே, அன்சாரித் தோழர், ‘அவர் உங்கள் அத்தை மகன் ஆயிற்றே! (எனவேதான் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்”) என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! வரப்பை அடையும் வரை நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு (பின்னர் அன்சாரியின் தோப்புக்கு) அதைத் திறந்து அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), ‘திருக்குர்ஆனின் இந்த (திருக்குர்ஆன் 04:65) வசனம் இந்த விவகாரத்தைக் குறித்துத்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2362

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். இறைத்தூதர் (தம்மிடம் இந்த வழக்கு வந்தபொழுது), ‘ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டைய தோப்பு)க்கு அதை அனுப்பி விடுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, ‘இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?’ என்று கேட்டார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, ‘ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். (பிறகுவிட்டு விடுங்கள்)” என்று கூறி, ஸுபைர்(ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, ஸுபைர்(ரலி), ‘குர்ஆனின் இந்த (திருக்குர்ஆன் 04:65) வசனம் இந்த விவகாரம் குறித்தே இறங்கியது” என்றார்கள்.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்.

(இந்த நபிமொழியை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்த) இப்னு ஷிஹாப்(ரஹ்) என்னிடம், ‘(உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு வரப்பகுளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்னும் (இந்த) நபிமொழியை அடிப்படையாகக் கொண்டே, ‘தண்ணீர் கணுக்கால்கள் வரை உயர்ந்து நிரம்பிவிட்டால் போதுமான அளவுக்கு நீர் பாய்ச்சிவிட்டதாகப் பொருள்’ என்று அன்சாரிகளும் பிற மக்களும் மதிப்பிட்டார்கள்’ என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2363

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (ம்ணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2364

அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், ‘இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?’ என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக் கொண்டிருந்தது. ‘இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனைப்படுத்தப்படுகிறாள்?)” என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), ‘இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் செத்துவிடும் வரை இந்தப் பெண் கட்டி வைத்திருந்தாள்” என்று பதிலளித்தனர்.

இந்த அறிவிப்பின் இடையே, ‘அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறன்” என அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2365

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – ‘நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2366

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பால் நிரம்பிய) பாத்திரம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது, அவர்களின் வலப்பக்கம், மக்களில் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவர் அமர்ந்திருந்தார். இடப் பக்கம் முதியவர்கள் அமர்ந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘சிறுவரே! முதியவர்களுக்கு நான் (இதைத்) தருவதற்கு நீர் அனுமதியளிக்கிறீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! உங்களிடமிருந்து எனக்கு (நற்பேறாகக்) கிடைக்கக் கூடிய என்னுடைய பங்கை நான் யாருக்கும்விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை” என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவருக்கே அதைக் கொடுத்துவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2367

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2368

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (நபி) இஸ்மாயீலின் தாயாருக்கு (ஹாஜராவுக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்)விட்டு விட்டிருந்தால் – (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) – தண்ணீரைக் கையால் அள்ளிக் குடிக்காமல் இருந்திருந்தால் – அது (நிற்காமல்) ஓடுகிற நீரோடையாக இருந்திருக்கும். (பிறகு) பனூ ஜுர்ஹும் குலத்தார் அங்கு வந்து, ‘உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?’ என்று (ஹாஜராவிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘சரி, (தங்கி வசித்துக் கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத் தண்ணீரில் உங்களுக்கு எந்த பாக்கியதையும் இருக்காது” என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார். ‘சரி (அவ்வாறே ஒப்புக் கொள்கிறோம்)” என்று கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2369

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்த போது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்வதன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, ‘உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் என்னுடைய அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2370

நபி(ஸல்) அவர்கள், ‘பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் அனுமதி இல்லை” என்று கூறினார்கள்.

இதை ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) சிறிது தொலைவிலுள்ள) ‘நகீஉ’ என்னுமிடத்தைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந்தார்கள். உமர்(ரலி), ‘ ‘ஷரஃப்’ மற்றும் ‘ரபதா’ என்னுமிடங்களைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந்தார்கள் என்று நமக்குச் செய்தி கிட்டியுள்ளது” என்று இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2371

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக, பசுமையான ஒரு வெட்ட வெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டி வைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில் அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அதன் கயிறு அறுந்து, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். (இவ்விதம் நல்ல நோக்கங்களுக்காக வளர்க்கப்படும்.) இந்த குதிரை அவருக்கு (மறுமையில்) நற்பலன் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கும், இன்னொருவர், தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் அதைக்கட்டி, வை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது சுமத்தும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு அந்த (அவருடைய) குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் (தவறான நோக்கத்தின்) காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆம் விடுகிறது.

நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; ‘எவன் அணுவளவும் நன்மை செய்திருந்தானோ அவன் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனையைக்) கண்டு கொள்வான்’ (திருக்குர்ஆன் 96: 7{8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2372

ஸைத் இப்னு காலித்(ரலி) கூறினார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்து விடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘(பிறரின்) தொலைந்து போன ஆடு (நம்மிடம் வந்து சேர்ந்தால்…)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அது உனக்குச் சொந்தமானது; அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது; அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘தொலைந்து போன ஒட்டகம் (நம்மிடம் வந்து சேர்ந்தால்)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர் பையும் (குடலும்) அதன் கால் குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ளும் வரை. (எனவே, அதன் போக்கில் அதைவிட்டுவிடு)” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2373

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்த விற்(று சம்பாதிக்)க, அதன் காரணத்தால் அல்லாஹ், அவரின் முகத்தை (இழிவிலிருந்து) காப்பாற்று வதானது, அவர் மக்களிடம் சென்று யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். (ஏனெனில், அவ்விதம் அவர்களிடம் கேட்கும்போது) அவருக்குக் கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம். என ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2374

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒருவர் விறகு (சேகரித்து அதன்) கட்டு ஒன்றை முதுகில் சுமந்து (விற்கச்) செல்வது அவர் ஒருவரிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். ஏனெனில், (அப்படிக் கேட்கும் போது) அவர் இவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; கொடுக்காமலும் போகலாம். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2375

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். ‘இத்கிர்’ புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடம்யும் இருந்தாள். அவள், ‘ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்” என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை கண்டேன். உடனே, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி(ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தம் கோபத்தை நபி(ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தங்களின் பார்வையை உயர்த்தி, ‘நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே?’ என்று கூறினார்கள். இதைக் கேட் நபி(ஸல) அவர்கள், அவர்களைவிட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்.

நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்களிடம், ‘திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா(ரலி)) எடுத்தார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துச் சென்றார்” என்று கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2376

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய தரிசு நிலங்களை (அன்சாரிகளுக்கு) வருவாய் மானியமாகத் தர விரும்பினார்கள். அதற்கு அன்சாரிகள், ‘(இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் எங்களுக்கு வருவாய் மானியம் வழங்குவதைப் போன்றே எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் வருவாய் மானியம் வழங்காத வரை (நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டோம்)” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அன்சாரிகளே!) எனக்குப் பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் (காலம்) வரை பொறுமையைக் கடைப் பிடியுங்கள்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2377

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந்தால் எங்களுடைய குறைஷிச் சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார்கள். ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகிற அளவுக்கு) மானிய நிலங்கள் (அல்லது நிலவரி மூலமாகக் கிடைக்கும் நிதிகள்) நபி(ஸல்) அவர்களிடம் இருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குப் பின்னால் (சிறிது காலத்திற்குள்ளாகவே, ஆட்சியதிகாரத்தில்) உங்களை விட மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2378

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” பெண் ஒட்டகத்தின் உரிமைகளில் நீர் நிலையருகே அதன் பாலைக் கறப்பதும் ஒன்றாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2379

‘மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பின்னர் பேரீச்ச மரங்களை வாங்கியவர் (அந்த விளைச்சல் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவற்றின் விளைச்சல் விற்றவருக்கே உரியதாகும். செல்வம் வைத்திருக்கும் ஓர் அடிமையை வாங்கியவர், (அந்த அடிமையின் செல்வம் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே உரியதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2380

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, ‘அராயா’ மரத்திலுள்ள கனிகளை (ஐந்து) வஸக்குகளுக்கும் குறைவான அளவில்) குத்து மதிப்பாக விற்பதற்கு அனுமதியளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2381

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முகாபராவையும் பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள் மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும் (பகரமாக) மட்டுமே (அவற்றை) விற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (மரத்திலுள்ள கனிகளுக்குப் பகரமாக சேமிக்கப்பட்ட, உலர்ந்த கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். எனினும்) ‘அராயா’வில் மட்டும் அப்படி விற்பதற்கு அனுமதியளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2382

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அராயா’ வகை மரத்திலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு பதிலாக ஐந்து வஸக்குகளுக்கும் குறைவாகவோ அல்லது ஐந்து வஸக்குகளுக்கோ விற்பனை செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூத் இப்னு ஹுஸைன்(ரஹ்), ‘ஐந்து வஸக்குகளுக்கும் குறைவாகவா? ஐந்து வஸக்குகளுக்கா’ என்று சந்தேகப்படுகிறார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 42, எண் 2383

ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) மற்றும் ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) இருவரும் அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த, பறிக்கப்பட்ட கனிகளுக்காக விற்பதைத் தடை செய்தார்கள்); அராயாக்காரர்களைத் தவிர. நபி(ஸல்) அவர்கள், அராயாக்காரர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட (முஸாபனா) வியாபாரம் செய்து கொள்ள அனுமதியளித்தார்கள்.

அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்: “புஷைர்(ரஹ்) இதைப் போன்றதை (ஹதீஸை) எனக்கு அறிவித்தார்கள்” என்று இப்னு இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.