Featured Posts

வியக்கவைக்கும் ஈமான்

இன்று உலகில் எங்கு பார்த்தாலும் ஆச்சர்யமான விஷயங்களை தேடியே மக்கள் தங்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். அவற்றை கண்டு வியப்படைகின்றனர்.

இப்படி சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் ஒரு உண்மை இறைவிசுவாசியிடம் மற்றவர்களை வியக்கவைக்கும், ஆச்சர்யப்படவைக்கும் இரு விஷயங்கள் இருக்கின்றன.

அவை….

1.மகிழ்ச்சியான, சந்தோசமான தருணங்களில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவான் மேலும் அல்லாஹ்வைப் புகழ்வான்.

2.சிரமமான, கஷ்டமான சந்தர்ப்பங்களில் (நிலைகுலைந்து விடாமல்) பொறுமையை மேற்கொள்வான்.

இவ்வாறு மற்றவர்களை ஆச்சர்யப்படவைக்கும் ஒரு இறைவிசுவாசியைக்குறித்து தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : “عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ ؛ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ “.

அல்லாஹுவின் தூதர் நபி(ஸல்) கூறினார்கள் :
“ஒரு முஃமினுடைய காரியம் ஆச்சர்யம் அளிக்கிறது. அவனுடைய அனைத்து காரியங்களும் அவனுக்கு நல்லதாகவே அமைந்து விடுகிறது.
இது முஃமினை தவிர வேறு யாருக்கும் அமைவதில்லை. அவனுக்கு ஒரு நல்லது நடந்தால் அவன்(அல்லாஹுவிற்கு)நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நல்லதாக அமைந்து விடுகிறது. அவனுக்கு ஒரு தீங்கு நடந்தால் அவன் பொறுமையை மேற்கொள்கிறான் , அதுவும் அவனுக்கு நல்லதாய் அமைந்து விடுகிறது.
(நூல்: முஸ்லிம்)

ஆம்…. !!
உலகில் மற்றவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வியக்கவைக்கும் காரியங்களில் முதன்மையானதாகவும், மிக முக்கியமானதாகவும் இருக்கக்கூடியது இவ்விரு காரியங்களாகத் தான் இருக்க முடியும்…

மேலும் மக்களில் பெரும்பாலானவர்கள் நிம்மதி என்கிற ஒன்றை தேடித்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

எதிலும் திருப்தி இல்லை …. யாரையும் திருப்தி படுத்த முடியவுமில்லை.

மனைவியாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும்,பெற்றோர்களாக இருந்தாலும், உறவினர்களாக இருந்தாலும்,உற்ற நண்பர்களாக இருந்தாலும் அவர்களை எல்லா சந்தர்ப்பங்களிலும் திருப்திப்படுத்த முடியாத ஒரு நிலையைக் காண்கிறோம்.

ஆதலால், அவர்கள் நிம்மதி எனும் பூங்காவை தேடி அலைகிறார்கள்…

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் , வியக்கவைக்கும் ஒரு முஃமினின் மேற்கூறிய அவ்விரு காரியங்கள் அவர்களில் பெரும்பாலானோர்களிடம் இல்லாதது தான்…

அவ்விரு காரியங்கள் ஒருவனிடம் வந்து விட்டால் அவனுடைய வாழ்க்கை போன்ற ஒரு வாழ்க்கையை இந்த உலகத்தில் யாராலும் வாழ முடியாது…

மகிழ்ச்சியின் போது அவனுடைய நன்றி செலுத்தும் பண்பு அவனுடைய தற்பெருமையை அழித்து , செருக்கை குறைத்து , பிறரை மதித்து இந்த பூமியில் பிறருக்கு ஓர் முன்னுதாரணமாக வாழும் வழிக்கும், இன்று பெரும்பாலான மக்கள் தேடிக்கொண்டிருக்கும் நிம்மதியின் பக்கமும் அழைத்து செல்கிறது…..

அவனுடைய பொறுமை அவனை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி அவனை ஒரு முழு மனிதனாக உருவாக்குகின்றது….
அதாவது ஒரு சிற்பி கல்லை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கண்களை கவரும் ஒரு அழகான உருவத்தை உருவாக்குவதை போல…

பொறுமை வாழ்க்கையின் வெற்றிக்கான வழிகளை திறந்து விடுகின்றது… பொறுமை இல்லாதவன் அந்த வாயில்களை இழக்கிறான்….கூடவே வாழ்க்கையும் இழக்கிறான் அந்தோ பரிதாபம்….

எனவேதான் , இந்த பூமியில் வியக்கவைக்கும் இரு காரியங்கள் உண்டென்றால் அது ஒரு இறைவிசுவாசியுடைய இவ்விரு செயல்களாகத்தான் இருக்க முடியும்……

இப்படிபட்ட செயல்களை நாமும் நம் வாழ்க்கையில் கொண்டு வந்தால் நம்முடைய அனைத்து காரியங்களும் நமக்கு நல்லதாகவே அமையும்…. அப்படிப்பட்ட வாழ்க்கையை வல்ல அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக….

ஆக்கம் : Abdullah Ibnu Rafeek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *