முன்பொரு காலத்தில் லுக்மான் என்றொருவர் வாழ்ந்து வந்தார். இவர் அடிமையாகவும் கருப்பராகவும் இருந்தார். ஆனால் அவர் ஞானம் மிக்கவராக இருந்தார். இஸ்லாம் நிறங்களைப் பார்க்காது அவரின் அறிவும் ஞானமும் அவருக்கு உயர்வைக் கொடுத்தது. அடிமையாக இருந்த அவர் தனது ஞானத்தால் உயர்வு பெற்றார். திருக்குர்ஆனில் அவர் பெயரில் ஒரு அத்தியாயமே உள்ளது!
லுக்மான் தனது மகனுக்கு அறிவுரை கூறுபவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது மகனை அழைத்து அவருக்கு அறிவுரை கூறினார். அந்த அறிவுரைகள் நமக்கும் அவசியமானதாகும். இதோ லுக்மான் எனும் ஞானியின் அறிவுரை.
“என்னருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிடாதே! இணை வைத்தல் என்பது அல்லாஹ்வுக்கு அடியான் செய்யும் மிகப்பெரும் அநியாயமாகும்.”பெற்றோருடன் நல்லமுறையில் நடந்துகொள்! உனது பெற்றோர்கள் உனக்காகப் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார். உன் தாய் கஷ்டத்தின்மேல் கஷ்டத்தை அனுபவித்து உன்னைச் சுமந்தாள். கஷ்டப்பட்டு உன்னைப் பெற்றெடுத்தாள். அதன்பின்னும் 2 வருடங்கள் உனக்குப் பாலூட்டினாள். எனவே அல்லாஹ்வுக்கும் நன்றியுடையவனாக இரு! உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துபவனாக இரு!
“என்னருமை மகனே! நீ செய்வது கடுகைப் போன்ற சிறிய செயலாக இருந்தாலும் அதை நீ பூமியிலோ வானத்திலோ பாலைவனத்திலோ யாரும் பார்க்காத வண்ணம் செய்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். எனவே தனியாக இருக்கிறோம், யாரும் பார்க்க மாட்டார்கள் என்று பாவம் செய்துவிடக் கூடாது. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். இதை நீ மறந்துவிடக் கூடாது!
“மகனே! தொழுகையைப் பேணி தொழுதுவா! நன்மையை ஏவு, தீமையைத் தடு! இதனால் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்துக் கொள்! இதில் நீ பின்வாங்காதே!
“நீ பூமியில் ஆணவத்துடன் நடக்காதே! மக்களில் பலவீனமானவர்களைக் கண்டால் அவர்களை விட்டும் உன் முகத்தை திருப்பி விடாதே! அல்லாஹ் பெருமைப் பிடித்தவர்களை விரும்புவதில்லை. மக்களுடன் சராசரியாக சாமானியமாகப் பழக வேண்டும்!
“நீ நடந்தால் அந்த நடை நடுநிலையாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது சப்தத்தை உயர்த்திப் பேச வேண்டாம். கழுதை கத்துவதைப் போல் கத்த வேண்டாம். கழுதையின் சப்தம் யாருக்கும் பிடிக்காதல்லவா?
இவ்வாறு லுக்மான் தனது மகனுக்கு அறிவுரைக் கூறுவார். லுக்மான் கூறிய அறிவுரை அவருடைய மகனுக்கு மட்டும் உரியது அல்ல. அது எமக்கும் உரியதுதான். எனவே லுக்மான் கூறிய உபதேசத்தை நாமும் எமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.
அப்போதுதான் நாம் உலகில் அடுத்தவர்களால் நேசிக்கப்படுவோம். அல்லாஹ்வும் எம்மை நேசிப்பான். மறுமையில் நாம் சுவனத்தையும் பெற முடியும்.
ஞானி லுக்மான் தொடர்பான இந்தச் செய்தி அத்தியாயம் லுக்மான் 31:12-19 வரையுள்ள வசனங்களில் இடம்பெற்றுள்ளது.