மனிதர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க நினைத்தால் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட துஆக்களால் அல்லது திருமறையிலிருந்தும் பெருமானாரிடமிருந்தும் அறியப்பட்ட துஆக்களைக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும். இத்தகைய துஆக்களை எடுத்துரைத்து பிரார்த்திப்பதில் சந்தேகமின்றி நிறையப் பலாபலன்களை காண முடிகிறது. இந்த துஆக்களினால் மனிதன் நேரான வழியைப் பெறுகிறான். அன்பியாக்கள், ஸித்தீகீன்கள், ஷுஹாதாக்கள், ஸாலிஹீன்கள் இவர்கள் வழியும் இதுதான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில பொதுமக்கள் கூறுகின்ற ‘உங்களுக்கு ஏதேனும் தேவைகள் ஏற்பட்டால் எனது மதிப்பை எடுத்துரைத்து அதன் பொருட்டால் பிரார்த்தியுங்கள்’ என்று சொல்லப்படும் ஹதீஸ் பொய்யானதாகும். இந்த ஹதீஸ் பிரபலமான அறிஞர்களால் அறிவிக்கப்படவில்லை. ஹதீஸ் நூற்களிலும் இதைக் காண முடியாது.
ஒவ்வொரு துஆவிலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டுமென்று மக்கள் பணிக்கப்படுகிறார்கள். மழைக்காக பிரார்த்தித்தாலும் சரி மற்ற எந்த தேவைகளுக்காகப் பிரார்த்தித்தாலும் சரியே. இப்பிரார்த்தனைகளிலெல்லாம் நபியவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டுமென்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.இந்நிலையிலும் நபியவர்களைக் கொண்டு வஸீலா தேட வேண்டுமென்பதை இந்த அறிஞர்கள் கூறவில்லை.
பொதுவாக அல்லாஹ் அல்லாதவற்றைக் கூப்பிட்டு பிரார்த்திப்பதையும், அவற்றைக் கொண்டு உதவி தேடுவதைப் பற்றியும் இவர்கள் குறிப்பிடவில்லை. ஏனெனில் அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பது குஃப்ராகும். மேலும் ஸலஃபுஸ்ஸாலிஹீன்களைப் பற்றி அவர்கள் நபிமார்களையும், காலஞ் சென்றவர்களையும், மறைந்திருப்பவர்களையும் அழைத்துப் பிரார்த்தித்தார்கள் என்று அறிவிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் அறிஞர்கள் அல்லாத பிற்காலத்தில் தோன்றிய சிலர்தாம் கூறியிருக்கிறார்கள். ஆனால் சில முன்னோர்களைப் பற்றி அவர்கள் நபியின் ஹக்கைக் கொண்டும், மதிப்பைக் கொண்டும் பிரார்த்தித்ததாகச் சொல்லப்படும் பிரபலமான சொல்லாகவோ, நபிகளிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஸுன்னத்தாகவோ இருக்கவில்லை. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களைப் பற்றியும், அபூயூஸுப்பைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் அறிவிக்கப்பட்டது போல இவற்றையெல்லாம் விலக்கி நிறுத்துவதே நபி (ஸல்) அவர்களின் ஸுன்னத்தாகும்.
பகீஹ் அபூ முஹம்மத் பின் அப்துஸ்ஸலாம் என்பவர்களின் பத்வாவில் கீழ்வருமாறு நான் பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் அல்லாஹ்விடத்தில் அவன் சிருஷ்டிகளில் யாரைக் கொண்டும் வஸீலா தேடக் கூடாது என்று குறிப்பிடுகிறார்கள். கண்பார்வை இழந்தவரைப் பற்றிய ஹதீஸ் ஸஹீஹானது என்றால் நபியவர்களைக் கொண்டு மட்டும் வஸீலா தேடப்படுமாம். ஆனால் இந்த ஹதீஸோ ஸஹீஹ் என்று அறிவுக்கப்படவும் இல்லை. இந்த ஹதீஸைப் பொறுத்தவரையில் நபிகளின் துஆவைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதைத்தான் காட்டுகிறது என்பதை முன்னர் கூறினோம். அன்றி இது சிருஷ்டிகளைக் கொண்டு அல்லாஹ்வின் மீது ஆணையிடலாமென்றோ, நபியைக் கொண்டு கேட்கலாமென்றோ தெரிவிக்கும் ஹதீஸல்ல. துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதற்காக நபியைக் கொண்டு வஸீலா தேடக் கூடியவர்கள் ஷரீஅத்தின் விதிகளை மீறி விட்டார்கள். ஷரீஅத்தோ அவர்களுக்குப் பயன்தரவல்ல செயல்களைத்தான் ஏவுகிறது.
துஆ அங்கீகரிக்கப்படுவதற்கு மிகப் பெரிய காரணமாக நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள ஸலவாத்தை எடுத்துக் கொள்ளலாம். நபிகள் மீது ஸலவாத் கூற அல்லாஹ் ஏவுகிறான். திருமறையும், ஹதீஸும், ஸஹாபாக்களுடையவும், இமாம்களுடையவும் தீர்ப்புகள் ஆகிய எல்லாம் (இஜ்மாஉ) துஆவின் போது நபிகள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்பதை விளக்கமாகக் குறிப்பிடுகின்றன.
இறைவன் கூறுகிறான்: “நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி, ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்” (33:56)
நபி (ஸல்) அவர்கள் ‘என்மீது ஒருதடவை ஒருவர் ஸலவாத்துக் கூறினால் அல்லாஹ் அவர்மீது பத்து தடவைக் கூறுகிறான்’ என்று கூறினார்கள். (ஹதீஸ்)
புலாலாத் பின் உபைத் என்ற ஸஹாபி கூருகிறார்கள்: ‘ஒரு மனிதர் தொழுகையின் போது துஆவில் அல்லாஹ்வைத் துதிக்காமலும், நபிகள் மீது ஸலவாத்துக் கூறாமலும் பிரார்த்திப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரைப்பற்றி இவர் அவசரப்பட்டு விட்டார் என்றார்கள். பின்னர் அம்மனிதரை அழைத்து அவரிடமொ அல்லது வேறொருவரிடமோ ‘நீங்கள் பிரார்த்தித்தால் இரட்சகனைப் புகழ்ந்து, நபியின் மீது ஸலவாத்துக் கூறிப் பின்னர் நீர் விரும்பியவற்றைக் கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறினார்கள்’. (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ)
ஹதீஸில் வருகிறது: ஒரு மனிதர் வந்து ‘யாரஸூலல்லாஹ்! பாங்கு சொல்கிறவர்கள் நன்மைகளில் எங்களைவிட மிகைத்து விடுகிறார்களே என்று முறையிட்டதற்கு அவர் பாங்கில் கூறுவதைப் போல நீரும் கூறும். பாங்கு முடிந்து விட்டால் பிரார்த்தனைச் செய்யும். கொடுக்கப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயீ* )
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘பாங்கொலி கேட்டால் கீழ்வரும் துஆவை எவர் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களுடைய துஆவை அல்லாஹ் அங்கீகரிப்பான். நிரப்பமான இந்த அழைப்புக்குரிய நாயனே! பயன்தரவல்ல தொழுகையின் இரட்சகனே! நபிகள் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுவாயாக! அவர்களை நீ என்றும் கோபமே இல்லாத பொருத்தமாக நீ அவர்களுடன் பொருந்திக் கொள்வாயாக!’
இன்னொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள்: ‘பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் கேட்கப்படும் பிரார்த்தனை புறக்கணிக்கப்படுவதில்லை’ என்று கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ)
இரு வேளைகளில் வானத்தின் கதவுகள் திறந்து வைக்கப்படுகின்றன. இவ்வேளைகளில் பிரார்த்திப்பவனின் பிரார்த்தனைகள் மிகுதியாக அங்கீகரிக்கப்படும். ஒன்று: பாங்கு சொல்லியதற்கப்பால் உள்ள நேரம். இன்னொன்று: இறைவனின் பாதையில் போராடுவதற்காக அணித் திரண்டிருக்கும் நேரம். (அபூதாவூத்). நபி (ஸல்) அவர்கள் இரவின் கால்வாசி நேரம் சென்று விட்டதின் பின்னர் எழுந்து ‘மக்களே! இந்நேரம் அல்லாஹ்வை நினையுங்கள்! பலமாக பூமி அதிர்ச்சி அடையும் நாள் வந்து விட்டது. அதனைத் தொடர்ந்து இன்னும் பல அதிர்ச்சிகள் வரும். மரணமும் அதனைத் தொடர்ந்து வந்து விடும்’ என்று கூறுவார்கள்**.
*மேலும் இமாம் இப்னு தைமிய்யா பாங்கு சொல்வதற்குப் பதில் சொல்ல வேண்டிய முறை குறித்து அம்ர் பின் ஆஸ் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஹதீஸை இங்கு குறிப்பிடுகிறார். இது முன்னரே இடம் பெற்றுள்ளதாகும். விரிவஞ்சியும் நான் அதை மீண்டும் இங்கு மொழி பெயர்க்கவில்லை.
**இமாம் இப்னு தைமிய்யா முன்னர் வந்துள்ள உபையினுடைய ஹதீஸையும் இங்கு குறிப்பிடுகிறார்கள்.