-அன்வர்தீன், பெரம்பலூர்
தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ, SLTJ, YTJ & PJ’s NTF) எனும் பார்த்தீனிய விஷச்செடி பரவாமல் தடுக்கும் விழிப்புணர்வு கட்டுரை.
இந்த கட்டுரை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை கட்டம் கட்ட வேண்டும் என்றோ அல்லது இயக்கமே வேண்டாம் என்ற அடிப்படையிலோ எழுதப்பட்டது அல்ல. மாறாக இயக்க சிந்தனை மறைந்து, இயக்க வெறி தலைதூக்க ஆரம்பித்ததன் விளைவாக, இந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற பார்த்தீனிய விஷச்செடியின் கோரப்பிடியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக எழுதப்பட்ட சுருக்கமான விழிப்புணர்வு கட்டுரை.
தவ்ஹீத் ஜமாஅத் வேரூன்ற ஆரம்பித்த காலங்களில், ஏகத்துவத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதில் வீரியமாக செயல்பட்டார்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அதிகமான தமிழக முஸ்லிம்கள், பகிரங்கமான இணை வைப்பில் மூழ்கி இருந்த சமயத்தில், அவர்களை வென்றெடுப்பதில் ஓரளவு வெற்றியும் கண்டார்கள்.
ஆனால் காலப்போக்கில், இஸ்லாத்தை / ஏகத்துவத்தை வளர்ப்பதற்கு பதிலாக, இயக்கத்தை வளர்க்க முற்பட்டதன் விளைவு, இன்று தவ்ஹீத் ஜமாஅத் பல இன்னல்களில் சிக்கி சிதறுண்டு, சின்னாபின்னமாகி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு பதிலாக, தற்பெருமை, அகம்பாவம், பிறரை அற்பமாக எண்ணிய காரணத்தால் ஷைத்தானிய வலையில் சிக்கி, அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.
பணம், பதவி, மக்கள் கூட்டம் போன்றவை உச்சத்தில் இருக்கும்போது, ஒரு இயக்கம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு சிறந்த முன்னுதாரணம். செல்வங்கள் கோடிகளில் குவிய ஆரம்பித்தபோது, அதை முறையாக பயன்படுத்தாததாலும், ‘தமிழ்நாடு பாலியல் ஜமாஅத்’ என்று சொல்லும் அளவுக்கு, அதனுடைய உயர் மட்ட தலைவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாலும், ‘ஷைத்தான் இவர்களை வெற்றி கொண்டு விட்டான்’ என்பதை கள நிலவரங்களை காண்போர் கண்டுகொள்வர்.
“அவர்களும் சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் சிறந்தவன்” (3:54)
என்ற குர்ஆன் வசனத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர். பித்அத் வாதிகளும், கப்ரு வணங்கிகளும் எதிரிகளாக இருந்த நிலை மாறி, தவ்ஹீத் வாதிகளுக்கு எதிரி மற்றொரு தவ்ஹீத்வாதி என்பதை சமீப கால நிகழ்வுகள் பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றன.
இறையச்சத்தை மக்களுக்கு போதிப்பவர்கள், கூடுதல் இறையச்சத்துடன் இருக்க வேண்டும். ஆனால், தொடரும் பாலியல் / பொருளாதார குற்றச்சாட்டுகள், இறையச்சம் என்பது ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல, இந்த தவ்ஹீத் வாதிகளின் இறையச்சம் கிலோ என்ன விலை? என்று கேட்கக்கூடிய நிலைக்கு தள்ளிவிட்டது.
“இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது” (7:26) என்ற வசனம் இவர்களுக்கு பொருந்தாது போலும்.
“நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.” அல் குர்ஆன் (49:11)
மேற்கண்ட குர்ஆன் வசனம் இன்றைய தவ்ஹீத் வாதிகளுக்கு மிகவும் பொருத்தமானது. பிறரை ஏசுவதும், திட்டுவதும், பட்டப்பெயர் சூட்டுவதும், பிறரின் மானத்தோடு விளையாடுவது பொழுது போக்காகவும் / முழு நேர தஃவா பணியாகவும் இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏழு எட்டு மாதங்களாக, முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் ஒருவர் மற்றவரை குறை சொல்வதும் அதற்கு மற்றவர் பதில் கூறுவதும் இப்படியாக இவர்களுடைய தஃவா பணி வித்தியாசமாக அறங்கேறிக் கொண்டிருக்கிறது.
இவர்களின் சூழ்ச்சிகளுக்கு மக்கள் எப்படி பலியானார்கள்? என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. நாங்கள் மட்டும்தான் அறிவாளிகள், நாங்கள் சொல்வதுதான் மார்க்கம். மற்றவர்கள்???
எங்களுடைய பேச்சைத்தவிர வேறு யாருடைய பேச்சையும் கேட்காதே! யாருடைய கூட்டத்திலும் கலந்து கொள்ளாதே! யாருடைய புத்தகத்தையும் படிக்காதே! நாங்கள் சொல்வது தான் சரி!!! என்று முதன்முதலாக மூலைச்சலவை செய்யப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம், மாற்றுக்கருத்து உடையவர்கள், அவர்கள் மார்க்கத்தில் சரியான நிலைப்பாட்டில் இருந்தாலும், எளிதாக அவர்களை ஓரம்கட்டி விடுவதை பார்க்க முடிகிறது.
“…..பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மக்களைக் கேவலமாகக் கருதுவதுமாகும்“ என்று நபி ஸல் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் (91)
‘பிறருக்கு ஒன்றும் தெரியாது! எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்!” என்பது தான் பெருமையின் உச்சக்கட்டம். நல்ல கத்தரிக்காய் வாங்குவதற்காக நாலு கடை ஏறி இறங்குகிற நாம், நல்லவற்றை கேட்பதற்காக நாலுபேர்கள் பேச்சை கேட்க கூடாதா?. கத்தரிக்காய்க்கு கொடுக்கக்கூடிய மதிப்பில் கொஞ்சம் கூட இவர்கள் மார்க்கத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் தான் இந்த சமகால தவ்ஹீத்வாதிகள், குதிரைக்கு லகான் போட்டது போல ஒரே சிந்தனையில் இருக்கிறார்கள். மாற்று கருத்தை படிப்பதும் இல்லை! அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகவும் இல்லை!
மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து அவற்றை ஆய்வு செய்யாமல், அறிவை தடை செய்கிற சமூகம் அறியாமையில் தான் இருக்கிறது என்பதை சொல்லித் தெரிவதில்லை!
“எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்” என்பது தற்பெருமை இல்லையா? இறைவனின் மேலாடையான பெருமையோடு இவர்கள் போர் புரிகிறார்கள்! இவர்கள் மண்டையில், “தவ்ஹீத் ஜமாஅத் சொன்னால் சரியாக இருக்கும்” என்ற கோயபல்ஸ் தத்துவம் திட்டமிடப்பட்டு ஏற்றப்பட்டிருக்கிறது! நாம் சொல்லக்கூடிய அடுத்த விஷயம் இதை மெய்ப்படுத்தும்.
2. ஹதீஸ் மறுப்பு / திரிப்பு / நிராகரிப்பு
இவர்கள் எடுத்த மற்றொரு ஆயுதம் ஸஹீஹான ஹதீஸை மறுத்தல் / திரித்தல். இது இவர்களை வழிகேட்டின் உச்சத்துக்கே கொண்டு சேர்த்துவிட்டது. மேலும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விட்டார்கள் என்று சொல்லலாம். ஷைத்தான் இந்த அவல நிலைக்கு இவர்களை தள்ளியதற்கு இவர்களின் ஆணவம், ‘எல்லாம் எனக்கு தெரியும்’ எனற அகம்பாவம், மற்றும் தற்பெருமை தவிர வேரொன்றுமில்லை.
இமாம்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஹதீஸ்களை அரும்பாடுபட்டு சேகரித்து, அதை வரக்கூடிய இஸ்லாமிய சமூகம் பின்பற்றுவதற்கு வசதியாக ஸஹீஹ் / லயீஃப் / ஹஸன் / மவ்ழூவ்…. என்று தரம் பிரித்துவிட்டு சென்று விட்டார்கள். (அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக)
ஆனால், ஹதீஸ் சேகரிப்பில், தரம் பிரித்தலில் ஒரு சிறு துறும்பைக்கூட நகர்த்தாத இவர்கள் ‘குர்ஆனுக்கு முரண்படுகிறது’, ‘என்னுடைய யூகத்துக்கு ஒத்து வரவில்லை’, ‘சம காலத்துக்கு பொருந்தும்படியாக இல்லை’, ‘என்னுடைய அறிவு ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று பல ஸஹீஹான ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக மறுக்கிறார்கள். ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது யார்? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? பல கேள்விகளுக்கு பதில் இல்லை!
குர்ஆனும், ஹதீஸும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து இருக்கிறது. குர்ஆனுக்கு முரண்படுவது ஹதீஸாக இருக்க முடியாது! என்ற உண்மை தெரிந்தும் இவர்கள், “எல்லாம் எனக்கு தெரியும்” என்ற அகந்தை காரணமாக ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்! (நவூதுபில்லாஹ்).
இப்படியாக இவர்கள் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட, உலக இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்து இறுக்கிறார்கள். இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட நபி (ஸல்) அவர்களின் எச்சில் சம்பந்தமான ஹதீஸை கொச்சை படுத்தி இருக்கிறார்கள்.
தொடரும் இவர்களுடைய ஹதீஸ் மறுப்பு எப்படி இருக்கிறதென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை, இவர்களின் மனோயிச்சை பிரகாரம் மறுக்கிறார்கள். இந்த செய்தியோடு தொடர்புடைய, உதாரணமாக அஜ்வா பேரீத்தம்பழம், கண்ணேறு, கருஞ்சீரகம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களின் நிலைமை என்னவென்று கேட்டால், யாரோ எழுதிய புத்தகத்தில் வந்தது போல், “அதையும் நாங்கள் மறுக்கிறோம்” என்று சொல்லக்கூடிய நிலைக்கு வழிகேட்டில் தள்ளப்பட்டு விட்டார்கள்.
அஜ்வா பேரீத்தம்பழம் ஹதீஸ் எந்த குர்ஆன் வசனத்துக்கு முரண்படுகிறது? நிச்சயமாக எந்த குர்ஆன் வசனத்துக்கும் முரண்படவில்லை. ஆனால், சூனியம் சம்பந்தமான ஹதீஸை மறுப்பதால், இந்த ஹதீஸையும் மறுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது முதலில், “அண்ணன் சொன்னது சரியாகத்தான் இருக்கும்” என்ற விஷயத்தை நினைவுக்கு கொண்டு வாருங்கள். “இந்த ஜமாஅத் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்” என்று மூலையில் புரோகிராம் செய்யப்பட்டு விட்டபடியால், உலகத்தில் எந்த அறிஞர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாமல், எதிர்வாதம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். இது ஒரு வகையான திட்டமிட்டு வழிகெடுக்கக்கூடிய ஷைத்தானிய தத்துவங்களில் ஒன்று.
இவர்களுடைய கொள்கையோடு ஒத்துப் போகாதவர்களின் பின்னால் நின்று தொழமாட்டார்கள். ஆனால் உண்மை என்னவெனில், ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்பவர்கள் தூதரையே நிராகரிப்பவர்கள். தூதரை நிராகரிப்பவர்கள் யாராக இருக்க முடியும்? ஆகையால் தூதரை நிராகரிப்பவர்களின் பின்னால் நின்று நாம் தொழகூடாது. ஆனால், நாம் இவர்களைப்போல், அறிவின்றி இதுபோல் சொல்லமாட்டோம் / ஃபத்வா கொடுக்க மட்டோம். தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிடுவோம்.
“நான்கு வக்த் ஜமாஅத்” என்ற பெயரும் இவர்களின் ஜமாஅத்திற்கு உண்டு. பல மர்கஸில், ஒரு சில தொழுகையை தவிர மற்ற தொழுகைக்கு பாங்கு சொல்லக்கூட ஆள் இருக்காது. இவர் பின்னால் நின்று தொழகூடாது என்றும், நபி வழிதொழுகை என்றும் பீற்றிக்கொண்டு இருக்கும் இவர்களுக்கு – “இறை நிராகரிப்புக்கும், ஈமானுக்கும் வித்தியாசமே தொழுகையை விடுவதுதான்” என்ற ஹதீஸ் தெரியாது போலும். ஏன் என்று யாராவது கேட்டால், “இந்த ஹதீஸையும் நாங்கள் மறுக்கிறோம்” என்று சொன்னாலும் சொல்வார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
தவ்ஹீத் வாதிகளில் பலர் ஹஜ், உம்ரா செய்யாதது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். முழு இஸ்லாமிய சமுதாயமும் இவர்களுடைய “ஞான சூனியக் கொள்கையோடு” முரண்படுவதாலும், மேலும் இவர்களுடைய அறிவீனம், ஆணவத்தின் காரணமாக, மக்கா மதீனா இமாம்களின் பின்னால் நின்று தொழுவதையே சந்தேகிக்கிறார்கள். இது இவர்களுடைய கர்வத்தின் உச்சகட்டம். இவர்களுடைய வாதப்படி, இத்தனை ஆண்டுகளாக மக்கா மதீனாவில் தொழுதவர்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது, ஹஜ் உம்ரா ஏற்றுக்கொள்ளப்படாது. (நவூதுபில்லாஹ்.)
இறைவன் இவர்களுக்கும் வழி காட்ட வேண்டும்! நம்மையும் ஸஹீஹான ஹதீஸ்களை மறுக்கும் பாவிகளாக ஆக்காமல் இருக்க வேண்டும்.
3. மத்ஹபை ஒழிக்க வந்தவர்கள் புதிய மத்ஹபை உருவாக்கிய சோகம்
திருடனை பிடிக்க வந்தவர்கள், அதே திருட்டுக் கூட்ட ஜோதியில் ஐக்கியமாகி விட்டதுபோல், தவ்ஹீத் வாதிகளின் மற்றொரு வேதனை / சோதனை / சாதனை, மத்ஹபை ஒழிக்கிறேன் என்று கிளம்பிய பேர்வழிகள், அதே மத்ஹப் மாயையில் சிக்கி “தவ்ஹீத் மத்ஹப்” என்றொரு ‘புதிய மத்ஹபை’ உருவாக்கியதுதான். இதை நாம் காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.
தமிழகத்தில் உள்ள நான்கு மத்ஹப்களின் நிலையை நாம் நன்கு அறிவோம். ஒரு மத்ஹபை சேர்ந்தவர்கள் மற்றொரு மத்ஹபை பின்பற்ற மாட்டார்கள். உதாரணமாக ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள், ஷாபி மத்ஹபின் தொழுகை சட்ட திட்டங்களை பின்பற்ற மாட்டார்கள். உண்மையில் மத்ஹப் மாயைகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! தூதருடைய வழிமுறையை தவிர வேறொரு வழிமுறை இல்லை. ஆனால் இதை ஒழிப்பதற்காக களம் கண்டவர்கள், “தவ்ஹீத் ஜமாஅத்” என்றொரு தனி மத்ஹபை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
- சம கால தவ்ஹீத்வாதிகள், அவர்களைத்தவிர வேறு யாருடனும் அதிகமாக கலந்துரையாட மாட்டார்கள்.
- சலாம் சொல்வதில்கூட தவ்ஹீத் வாதிகளுக்கு தனி அந்தஸ்து.
- தவ்ஹீத்வாதிகளின் ஜனாஸாவில் கலந்து கொள்ளும் அளவுக்கு மற்றவர்களின் ஜனாஸாவில் அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களின் ஜனாஸா தொழுகை உடன்பாடு இல்லை என்றாலும், ஜனாஸாவை பார்த்து அவர்களுக்காக துஆ செய்ய என்ன தடை உள்ளது?
- தவ்ஹீத் சொந்தங்கள், கொள்கை சொந்தங்கள் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்கும் இவர்களுக்கு தங்களின் இரத்த சொந்தங்கள் இரண்டாம் நிலைதான்.
- இவர்களுக்கென்று தனிப்பள்ளி, தனி பைலா என்று எல்லாம் தனித்துவம் தான்.
- இவர்களுக்கென்று தனி தர்ஜூமா, தனி புத்தகங்கள்.
- இவர்கள் யாரையும் தங்களின் மேடையில் ஏற்றமாட்டார்கள்!
- இவர்களும் மற்ற மேடைகளில் ஏறமாட்டார்கள்!
- இவர்களுடைய மர்கஸில் வேறு யாருடைய வாசிப்புகளும் இருக்காது.
- “மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்தது போல் என்னை புகழாதீர்கள்” என்று நபி (ஸல்) சொன்னார்கள் என்று சொல்லிக்கொண்டே, ‘அண்ணனின் தனி நபர் துதி பாடல்’. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது.
சுருக்கம் கருதி இத்தோடு விட்டுவிடுவோம். மேலே குறிப்பிட்டவைகள் மூலம், இவர்களுக்கென்று தனி மத்ஹபை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
4. அல்லாஹ்வின் தன்மையை / வல்லமையை தவ்ஹீத் வாதிகள் தனதாக்கிக்கொள்ளுதல்.
“உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அறிந்தவன்”. (16:125)
இறைவன், நேர்வழியில் உள்ளோரையும், தவறான வழியில் உள்ளோரையும், தான் மட்டும்தான் அறிவான் என்று பல குர்ஆன் வசனங்களில் சொல்கின்றான்.
இல்லை இல்லை! இந்த தவ்ஹீத்வாதிகள் ‘நாங்களும் நேர்வழியில் உள்ளோரையும், தவறான வழியில் உள்ளோரையும் இனம் காட்டுவோம்’ என்று சொல்கின்றனர்.
யார் சொர்க்கவாதி, நரகவாதி என்று இறைவன் மறுமையில் முடிவு செய்யக்கூடிய விஷயத்தை, இறைவனுக்கு மட்டுமே உள்ள பண்பை, தவ்ஹீத்வாதிகளும் இந்த உலகத்திலே இவர் சொர்க்கவாதி! இவர் நரகவாதி! என்று முடிவு கட்டி விடுவார்கள்.
சக முஸ்லிம்களை பார்த்து, இவர் முஷ்ரிக், இவர் நயவஞ்சகன், இவர் காஃபிர், இவர் அது! இவர் இது! என்று நா கூசாமல் ஃபத்வா கொடுப்பதை கடை நிலையில் உள்ள தவ்ஹீத் வாதிகளும் கடை பிடித்து வருகின்றனர்.
இதில் கொடுமை என்னவெனில், இறைவனின் பண்பை இவர்கள் கையில் எடுத்துக்கொண்டு, மற்றவர்களைப் பார்த்து, ‘இறைவன் தன்னுடைய பண்பை யாருக்கும் தரமாட்டான்’ என்று அறிவுரை கூறுவார்கள்!
ஏதாவது ஒரு விளக்கத்தை கேட்டால், ‘குர்ஆன், ஹதீஸில் இப்படி இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, அத்தோடு சேர்த்து, “ஜமாஅத்தின் நிலைபாடு” என்ற ஒன்றையும் சேர்த்து சொல்வார்கள். “ஜமாஅத்தின் நிலைபாடு” என்பது குர்ஆன், ஹதீஸூக்கு அடுத்த ஆதாரம் போல் காட்டுவார்கள்!
5. பிறரின் மானத்தோடு விளையாடுதல் / அற்பமாக எண்ணுதல்!
“ஒரு முஸ்லிமான தன் சகோதரரை இழிவாக எண்ணுவதே , ஒரு மனிதனுக்கு தீமையாக அமைய போதுமானதாகும்” என்று நபி ஸல் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி)
குறை கூறிப் புறம் பேசி தன்னுடைய சகோதரனின் இறைச்சியை சர்வ சாதாரணமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது,பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.” ஸஹீஹ் முஸ்லிம்: 5006
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்“ என்று ஒருவர் கூறினால். அப்போது அல்லாஹ், ‘இன்னாரை நான் மன்னிக்க மாட்டேன்’ என்று கூறி என் மீது அதிகாரம் செலுத்துபவன் யார்? இதோ! நான் அவரை மன்னித்து விட்டேன்! மாறாக உன்னுடைய (சத்தியம் செய்தவரின்) நற்செயலை வீணாக்கி விட்டேன்!’ என்று கூறுவான்“ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் (5115)
பொதுவாக முகநூல்களில் முன்பெல்லாம் தவ்ஹீதுவாதிகள், கப்று வணங்கிகளுக்கு எதிராக களம் கண்டார்கள். ஆனால் இன்றைய அவலநிலை என்னவெனில், ஒரு தவ்ஹீதுவாதிக்கு எதிரி மற்றொரு தவ்ஹீதுவாதி. அவர்கள் தங்களைத் தாங்களே குத்திக் கிழித்துக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி விட்டான். இறைவனின் மிகப்பெரும் கிருபையால், போலி ஏகத்துவம் பேசி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருந்தவர்களை, இந்த உலகத்திலே அவர்களுக்கு படிப்பினையை கொடுத்து விட்டான்.
இன்ஷாஅல்லாஹ், போலி தவ்ஹீத் எனற போர்வையில் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. இன்ஷா அல்லாஹ், உண்மையான ஏகத்துவ வாதியாக இருப்போம். இயக்க வெறியர்களாக இருக்க மாட்டோம்.