சாலை விபத்துகளுக்கான காரணங்களும்… இஸ்லாம் கூறும் தீர்வுகளும்… | தொடர்-2
தரமற்ற சாலைகள்
குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன. மக்களின் ஓட்டுக்களிலும் வரிப்பணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே இதற்கு முழு முதற்காரணங்களாகும். அரசாங்கம் சாலைகளுக்கென்று ஒதுக்குகின்ற அற்ப பணங்களை இடையில் இருக்கின்ற அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை போட்டு குடிமக்களின் உயிர்களை பறித்து விடுகின்றனர். ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கும் பொடுபோக்குத்தனமும் குடிமக்களைக் குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளாததுமே விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை கூறும்போது 1.3 சதவீதம் மோசமான சாலைகளே விபத்துகளுக்கு காரணம் என்று கூறுகிறது.
இஸ்லாம் கூறுவது போல ஆட்சியாளர்கள் அமைந்தால் இதுபோன்ற சாலை விபத்துகளை குறைக்க முடியும். அதுபோன்ற ஆட்சியாளர்களை இஸ்லாம் உலகிற்கு வழங்கியிருக்கிறது. குடிமக்களின் பொறுப்புகளை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.
“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்கள்… என நபியவர்கள் கூறினார்கள் (புகாரி 893)
குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்குக் கொடுக்க அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்துபோனால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்யாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஆட்சியாளர்கள் குடிமக்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவமொன்று:
கடைத்தெருவில் வயோதிகர் ஒருவர் பிச்சை எடுப்பதை கண்ட கலீஃபா உமர்(ரலி) அவர்கள் அவரின் கரங்களைப் பிடித்து பிச்சை எடுக்கும் காரணத்தை கேட்க எனக்கு தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. என் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட உழைக்க சக்தியில்லை. என் தேவைகளை நிறைவு செய்யவே இவ்வாறு பிச்சை எடுக்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது என்றார் அம்முதியவர். அதற்கு கலீஃபாவின் பதில் எவ்வாறிருந்தது என்பதை கவனிக்க வேணடும் “முதியவரே நாங்கள் தங்களிடம் நியாயமாக நடக்கவில்லை. தாங்கள் வாலிபராக உழைத்த காலங்களில் தங்களிடமிருந்து பாதுகாப்பு வரியை வசூலித்த நாங்கள் தாங்கள் உழைக்கமுடியாத காலங்களில் கவனிக்காமல் விட்டுவிட்டோமே? எனக் கண்ணீர் மல்கக்கூறி அவர் இறக்கும் காலம் வரை அவருக்கும் அவரைச் சார்ந்து வாழ்வோருக்கும் பொதுநிதியிலிருந்து கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.
விபத்துகளில் சிக்கி உயிர் இழக்கும் இத்தகைய குடிமக்களின் உயிர்களைக் குறித்து அரசியல்வாதிகளுக்கு எள்ளின் முனையளவும் கவலையில்லை.
யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு ஆடு அநியாயமாக இறந்தாலும் அதற்காக இந்த உமர் இறைவனால் விசாரிக்கப்படுவான் என கலீஃபா உமர்(ரலி) கூறினார்கள். அவர்கள் ஆண்டு கொண்டிருந்த மதீனாவிற்கும் இராக்கில் அமைந்த யூப்ரடீஸ் நதிக்கும் பல நூறு மைற்கள் இருந்தாலும் ஒரு ஆட்டின் உயிருக்கு எந்தளவு மதிப்பளித்தார்கள் என்பதற்கு இது ஒரு மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ குடிமக்களின் உயிர்களை அற்பமாக நினைக்கின்றனர். இப்படி வரலாற்றுச் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….
ஆக்கம்: காஜா ஃபிர்தௌஸி
(ஆசிரியர்,அல்ஜாமியத்துல் ஃபிர்தௌஸிய்யா அரபிக் கல்லூரி)