Featured Posts

தொழுகையில் அமைதியின்மை

‘திருட்டுக் குற்றங்களில் மிகப் பெரும் குற்றம் தொழுகையில் திருடுவதாகும். திருடர்களில் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஒருவன் எப்படித் திருடுவான்? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவன் தொழுகையில் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்ய மாட்டான் எனக் கூறினார்கள்’ அறிவிப்பவர்:அப்துல்லாஹ் அபீகதாதா (ரலி) நூல்: அஹ்மத்

தொழுகையில் அமைதியை விட்டு விடுவது, ருகூவில் – சுஜூதில் முதுகை நேராக வைக்காமலிருப்பது, ருகூவிலிருந்து நிமிர்ந்த பிறகு முதுகை நேராகக் கொண்டு வராதது, இரண்டி ஸஜ்தாவுக்கு மத்தியிலுள்ள அமர்வில் முதுகை நேராக வைக்காமலிருப்பது ஆகியவை பெரும்பாலான தொழுகையாளிகளிடம் வெளிப்படையாகக் காணப்படுகின்றன. தங்கள் தொழுகையில் அமைதியைக் கடைபிடிக்காத இத்தகையவர்கள் இல்லாத பள்ளிகளே கிடையாது எனலாம். அமைதியைக் கடைபிடிப்பது தொழுகையின் முதல் நிலைக் கடமையாகும். இதல்லாமல் தொழுகை நிறைவேறாது. இந்த விஷயம் ஆபத்தானதாகும். ‘ருகூவிலும், சுஜூதிலும் தமது முதுகை நேராக வைக்காதவரை ஒருவரது தொழுகை நிறைவேறாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி), (அபூதாவூத்)

எனவே இது தீய செயலாகும். இதைச் செய்பவர் எச்சரிக்கைக்கும் கண்டனத்திற்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை. அபூஅப்துல்லாஹ் அல்அஷ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குத் தொழுகை நடத்தி விட்டு அவர்களில் ஒரு குழுவினருடன் அமர்ந்திருந்தனர். ஒரு மனிதர் வந்து தொழுதார். ருகூவு செய்யலானார். சுஜூதில் காக்கை கொத்துவது போல அவசர அவசரமாகச் செய்தார். உடனே நபி (ஸல்) அவர்கள், இவரைப் பார்த்தீர்களா? (அவசர அவசரமாகத் தொழுகின்ற) இந்த நிலையில் யார் மரணிக்கின்றாரோ அவர் முஹம்மதுடைய மார்க்கத்தில் மரணிக்க மாட்டார். இவர் காக்கை இரத்தத்தைக் கொத்துவது போல அவசர அவசரமாகத் தொழுகிறார். ருகூவையும் சுஜூதையும் காக்கை கொத்துவது போல அவசர அவசரமாகச் செய்பவருக்கு உதாரணம் பசித்தவனுக்கு ஒத்திருக்கிறது. அவன் ஒன்றிரண்டு பேரித்தம் பழங்களை (அவசர கோலத்தில்) உண்ணுகிறான். அது அவனுக்கு என்ன பலனைத் தரப் போகிறது?’ எனக் கூறினார்கள். (இப்னு குஸைமா)

ருகூவையும் சுஜூதையும் பரிபூரணமாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘நீ (முறையாகத்) தொழவில்லை. இந்நிலையில் நீ மரணித்து விட்டால் முஹம்மத் (ஸல்) அவர்களை எந்த இயற்கை மார்க்கத்தில் அல்லாஹ் படைத்தானோ அந்த இயற்கை மார்க்கத்தில் நீ மரணிக்க மாட்டாய்’ எனக் கூறியதாக ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) கூறினார்கள். (புகாரி)

எனவே தொழுகையில் அமைதியை விட்டு விட்டவர் அதன் சட்ட நிலையை அறிந்து கொண்டால் அந்த தொழுகையின் நேரம் கடந்துவிட வில்லையெனில் அதைத் திருப்பித் தொழுவது அவசியமாகும். காலம் கடந்து விட்ட தொழுகைகளுக்காக (அவற்றை திருப்பித் தொழ முடியாதமைக்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளட்டும். அவற்றைத் திருப்பித் தொழ வேண்டிய அவசியமில்லை. பின்வரும் ஹதீஸ் இதை உணர்த்துகிறது: ‘தொழுகையில் அமைதி நிலையைப் பேணாத ஒருவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘நீர் சென்று திருப்பித் தொழும். திண்ணமாக நீர் தொழவில்லை’ எனக் கூறினார்கள். (சுருக்கம் – முஸ்லிம்)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *