Featured Posts

ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.

இங்கே முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபிமார்களையே ஷைத்தான் துன்புறுத்தவும், அவர்களுக்குத் தீங்குகளையும், அக்கிரமங்களையும் விளைவிக்கவும், அவர்களுடைய வணக்கவழிபாடுகளைக் கெடுத்து நாசம் பண்ணிடவும் தயாராவானானால் நபியல்லாத மற்றவர்களின் கதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். (சாதாரணமான முஸ்லிம் மனிதனை ஷைத்தான் எப்படி ஆட்கொண்டு அடிமைப்படுத்தி விடுகிறான் என்பதைப் பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்). நபியவர்கள் மனு-ஜின் இரு இனத்திலுள்ள அனைத்து ஷைத்தான்களையும் அடித்து அமர்த்துவதற்குரிய ஆற்றலை பெற்றிருக்கிறார்கள். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் அறிவையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறான். பற்பல வணக்கவழிபாடுகள், திக்ருகள், (இறை தியானங்கள்) பிரார்த்தனைகள், இறைவனின் பாதையில் போராடுதல் (ஜிஹாதுகள்) போன்ற எத்தனை எத்தனையோ வணக்கங்கள், வழிபாடுகளின் பேருதவியால் ஷைத்தனைப் பிடித்தடக்கி, ஒடுக்கும் திறமை நபிமார்களுக்குண்டு.

ஆனால் சதாரணமான ஒரு முஸ்லிம் இதைப் போன்ற இக்கட்டான வேளையில் என்ன செய்ய முடியும்? ஆம்! யார் நபிமார்களின் சன்மார்க்கத்தைப் பின்பற்றினார்களோ, அவர்கள் ஷைத்தானின் வலையில் சிக்குண்டு தத்தளிக்காமல் நபிமார்களைக் காத்தது போல அல்லாஹ் இவர்களையும் பாதுகாக்கிறான். எவன் நெறிகெட்டு இஸ்லாம் அனுமதிக்காத நூதன அனுஷ்டானங்களை மார்க்கத்தின் பெயரால் ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்குரிய கடமைகளை மறந்து, ஏகத்துவத்திற்குரிய மாறுபட்ட செய்கைகளைச் செய்து, நபிமார்கள், வலிமார்கள், சாந்த சீலர்கள், உத்தமர்கள் இவர்களின் சமாதிகளில் சென்று முட்குத்தி, சிரம் சாய்த்து இன்னும் இவைப் போன்ற செயல்களைச் செய்கிறானோ, அவனை வைத்து திட்டமாக ஷைத்தான் விளையாடுகிறான். இவனை ஷைத்தான் எள்ளி நகையாடுகிறான். ஏகத்துவத்திலிருந்து நிச்சயமாக இவன் மாறி விடுவான். இதனால் இஸ்லாத்திலிருந்து வெளியேறியும் விடுகிறான்.

திருமறை கூறுகிறது: “யார் விசுவாசங்கொண்டு தங்கள் இறைவனை முற்றிலும் நம்பி இருக்கிறார்களோ. அவர்களிடத்தில் நிச்சயமாக இந்த ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைப்பவர்களிடமும், அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும்” (16:99-100). மெய்யான என் அடியார்களிடத்தில் திட்டமாக உனக்கு யாதொரு செல்வாக்குமில்லை. வழிகேட்டில் உன்னை பின்பற்றியவர்களைத் தவிர”. (15:42).

ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்து விடுதலைப் பெற பற்பல வழிகளை முஸ்லிம்கள் தொன்று தொட்டே மேற்கொண்டு வந்தனர். இக்கட்டான சில சந்தர்ப்பங்களில் ஷைத்தான் ஆக்கிரமிக்க முற்பட்டால் அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்தித்து அவன் சூழ்ச்சியிலிருந்து விடுபட்டவர்களும் முஸ்லிம்களில் உண்டு. நெஞ்சில் ஊடுருவிப் பாய்கின்ற திருமறை வசனங்களில் சிலவற்றைத் தூய தெளிவான உள்ளத்துடன் ஓதினால் எல்லா ஷைத்தான்களிடமிருந்தும் வெற்றி பெறலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *