Featured Posts

நாத்திகர்களிடத்தில் ஸியாரத்தின் தாத்பரியம்.

தத்துவ ஞானிகளிலுள்ள சில தஹ்ரிய்யாக்கள் (நாத்திகர்கள்) ஸியாரத்தின் போது புதுமாதிரியான ஒரு ஷிர்க்கையும் மக்களுக்கு விளக்கி காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய சித்தாந்தம் வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்தான் என்பதெல்லாம் உவமிப்புகள்தாம் உன்மையல்ல என்பதாகும்.

சின்னஞ்சிறு தூசியிலிருந்து வானவெளியில் கோளப் பாதையில் சுழலும் பிரமாண்டமான கிரகங்கள் வரை அவற்றின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாக அல்லாஹ் ஆழ்ந்து அறிகிறான். தன்னுடைய அனைத்துப் படைப்பினங்களின் குரல்களையும் நுணுக்கமாக கேட்கும் பேராற்றலும் அவனுக்கு உண்டு. அவற்றின் தேட்டங்கள் அனைத்தையும் கேட்டு விளங்கி விரும்பியவர்களுக்கு விடை கொடுப்பான் என்பன போன்ற தெளிவான உண்மைகளை நாத்திகர்கள் புறக்கணித்துக் கூறுகின்றனர். நபிமார்கள், வலிமார்கள், உத்தமர்கள் இவர்கள் வாழ்ந்திருக்கையில் அல்லாஹ்விடம் கேட்கின்ற சிபாரிசின் கருத்தையும் மூமின்கள் விளங்கியிருப்பதற்கு முரணாக நாத்திகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மூமின்களிடம் ஷபாஅத் என்றால் அல்லாஹ்விடத்தில் தேவைகளை வேண்டிப் பிரார்த்திப்பதல்லவா? முஸ்லிம் தன் சகோதரனின் வேண்டுகோளை முன்வைத்து அல்லாஹ்விடம் மன்றாடினால் அவன் விரும்பியவர்களின் பிரார்த்தனைகளை ஏற்கிறான். சிபாரிசைக் கேட்டவன் பயன் பெறுகிறான். குழந்தைச் செல்வம் வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்திப்பவனுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. மழை பெய்யச் செய்ய வேண்டுமென்று தேவைப்பட்டால் மழை பெய்கிறது. இதர தேவைகள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்பட்டால் கிடைத்து விடுகின்றன. ஆக வாழ்ந்திருக்கும் ஸாலிஹான பெரிய மக்களின் துஆக்களை ஏற்று அல்லாஹ் தன் அடியார்களின் தேட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கிறான். இது மூமின்கள் அறிந்துள்ள ஷபாஅத் ஆகும்.

ஆனால் நாத்திகர்கள் ஷபாஅத்துக்குரிய இக்கருத்தைத் திருப்பி விட்டார்கள். மழை பெய்வதானாலும் சரி, இடி-மின்னல் போன்றவை ஏற்பட்டாலும் சரி, மனிதகுலத்தின் பிறப்பு, இறப்பு, வாழ்வு, தாழ்வு, நோய், நொடி, இன்பம், துன்பம் போன்ற எதுவானாலும் சரியே. ஆகாயங்கள், பூமி ஆகியவற்றில் நடக்கும் அத்தனை சம்பவங்களும் அல்லாஹ்வின் வல்லமையால் நடக்கக் கூடியவை அல்ல. நன்மக்களின் பிரார்த்தனைகளையும் இறைவன் கேட்க மாட்டான். அதற்கு அவன் சக்தியுள்ளவனும் அல்ல. மாறாக இவ்வனைத்து சம்பவங்களும் கிரகங்களின் இயற்கை விதிகளினால் நடப்பது போல காலஞ்சென்ற மனிதனின் ஆத்மாவுக்குள் மறைந்திருக்கும் வலுவானதொரு சக்தியினாலும் இவையெல்லாம் நடக்கின்றன. நல்ல ஒரு மனிதன் காலஞ்சென்ற பின்பு அவருடைய உற்ற சினேகிதர் தம் சமாதியைச் சந்திக்க வரும்போது கப்றிலிருப்பவருக்கும், அவரை சந்திக்கவரும் நண்பருக்குமிடையில் அல்லாஹ்வினால் அறிய முடியாத ஒரு வகையான ஆத்மீகத் தொடர்பு உண்டாகிறதாம்.இத்தொடர்பினால் ஸியாரத் செய்தவருக்குத் தம் தேவைகளெல்லாம் கிடைத்து விடுகிறதாம். இப்படிப் பச்சையாக இறைவனைப் புறக்கணிக்கும் சித்தாந்தங்களை மேலான தம் கருத்துக்களென்று கூறியிருக்கிறார்கள். இஸ்லாமியர்களான சில மௌட்டீகர்களும் இந்தக் கருத்தை ஆதரிக்காமலில்லை.

வெயிலில் கண்ணாடியைக் காட்டினால் சூரியனின் சுடர்கள் கண்ணாடியை நோக்கிப் பாய்கின்றன. கண்ணாடியோ தான் பெற்றதை திருப்பியடிக்கிறது. இக்கண்ணாடியிலிருந்து பிரதி பலிக்கின்ற சுடர்களை மற்றொரு கண்ணாடியில் செலுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அந்தக் கண்ணாடியும் சுடர் விடத் தயாராகும். இவ்விரண்டாவது கண்ணாடியின் சுடரினால் தூரத்திலிருக்கும் சுவர் வெளிச்சத்தைப் பெறுவது போல ஸியாரத் செய்கிறவன் கப்றிலிருக்கின்ற மய்யித்திடமிருந்து தமது வாழ்க்கையின் தேவைகளை பெறுகிறாராம். (மய்யித்துகள் அக்லுல் பஃஆலிடமிருந்து இதைப் பெறுகிறதாம்). நாத்திகர்களின் மேற்கூறிய விதண்டாவாதங்களுக்கும், ஒழுக்கக் கேடான தத்துவங்களுக்கும் இதுவே சான்றாகும்.

பிம்பங்கள், சாமிகள் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் ஷைத்தான், ஜின்களின் நடமாட்டம் அதிகமாக உண்டு. அங்கே ஷைத்தான்களின் சம்பாஷணைகளைக் கேட்க முடியும். சமாதிகளிலிருந்து சப்தங்களைச் சிலர் கேட்டிருக்கின்றனர். யார் யாரோ தம் முன் வந்து உரையாடுவது போன்ற குரல்களை உணர்கின்றனர். ஏதோ சில பெரிய மனிதர்கள் உதயமாகி மறைவது போன்ற காட்சிகள், கப்றைப் பிளந்து மய்யித்து வெளியே உதயமாகி ஸியாரத்துச் செய்தவனைக் கட்டியணைக்கும் சில காட்சிகள், அற்புதமான பற்பல நடத்தைகள் இம்மாதிரி மனிதனை வழிகெடுக்கும் எல்லாத் தீயசெய்கைகளையும் கப்றுகளில் காண முடிகின்றன. கப்றுகளை சிலைகளாகத் திருப்பி, வணக்கஸ்தலங்களாக மாற்றி ஷிர்க்கின் வாசல்களைத் திறந்து வைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு ஷைத்தான்களும், ஜின்களும் இவற்றைத் துணிவாக செய்து வருகிறார்கள். வையகத்தில் கப்றுகளை பிம்பங்களாகத் திருப்பியதும், அதிலிருந்து இறைவனுக்கு இணைவைத்தல் உண்டானதும் ஷைத்தானின் காரணம் தானென்பதை வரலாறும் கூறுகிறது. இதை விளங்காத மனித சமூகம் சமாதியில் புதைக்கப் பட்டிருக்கும் கப்றாளியே இவற்றைப் புரிகிறார் என நம்பி ஏமாற்றமடைந்து தன் வலுவான இறை நம்பிக்கையைப் பறிகொடுத்து விடுகின்றது. ஷைத்தான்கள் மனித உருவில் ஆள்மாறாட்டம் பண்ணுவதை மக்கள் தெரியாமலிருக்கிறார்கள். இதனால் கப்றருகில் கண்ட கூத்தாட்டங்களைப் பற்றி அவை நபியின் அல்லது மலக்கின் செயல்களென்று மதித்து தமது தீர்க்கமான ஈமானுக்கு இழுக்கு ஏற்படுத்திக் கொள்வதுடன் ஷிர்க்கிலும் நுழைந்து விடுகின்றனர். இதைப்பற்றிய சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கூறினால் புத்தகம் நீண்டு விடும் என்பதால் இங்கே முடித்துக் கொள்கிறேன்.

உண்மையான இறைவிசுவாசியின் நம்பிக்கை இப்படியொன்றுமிருக்காது. இதைப்பற்றி ஷைத்தானின் விளையாட்டுகள் என்று நம்பி தீர்க்கமான முடிவுக்கு வந்து விடுகிறான். இப்படிப்பட்ட ஷைத்தானின் நடிப்புக்களை சமாதியில் காணும்போது உண்மை விசுவாசி மெய்யாகவே தூய உள்ளத்துடன் ஆயத்துல் குர்ஸியை ஓதி விட்டு ஷைத்தானின் மாயாஜாலத்தில் சிக்காமல் தன்னைக் காத்துக் கொள்வான். எல்லா ஷைத்தான்களும் பூமியில் அப்படியே அடங்கி ஒடுங்கி விடுகின்றன. இறைவனின் திருமறை வசனங்களை குறிப்பாக ஆயத்துல் குர்ஸியை ஓதுவதினால் ஷைத்தான்களையும், காஃபிரான ஜின்களையும் விரட்டியடிக்க முடியுமல்லவா? உண்மையில் ஆள்மாறாட்டம் செய்கிறவர் மலக்காகவோ, மூமினான ஜின்னாகவோ இருப்பார்களென்றால், திருமறை வசனங்கள் அவர்களுக்கு எந்தத் துன்பத்தையும் அளிக்காது. இது விஷயமாக ஹதீஸில் பல சம்பவங்கள் காணப்படுகின்றன.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ஒருமுறை ஜின்னொன்று அபூஹுரைராவை நோக்கி ‘நீர் படுக்கைக்குச் சென்றால் ஆயத்துக் குர்ஸியை ஓதும். அப்படி நீர் செய்தால் அல்லாஹ்வின் பாதுகாவலிலே இரவு முழுவதும் சுகமாக இருக்க முடியும். எந்த ஷைத்தானும் விடியற்காலை வரையில் உம்மை நெருங்க முடியாது’ என்று கூறியதாம். இதை நபியிடம் வந்து அபூஹுரைரா அறிவித்த போது ‘அந்த ஜின்னின் கூற்று உண்மை. அவனோ பொய்யன்’ என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கப்றில் ஏதேனும் பிசாசுகளின் தொல்லைகள் காணப்பட்டால் அதைவிட்டும் உண்மையான முஸ்லிம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்வான். ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட பாதுகாவலைத் தேட வேண்டும்.

பற்பல நபிமார்களின் வரலாற்றைப் படித்தால் அவர்களின் வாழ்க்கையில் பல தடவை ஷைத்தான்கள் குறுக்கிட்டு அவர்களுக்குத் துன்பமும், தீவினையும் கொடுக்க முனைந்திருக்கின்றன. நெறிகெட்ட செய்கைகளின்பால் அவர்களைத் திருப்ப முற்பட்டிருக்கின்றன. வணக்கவழிபாட்டில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்ற வேளையிலும் அவர்களுக்குத் தீங்கு செய்து தொல்லையும், தொந்தரவும் கொடுக்க ஷைத்தான் எத்தனித்தான். இதைச் சரித்திரத்திலும் காணலாம். ஒருநாள் நபியவர்களின் பக்கம் ஒரு ஜின் நெருப்புக் கொள்ளியைத் தூக்கி வந்து அவர்கள் மீது வீசி நபியை வேதனைப் படுத்த எத்தனித்த வேளையில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் (அபுத்தய்யாஹ் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் வருகின்ற) பிரபலமான பாதுகாப்புச் சொற்களை சொல்லும்படி நபியவர்களுக்குக் கூறிவிட்டுச் சென்றார்கள். அபுத்தய்யாஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: அப்துர்-ரஹ்மான் இப்னு கன்பஷ் என்பவர்கள் நபியவர்களின் தோழமையைப் பெற்ற ஸஹாபிகளில் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவ்வயோதிகரிடம் ஒரு மனிதர் வினவினார்: ‘பெருமானார் (ஸல்) அவர்களை ஷைத்தான் சூழ்ந்து கொண்டபோது அவர்கள் எதைக் கையாண்டார்கள்?. இக்கேள்விக்கு விடை கொடுத்த அப்துர்-ரஹ்மான் அவர்கள் கீழ்வருமாறு விளக்கிக் காட்டினார்கள். பர்வதங்களிலிருந்தும், மலையிடுக்குகளிலிருந்தும் ஒருகும்பல் ஷைத்தான்கள் இறங்கி வந்து பெருமானார் (ஸல்) அவர்களை முற்றுகையிட்டனர். அவற்றுள் ஒரு ஷைத்தானிடம் தீப்பந்தமொன்று இருந்தது. அதை ஏந்தி வந்து நபியின் பக்கம் சென்று அவர்களைச் சுட்டுக் கரிக்க முனைந்தான். இதைக்கண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் திடுக்கிட்டார்கள். அவ்வேளையிலே ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து ‘நபியே! சொல்லுங்கள்’ என்று குரல் கொடுத்தார்கள். ‘நான் எதைச் சொல்ல வேண்டும்’ என்று நபிகளார் கேட்க இந்த துஆக்களைச் சொல்லும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்:

‘பூரணமான இறை வசனங்களின் பொருட்டால் நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்’ இவ்வசனங்களை நல்லார், பொல்லார் எவர் உரைத்தாலும் அல்லாஹ் படைத்த அனைத்து தீங்குகளிலிருந்தும் தப்பிக்க முடியும். வானங்களிலிருந்து இறங்குகின்ற தீமைகள், வானங்களை நோக்கிச் செல்லுகின்ற தீமைகள், பூமியை நோக்கி வரும் தீமைகள், இரவிலும்-பகலிலும் உண்டாகும் குழப்பங்கள், தொல்லைகள், தொந்தரவுகள், இன்னும் வீடு-குடிகளில் பாய்ந்து வருகிற தீய செய்கைகள், கொடுமைகள், அக்கிரமங்கள் அனைத்தையும் விட்டுத் தப்பிக்க முடியும். காருண்யனாகிய அல்லாஹ்வே! என்னை நீ காத்தருள்வாயாக!.

இந்த வசனங்களை நபிகள் கூறியதும் ஷைத்தானின் கரத்திலிருந்த தீ அணைந்து விட்டதுடன் அல்லாஹ் அந்த ஷைத்தான்களைத் தோற்கடிக்கவும் செய்தான். இமாம் புகாரி, முஸ்லிம் இவர்களின் ஹதீஸ் தொகுப்பிலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக இன்னுமொரு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘பராக்கிரமசாலியான ஒரு ஜின் திடீரென வந்து எனக்குக் கொடுமைத் தரவும், என் தொழுகையை முறித்து விடவும் எத்தனித்தது. உடனே அல்லாஹ் எனக்கு நல்ல தீர்க்கமான சக்தியைத் தந்தான். அதனால் அந்த ஜின்களை நான் பயங்கரமாக முறியடித்தேன். அதைப்பிடித்து பொழுது விடியும் வரையிலும் இந்தப் பள்ளித் தூணில் கட்டி வைத்து உங்களுக்கு காட்டித் தரலாமென்று நினைத்தேன். ஆனால் சகோதரர் நபி சுலைமான் (அலை) அவர்கள் (திருமறை குறிப்பிடுகிறது) கூறினார்கள்: “என் இறைவனே என்னுடைய குற்றங்களை மன்னித்துவிடு.எனக்குப் பின் எவருமே அடைய முடியாத ஒரு ஆட்சியை எனக்கு நீ தந்தருள். நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி…” (38:35). அந்த ஜின் தன் சூழ்ச்சியில் வெற்றி பெறாமல் நஷ்டவாளியாகத் திரும்பி சென்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றோர் ஹதீஸில் ‘நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது ஒரு ஷைத்தான் அவர்களிடம் வந்தது. அதை நபிகள் (ஸல்) அவர்கள் பிடித்து கழுத்தை நெறித்துக் கொல்ல முற்பட்டார்கள். பிறகு கூறினார்கள். ‘இந்த ஷைத்தானின் நாவிலுள்ள ஈரம் இதோ என் கையில் படிந்திருக்கிறது. ஆனால் சுலைமான் நபி அவர்களின் பிரார்த்தனை மட்டும் இல்லாதிருப்பின் அந்த ஷைத்தானைப் பிடித்துக் கட்டி மக்களின் பார்வைக்கு விட்டிருப்பேன்’. (நஸாயி).

அபூஸயீத் அல்-குத்ரீ அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபியவர்கள் ஸுப்ஹு தொழுது கொண்டிருந்தார்கள். அபூ ஸயீத் அல்-குத்ரீயும் நபி (ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுகிறார்கள். இந்நேரம் நபியவர்களுக்குத் திருமறை வசனங்கள் ஓதத் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதைப்பின்னால் நின்று தொழுது கொண்டிருந்த ஸஹாபிகள் கவனித்தார்கள். தொழுகை முடிந்தபின் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘இப்லீஸுடன் நீங்கள் என்னைப் பார்த்திருக்க வேண்டியிருந்தது. தொழுகையில் அவன் என்னை அணுகினான். என் கரத்தை நீட்டி அவனைக் கையடக்கினேன். கழுத்தை நெறித்தேன். அவன் நாவிலிருந்து வெளிப்பட்ட உமிழ்நீரின் ஈரம் இதோ என் பெருவிரலிலும், சுண்டுவிரலிலும் படிந்திருப்பதைப் பாருங்கள். சகோதரர் சுலைமான் நபியின் பிரார்த்தனை மட்டும் இல்லாதிருந்தால் பள்ளிவாசல் தூணில் அவன் கட்டப்பட்டு மதினா நகர சிறுவர்களால் எள்ளி நகையாடப்படும் ஒரு விளையாட்டுப் பொருளாக அவனை ஆக்கி விடலாமாக இருந்தது. உங்களில் யாராவது தொழும் வேளையில் தனக்கும், கிப்லாவுக்கும் இடையில் யாரும் குறுக்கிடக் கூடாது என்று எண்ணினால் அதற்கொப்ப (ஒருதிரையை)ச் செய்யட்டும்’. (அபூதாவூத், அஹ்மத்)

இமாம் முஸ்லிம் அவர்கள் அபுத்தர்தா அவர்கள் மூலமாக குறிக்கும் ஒரு ஹதீஸில் கீழ்வருமாறு உள்ளது: ‘நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்கு எழுந்து நின்றார்கள். பிறகு ‘அவூது பில்லாஹி மின்க’ (உன்னை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன்) என்று சொல்வதை நாங்கள் கேட்டோம். அதன் பின் ‘அல் அனுக பி லஃனதில்லாஹ்’ (அல்லாஹ்வின் சாபம் உனக்கு உண்டாகட்டும்) என்று மும்முறை மொழிந்து விட்டு, ஏதோ ஒரு பொருளை எடுக்கக் கையை நீட்டுவது போல தம் திருக்கரத்தை நீட்டினார்கள். தொழுகை முடிந்ததும் நாங்கள் எழுந்து சென்று ‘நாயகமே! ஏதேதோ இதற்கு முன் நீங்கள் தொழுகையில் சொல்லாத வார்த்தைகளை இன்று தொழுகையில் நாங்கள் கேட்டோம். கையையும் நீட்டினீர்களே ஏன்? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் பதிலளிக்கையில் ‘அல்லாஹ்வின் கொடிய விரோதி இப்லீஸ் ஒரு தீப்பிழம்பைத் தூக்கி வந்து, என் முகத்திலிட எத்தனித்தான். உடனே ‘அவூது பில்லாஹி மின்க’ என்று நான் மும்முறை மொழிந்தேன்.அல்லாஹ்வின் முழு சாபமும்,கோபமும் உண்டாகட்டும் என்றும் கூறினேன். இதைக்கேட்ட இப்லீஸ் சற்று பின்வாங்கினான். இருந்தாலும் அவனைப் பிடித்து வைத்துக் கட்டிவிட நினைத்தேன். நம் சகோதரர் நபி சுலைமான் துஆச் செய்யாமல் மட்டும் விட்டிருந்தால், அவனைப் பிடித்து விலங்கிட்டு மதினா நகரின் சிறுவர்களைக் கொண்டு விளையாடச் செய்திருப்பேன்’ என்று கூறி முடித்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *