நபி ஸல் அவர்கள் வபாத்தான தினத்தை பிறந்த தினமாக கொண்டாடும் சகோதரர்கள் ரபீஉல் அவ்வல் பிறை பன்னிரெண்டு மௌலித் மஜ்லிஸ் போன்ற விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதை ஓர் இபாதத்தாக செய்து வருகின்றார்கள். இது பற்றிய தெளிவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினால் நபிகளாரை புகழக்கூடாதா…? நபிகளாரின் புகழை மேலோங்க செய்வதை எப்படி பித்அத், ஷிர்க் என்று சொல்லுவீர்கள் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.
நபி ஸல் அவர்களை புகழுங்கள் என்று அல்லாஹ்வோ அல்லது அவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ சொல்லி உள்ளதாக வஹியிலிருந்து ஒரு செய்தியை இவர்களால் காட்ட முடியுமா…? என கேட்டால் நிச்சயமாக முடியாது.
இந்த கேள்விக்கு இவர்கள் கேட்கும் எதிர் கேள்வி அல்லாஹ் நபி ஸல் அவர்களின் மீது ஸலவாத் சொல்லும்படி கூறி உள்ளானே..? அப்படி இருக்க நீங்கள் எப்படி புகழக்கூடாது என்று கூறுவீர்கள்? என்ற அடிப்படையிலாக இருக்கும்.
இதற்கான எமது பதில்
1) நபிகளாரின் புகழை நாம் மேலோங்க செய்ய வேண்டிய தேவை இல்லை அல்லாஹ் அதை செய்து முடித்து விட்டான்.
وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ
மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்.
(அல்குர்ஆன் : 94:4)
மேலும் நபி (ஸல்) அவர்கள் தனக்குள்ள பெயர்களை கூறும் போது இவ்வாறு கூறினார்கள்.
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.
- நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.
- நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
- நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.
- நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
- நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்
நபிகளார் தன்னை பற்றி கூறும் போது ஏற்கெனவே தான் புகழப்பட்டவர் என்று கூறுகின்றார் முன்னைய வேதங்களில் அவரின் பண்புகள் கூறப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.
அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, ‘தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!’ என்றேன். அவர்கள், ‘இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. ‘நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!’ (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) ‘அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் ‘லாயிலாஹ இல்லல்லாஹு’ என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!’ என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!’ என பதிலளித்தார்கள்.
(ஸஹீஹ் புகாரி 2125 அத்தியாயம் : 34. வியாபாரம்)
அதைத் தொடர்ந்து நான் அஹ்மத் இறைவனை அதிகமாகப் புகழ்பவர்
ஆவேன். என்று தான் கூறுகின்றார்களே தவிர தன்னை அதிகம் புகழுமாறு கூறவில்லை.
2) நபி ஸல் அவர்களை புகழ்வதை பொதுவாக இரண்டு விதத்தில் நோக்க முடியும்
1: நபி ஸல் அவர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளை கூறி மக்களுக்கு உபதேசம் செய்தல் இதன் போது உத்தம தூதரின் பரிசுத்த வாழ்கையை உள்ளதை உள்ளபடி புகழ்ந்து பேசுதல். இது அனுமதிக்கப்பட்ட காரியம். இது நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்ற பகுதியில் உள்ள இபாதத்தாகும்.
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا
உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!
(அல்குர்ஆன் : 33:21)
2: நபி ஸல் அவர்களை புகழ்வதை ஒரு வணக்கமாக எடுத்துக் கொண்டு அதற்காக அல்லாஹ்வின் இடத்துக்கு நபி ஸல் அவர்களை உயர்த்தி அல்லாஹ்வின் பண்புகளை நபி ஸல் அவர்களுக்கு வழங்கும் விதமான வாசகங்களை கொண்ட கவிதைகளை கட்டி மக்களை ஒன்று திரட்டி அந்த கவிதைகளை நபிகளாரை புகழுகிறோம் என்ற பெயரில் பாடலாக படிப்பது ஷிர்க்காகும். இத்தகைய புகழ்ச்சியை நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் அறிவிக்கிறவர் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘கண்பார்வைகள் அவனை எட்ட முடியாது’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 06:103). மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என உங்களிடம் அறிவிக்கிறவரும் பொய் சொல்லிவிட்டார். இறைவனோ ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்’ என்று கூறுகிறான் (திருக்குர்ஆன் 27:65)’ என்றார்கள்
ஸஹீஹ் புகாரி7380 அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு
3) நபி ஸல் அவர்கள் மீது ஸலவாத் கூறுவது என்பது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு இபாதத்தாகும். ஆனால் ஸலவாத் என்பது நாம் அவர்களுக்காக செய்யும் பிரார்த்தனையே ஒழிய புகழாரம் கிடையாது என்பதை அதன் பொருளை படிக்கும் அல் குர்ஆன் மத்ரஸா மாணவனும் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே உங்கள் மீது ‘ஸலாம்” உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ‘ஸலவாத்” சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் ‘
اللّهمّ صلّ على محمّد وعلى آل محمّد كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد ، اللّهمّ وبارك على محمّد وعلى آل محمّد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنّك حميد مجيد
எனக் கூறும்படி கூறினார்கள் புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் – கஃப் இப்னு உஜ்ரா (ரலி).
பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.
இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தியை(பரக்கத்தை) அருள்வாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்
குரியவனுமாவாய்.
நபி ஸல் அவர்களை புகழ்வதை இஸ்லாம் ஒரு அமலாக இபாதத்தாக சொல்ல வில்லை மாறாக நபி ஸல் அவர்களை பின்பற்றுவதையே இஸ்லாம் வணக்கமாக கூறி உள்ளது அதுவே நபிகளாரை நேசிப்பதற்கான அடையாளமும் கூட
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.”
(அல்குர்ஆன் : 3:31)
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.”
(அல்குர்ஆன் : 9:24)
புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே அவனையே நாம் புகழ வேண்டும். அவன் தன்னை புகழ்வதை விரும்புகிறான். அதை அடியார்கள் மீது கடமையாக்கி உள்ளான்
புகழத் தகுதியானவனும் புகழ்ச்சியை அதிகம் விரும்புகின்றவனும் அல்லாஹ் ஒருவனே
அல்லாஹ்வை விட புகழ்ச்சியை விறும்பக்கூடியவன் யாருமில்லை என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் .
(புஹாரீ 4736)
வருடத்தில் ஒரு முறை நினைவு கூற நபி ஸல் அவர்கள் ஒன்றும் கட்சித் தலைவர் கிடையாது அவர் அல்லாஹ்வின் உத்தமத் தூதர் அவரின் வாழ்கை வழிமுறைகளை அனுவனுவாக வாழ்கையில் கடைபிடிப்பது ஒவ்வொறுவர் மீதுமான நாளாந்த கடமையாகும்.
இவற்றை புரிந்து கொண்டு கிறிஸ்தவர்களுக்கு ஒப்பாக நடக்கும் சகோதரர்கள் நேர்வழியின்பால் மீள முயற்சிக்க வேண்டும்.
✍நட்புடன்
இன்திகாப் உமரி
2018-11-10