நட்பு, சினேகிதம்,தோழமை போன்ற வார்த்தைகளில் “தோழமை” என்ற வார்த்தைக்குத்தான் பொருளும் அந்தஸ்தும் அதிகமாகும்.
மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய தாய், தந்தை, கணவன், மனைவி, மக்கள், சகோதரன், சகோதரி என்ற உறவுகளைப் போன்று, தோழமை என்பதும் முக்கியமான ஒரு உறவாகும்.
ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் அண்டை வீடுகளுக்கு மத்தியில் உள்ள ஒத்த வயதுடைய சிறுமிகளை எல்லாம் அழைத்து இவளுக்கு – அவள் தோழி என்றும் அவளுக்கு – இவள் தோழி என்றும் ஒவ்வொரு சிறுமிகளுக்கு மத்தியில் தோழமையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் (கடலை மிட்டாய், கடலை, மேரி பிஸ்கட், பொறி உருண்டை போன்ற) இனிப்புகளும் பரிமாறப்பட்டு அப்போது ஏற்படுத்திய தோழமையின் வெளிப்பாடுதான் இன்றுவரை (தமிழ் நாட்டின்) கடற்கரையை ஒட்டியுள்ள முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் அதை “தோழி வீடு” என்று குறிப்பிடப்படும். நாம் தொலைத்து விட்ட நம் முன்னோர்களின் நற்பண்புகளில் இதுவும் ஒன்றாகும். (தோழமையின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதற்காக இது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது).
இன்றைய இளைஞர்களில் இருவரை அழைத்து நீங்கள் இருவரும் தோழமை கொண்டது எதற்காக என்று கேட்டால் சரியான காரணத்தை அவர்களால் சொல்ல முடியாது. தோழமைக்கான காரணமும், அதன் இலக்கணமும் தெரியாமலே தோழமை கொள்ளும்போது இடையில் அவர்களுக்குள் ஏதாவது சிறிய பிணக்கு ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய சர்ச்சையாகி மீண்டும் இணைய முடியாத அளவுக்கு இருவருக்குள் பிரிவினை ஏற்படுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.,
ஒருவன் தனது தோழமையை அழகிய முறையில் அமைத்துக்கொள்வதை இஸ்லாம் நன்மையான காரியம் என்று குறிப்பிடுகின்றது. வயது வரம்புக்கு அப்பாற்பட்டுத் தொடர்வதும் இந்த தோழமைதான். இறைவன் அனுப்பிய எல்லா தூதர்களுக்கும் அவர்களது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்ததும் இந்த தோழமைதான்.
நற்பண்புகள் நிறைந்த ஒரு நல்ல தோழமையைத் தேர்வு செய்வதற்கு முன்னால் முதலில் நாம் நற்பண்புகள் நிறைந்தவர்களாக மாறவேண்டும். நம்மிடம் நற்பண்புகள் இல்லாமல் நம்மிடம் தோழமைகொண்ட எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும் என விரும்புவதில் நியாயமில்லை! இனம் இனத்தைச் சாரும் என்ற அடிப்படையில் நற்குணம் நற்குணத்தோடுதான் தோழமை கொள்ளும். தீயகுணம் அது தீய குணத்தோடுதான் தோழமை கொள்ளும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒன்றுபட்டது பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டது பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. (ஆயிஷா (ரலி) நூல்: ஸஹீஹுல் புகாரி (3336).
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதுபோல பழகும் நண்பர்களைப் பொறுத்தே ஒருவனின் நிலை மாறுகின்றது. எனவே நம்முடைய இரு உலக வாழ்க்கையும் சிறப்பாக அமைவதற்கு நல்ல தோழமையைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். இதை அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் – கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.
அபூமூஸா (ரலி) நூல்: ஸஹீஹுல் புகாரி (2101)
தீயவர்களோடு நட்புக்கொள்வது நமது மறுமை வாழ்வையும் சேர்த்து எரித்துவிடும் என்பதாக அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு சொல்லிக்காட்டுகின்றார்கள்.
குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். “நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் எனக் கூறுவார்கள். (74 : 41-45)
عَنِ الْمُجْرِمِيْنَۙ ? مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ ? قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ ? وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ ? وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ
நல்ல தோழமையின் முக்கியப்பணி தனது தோழமையில் உள்ளவர்கள் தவறு செய்ய முற்பட்டால், அவர்களை அந்த தவற்றிலிருந்து தடுத்து அதில் வீழ்ந்து விடாமல் அவர்களை பாதுகாப்பது முதலாவது பணியாகும்.
அடுத்து, பொறுப்புள்ள தோழமையின் முக்கிய பணி தனது தோழமையில் உள்ளவர்களுக்கு குடும்ப விஷயமாகட்டும் மற்றும் தொழில் விஷயமாகட்டும் எல்லா வகையிலும் சிறந்த ஆலோசகராக இருப்பது.
நட்புகளுக்கு மத்தியில் கொடுக்கல் வாங்கலில் உதவி செய்து கொள்வதை விட, ஒருவனுக்கு எல்லா வகையிலும் நல்ல ஆலோசகராக இருப்பது மிகவும் முக்கியமானதாகும். நல்ல ஆலோசனையின் பிரகாரம் ஒருவன் செயல்படும்போது பலவிதமான சிக்கல்களிலிருந்து அவர் தன்னை காத்துக்கொள்வார்.
அடுத்து துன்பமான கஷ்டமான நேரங்களில், தோழமைகளுக்குள் நல்ல ஆறுதல் கூறக்கூடியவராக இருக்கவேண்டும். கஷ்டங்களிலும் துன்பங்களிலும் துவண்டு விடாமல் இறைநம்பிக்கையோடும், தவக்கலோடும் செயலாற்றும் அளவுக்கு நடப்புகளுக்கு மத்தியில் ஆறுதல் பரிமாறப்படவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் தோழமைகளுக்கு மத்தியில் நல்ல ஆலோசனை வழங்கக் கூடியவர்களாகவும், பிற தோழமைகளிடமிருந்து ஆலோசனை பெறக் கூடியவர்களாகவும் இருந்ததோடு, சிறந்த முறையில் ஆறுதல் அளிப்பவர்களாகவும் இருந்தார்கள்.
தொடரும்…, (இன்ஷாஅல்லாஹ்)
oOo
✍️ S.A.Sulthan
Muthupettai
09/12/1442H