வெள்ளிக்கிழமை அதான்
இன்று அதிகமான பள்ளிகளில் ஜும்ஆ தினத்தில் ஜும்ஆவுக்காக இரண்டு அதான்கள் கூறப்படுகின்றன. ழுஹர் அதானுடைய நேரத்தில் ஒரு அதானும் இமாம் மிம்பருக்கு ஏறியபின்னர் இரண்டாம் அதானும் கூறப்படுகின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) அவர்கள் காலத்திலும் இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் செயற்படுவதுதான் மிகச் சரியானதாகும்.
“ஸாயிப் இப்னு யஸீத்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(வ), உமர்(வ) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இது நிலைபெற்றுவிட்டது.”
(புகாரி: 916, அபூதாவூத்: 1087, நஸாஈ:1392)
இந்தச் செய்தி ஜும்ஆவுக்கு ஒரு அதான் கூறுவதுதான் சுன்னா என்பதையும் மக்கள் தொகை அதிகரித்த போது மக்களுக்கு நினைவூட்டுவதற்காக சந்தையிலே இமாம் மிம்பருக்கு ஏறுவதற்கு முன்னர் ஓர் அதான் கூறும் வழக்கத்தை உஸ்மான்(வ) அவர்கள் அறிமுகப் படுத்தினார்கள். ஆனால், இன்று யாரும் உஸ்மான்(வ) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதில்லை. இரண்டு அதான்களும் பள்ளியில்தான் கூறப்படுகின்றது.
இதே வேளை, உஸ்மான்(வ) அவர்கள் ஒரு பித்அத்தை செய்யவில்லை. அவர்கள் இரு இஜ்திஹாத் செய்தார்கள். நோன்பு காலத்தில் ஸஹருடைய அதான் கூறப்படும். அது உறங்குபவர்களை எழுப்புவதற் காகவும் இபாதத்தில் ஈடுபட்டிருப்;பவர்களை ஸஹருக்கு தயாராகுவதற்காகவும் கூறப்படுகின்றது.
இதன் மூலம் தொழுகைக்காக என்றில்லாமல் நேரத்தை உணர்த்துவதற்காகவும் அதான் கூறலாம் என அவர் யூகித்து கடை வீதிகளில் மக்கள் நேரம் தெரியாமல் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களை பள்ளிக்குச் செல்வதை நினைவூட்டு வதற்காக அந்த அதானை அறிமுகப்படுத்தினார். இன்று அந்தத் தேவையும் குறைந்துவிட்டது. அந்த நடைமுறையும் இல்லை.
எனவே, ஒரு அதான் கூறும் வழிமுறைதான் சுன்னாவும், சரியானதுமாகும். இது தொடர்பில் உலமாக்களுக்கு மத்தியிலே கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் இது குறித்த அறிஞர்கள் சிலரின் அபிப்பிராயங்களை முன்வைப்பது பொருத்தமானது என நினைக்கின்றேன்.
ஜும்ஆவும் அதானும்
ஜும்ஆத் தொழுகைக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம்தான் பரவலாக இருக்கின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர், உஸ்மான்(வ) அவர்களது ஆட்சியின் ஆரம்பத்திலும் ஜும்ஆவுக்கு இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருகிய போது உஸ்மான்(வ) அவர்கள் ஜும்ஆவின் நேரம் நெருங்கிவிட்டதை நினைவூட்டுவதற்காக சந்தையில் ஜும்ஆ நேரத்திற்கு முன்னர் ஒரு அதான் கூறும் ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஜும்ஆவுக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகின்றது. நபி(ச) அவர்கள் காலத்தில் ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டதால் அதுவே சுன்னா என்பதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். இருப்பினும் இது குறித்து இரு வித தீவிரவாதப் போக்குகள் நிலவி வருகின்ற காரணத்தினாலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் கூறப்படுவதை ஏதோ மார்க்கத்தில் முக்கிய ஒரு இபாதத்தைப் புறக்கணித்தது போன்று நோக்குவதாலும் இது குறித்து சற்று விரிவாக விளக்குவது பொருத்தம் என்று கருதுகின்றேன்.
ஜும்ஆவுடைய அதான் குறித்து கீழ்வரும் நிலைப்பாடுகள் நிலவி வருகின்றன.
1. கட்டாயம் இரண்டு அதான்கள் சொல்லப்பட வேண்டும்.
2. இரண்டு அதான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. யாரும் அதான் கூறினால் அதை வன்மையாகக் கண்டிக்க வேண்டியதில்லை.
3. இமாம் மிம்பருக்கு ஏற முன் அதான் கூறப்பட்டால் அது பித்அத், அதை வன்மையாகக் கண்டித்தே ஆக வேண்டும்.
4. ஒரு இமாம் இரு அதான்கள் கூறப்படும் பள்ளிக்கு குத்பாவுக்குச் சென்றால் கட்டாயம் குத்பா உரையில் இது குறித்து விளக்கியே ஆக வேண்டும்.
இவ்வாறான நிலைப்பாடுகள் சமூகத்தில் நிலவி வருகின்றன. கடந்த கால அறிஞர்களுக்கு மத்தியிலும் இது போன்ற கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததுள்ளதை அவதானிக்கலாம்.
இரண்டு அதான்கள் சுன்னா என்ற கருத்து!
ஜும்ஆவுக்கு இரண்டு அதான்கள் கூறுவது சுன்னா என்றும், முஸ்தஹப் என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். மாலிக் மத்ஹபு அறிஞர்கள் இருஅதான்கள் கூறப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
காழி அபூ மஹம்மத் (ரஹ்) அவர்கள் ஜும்ஆ அதான் பற்றிக் கூறும் போது,
التلقين في الفقة المالكي (1/52)
ولها أذانان عند الزوال وعند جلوس الإمام على المنبر
“சூரியன் உச்சியில் இருந்து சாயும் போதும் இமாம் மிம்பரில் அமர்ந்த பின்னும் அதற்காக இரண்டு அதானும், (ஜும்ஆவுக்கு) உண்டு.”
இர்ஷாதுஸ் ஸாலிக் இலா அஷ்ரபில் மஸாலிக் பீ பிக்ஹில் இமாம் மாலிக் என்ற நூலில் இது பற்றிக் கூறும் போது,
إرشاد السالك إلى أشرف المسالك في فقه الإمام مالك (ص: 27)
وَلَهَا أَذَانَانِ (1) : الأَوَّلُ عَلَى الْمَنَارَةِ، وَالآخَرُ بَيْنَ يَدَيِ الإِمَامِ إِذَا جَلَسَ عَلَى الْمنْبَرِ
“அதற்கு இரு அதான்கள் கூறப்பட வேண்டும். ஒன்று மினாரா மேல். அடுத்தது இமாம் மிம்பரில் அமர்ந்த பின்னர் கூறப்படும்” எனக் கூறுகின்றார். மாலிக் மத்ஹபினர் இந்த அதானை சுன்னாவாகப் பார்க்கின்றனர். இதே கருத்தில்தான் ஹன்பலி மத்ஹபினரும் உள்ளனர்.
நவீன கால அறிஞர்களில் ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்) போன்றவர்களும் இரு அதான்கள் கூறப்படுவதை வரவேற்கின்றனர். ஏனெனில், “எனது சுன்னாவையும் நேர்வழி சென்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என நபி(வ) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அடிப்படையில் இது ஒரு கலீபாவின் வழிமுறை என்பதால் இதைப் பின்பற்றலாம் என்பது அவர்களின் நிலைப்பாடாகும்.
நோன்பு காலத்தில் ஸஹருடைய அதான் கூறுவது சுன்னாவாகும். முதல் அதான் மக்களை விழிப்படையச் செய்வதற்காகவும், ஸஹர் உணவுகளை உண்ண நினைவூட்டுவதற்காகவும் கூறப்படும். இதன் மூலம் நேரத்தை உணர்த்த அதான் கூறலாம் என்ற அடிப்படையில் மக்கள் வியாபாரத்தில் கூடிய கவனம் செலுத்தி ஜும்ஆவின் நேரத்தை தவறவிட்டு விடுவர் என்பதற்காக சந்தையில் ஜும்ஆவுடைய நேரத்திற்கு முன்னர் அதான் கூறி மக்களை ஜும்ஆவுக்கு தயாராக்குவதற்காக முதல் அதானை ஏற்படுத்தி னார்கள். இது பித்அத் என்றால் நபித்தோழர்கள் கண்டித்திருப்பார்கள். அவர்கள் கண்டிக்கவில்லை என்பதால் இதற்கு அனுமதி உள்ளதை அறியலாம் என்பது இவர்களின் நிலைப்பாடாகும்.
இன்று மக்களிடம் நேரத்தை அறிய பல ஏற்பாடுகள் இருந்தாலும் முதல் அதான் கூறப்பட்ட பின்னர்தான் பலரும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வெளியேறுகின்றனர். எனவே, இன்றும் இது பயனுள்ளதாகவே உள்ளது.
ஒரு அதானே சிறந்தது:
ஜும்ஆவுக்கு ஒரு அதான் கூறுவதே சிறந்தது என்ற நிலைப்பாட்டிலும் பல அறிஞர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் இந்த நிலைப்பாட்டில் இருந்துள்ளார்கள். இலங்கையில் ஷாபி மத்ஹப் பின்பற்றப்பட்டாலும் இரண்டு அதான்கள் கூறும் இந்த நடைமுறை எப்படி பரவலாக இங்கு வந்தது என்பது ஆச்சரியமானதே! இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் ‘அல் உம்மு” கிரந்தத்தில் ஜும்ஆவுடைய அதான் பற்றி அவர்கள் கூறும் போது,
الأم للشافعي (1/224)
(قال: الشافعي) : وأحب أن يكون الأذان يوم الجمعة حين يدخل الإمام المسجد ويجلس على موضعه الذي يخطب عليه خشب، أو جريد أو منبر، أو شيء مرفوع له، أو الأرض فإذا فعل أخذ المؤذن في الأذان فإذا فرغ قام فخطب لا يزيد عليه
(قال: الشافعي) : وقد كان عطاء ينكر أن يكون عثمان أحدثه ويقول أحدثه معاوية، والله تعالى أعلم.
(قال: الشافعي) : وأيهما كان فالأمر الذي على عهد رسول الله – صلى الله عليه وسلم – أحب إلي
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “வெள்ளிக்கிழமை இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்த பின்னர் அதான் கூறுவதையே நான் விரும்புகின்றேன்.”
அதாஃ (வ) அவர்கள் இந்த அதானை உஸ்மான் ஏற்படுத்தினார் என்பதை மறுப்பவராக இருந்தார். முஆவியா (வ) அவர்கள்தான் இதை எற்படுத்தியதாக அவர் கூறுகின்றார். அல்லாஹு அஃலம்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார், ‘(உஸ்மான், முஆவியா) இருவரில் யார் ஏற்படுத்தியிருந்தாலும் நபி(வ) அவர்கள் காலத்தில் இருந்த (ஒரு அதான் கூறும் வழக்கமே) எனக்கு விருப்பமானதாகும். (நூல் அல் உம்மு -வெள்ளிக்கிழமை வியாபாரம் செய்வது எப்போது ஹராமாகும்) என்ற பாடம் (மொழிபெயர்ப்பின் சுருக்கம்) இலங்கையில் உள்ள ஷாபி மத்ஹபுடைய உலமாக்கள் ஒரு அதான் கூறுவது என்ற ஷாபிஈ இமாமின் நிலைப்பாட்டை எந்த அடிப்படையில் மறுக்கின்றார்கள் என்பது புரியவில்லை.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தைக் கவனித்தால் ஒரு “அதான்தான் எனக்கு விருப்பமானது என்று கூறுகின்றார்கள். இரண்டு அதான் கூறுவதை அவர் பித்அத் என்று வன்மையாகக் கண்டிக்கவும் இல்லை. இரண்டு அதான் கூறப்பட வேண்டும் என்றும் கூறவுமில்லை. சுன்னாவுடன் நின்று கொள்வோம் என்பது அவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
ஜும்ஆவுக்கு இரண்டு அதான் கூறுவது கூடாது:
இந்த நிலைப்பாட்டிலும் பல அறிஞர்கள் இருந்துள்ளனர். ஹனபி மத்ஹபு சிந்தனைப் போக்குடைய அஹ்காமுல் குர்ஆனின் ஆசிரியர் அல் ஜஸ்ஸாஸ் அவர்கள் இது பற்றிக் கூறும் போது,
أحكام القرآن للجصاص ت قمحاوي (5/336)
وقد روي عن جماعة من السلف إنكار الأذان الأول قبل خروج الإمام روى وكيع قال حدثنا هشام بن الغار قال سألت نافعا عن الأذان الأول يوم الجمعة قال قال ابن عمر بدعة وكل بدعة ضلالة وإن رآه الناس حسنا وروى منصور عن الحسن قال النداء يوم الجمعة الذي يكون عند خروج الإمام والذي قبل محدث وروى عبد الرزاق عن ابن جريج عن عطاء قال إنما كان أذان يوم الجمعة فيما مضى واحدا ثم الإقامة وأما الأذان الأول الذي يؤذن به الآن قبل خروج الإمام وجلوسه على المنبر فهو باطل أول من أحدثه الحجاج وأما أصحابنا فإنهم إنما ذكروا أذانا واحدا إذا قعد الإمام على المنبر فإذا نزل أقام على ما كان في عهد رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله عنهما
‘இமாம் வருவதற்கு முன்னர் முதல் அதானை எதிர்க்கும் ஸலபுகள் பலரின் செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாபிஃ(ரஹ்) அவர்களிடம் ஜும்ஆவின் முதல் அதான் பற்றி நான் கேட்ட போது இப்னு உமர் (வ) அவர்கள் அதை பித்அத் என்றும் மனிதர்கள் அழகாகக் கருதிய போதிலும் சரியே! எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே!” என்றும் கூறியதாகக் குறிப்பிட்டார்கள் என வகீஃ ஹிஷாம் இப்னுல் ஹாக் (ரஹ்) தொட்டும் அறிவிக்கின்றார் மன்சூர் அவர்கள் ஹஸன் அவர்களைத் தொட்டும், “இமாம் வெளியேறும் போதுதான் ஜும்ஆவுடைய அதான் கூறப்பட வேண்டும் (அதற்கு) முன்னர் கூறப்படும் அதான் புதியது – பித்அத் ஆகும்!” என்று குறிப்பிடுகின்றார். அதா (ரஹ்) அவர்களைத் தொட்டும் அப்துர் ரஸ்ஸாக் அவர்கள், ‘கடந்த காலத்தில் ஜும்ஆ தினத்தில் ஒரு அதானே இருந்தது. அதன் பின் இகாமத் கூறப்படும். இமாம் மிம்பருக்கு வந்து அமர்வதற்கு முன்னர் தற்போது சொல்லப்படும் முதலாவது அதான் பாதிலானதாகும். இதை முதலில் ஏற்படுத்தியவர் ஹஜ்ஜாஜ் ஆகும். எமது தோழர்கள் நபி(ச) அவர்களதும் அபூபக்கர், உமர்(வ) காலத்திலும் இருந்தது போல் இமாம் மிம்பரில் ஏறிய பின்னர் கூறப்படும் ஒரு அதானை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். (அந்த அதான் இமாம் மிம்பரில் ஏறிய பின்னர் கூறப்படும். அவர் இறங்கிய பின்னர் இகாமத் கூறப்படும்.)
(பார்க்க: அஹ்காமுல் குர்ஆன் லில் ஜஸ்ஸாஹ், சூறதுல் ஜும்ஆ – 5:336)
இதுவரை நாம் குறிப்பிட்ட செய்திகளில் இரண்டாம் அதானை ஆரம்பித்தது யார் என்பதில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
1. உஸ்மான்(வ)
2 முஆவியா(வ)
3. ஹஜ்ஜாஜ்
இதில் உஸ்மான்(வ) அவர்கள் ஆரம்பித்தார்கள் என்பதுதான் புகாரி, முஸ்லிமில் இடம் பெறும் செய்தியாகும்.
உஸ்மான்(வ) அவர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அலி(வ) அவர்கள் இந்த முதல் அதானை விட்டு விட்டார்கள். பின்னர் முஆவியா(வ) அவர்கள் காலத்தில் மீண்டும் முதலாம் அதான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஹஜ்ஜாஜ் அவரது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இதை ஆரம்பித்திருப்பார். இதை யார் ஆரம்பித்தார்கள் என்ற அடிப்டையில்தான் அதைக் கண்டிக்கும் போக்கும் வெளிப்படுவதை நாம் உணரலாம்.
تفسير القرطبي (18/100)
وقد كان الأذان على عهد رسول الله صلى الله عليه وسلم كما في سائر الصلوات، يؤذن واحد إذا جلس النبي صلى الله عليه وسلم على المنبر. وكذلك كان يفعل أبو بكر وعمر وعلي بالكوفة
நபி(ச) அவர்கள் காலத்தில் ஏனைய தொழுகைகளுக்குப் போலவே இமாம் மிம்பரில் அமர்ந்த பின்னர் ஒரு அதான் கூறப்படும். இவ்வாறே அபூபக்கர் மற்றும் உமர் (வ) அவர்களும், கூபாவில் அலி(வ) அவர்களும் செய்து வந்தார்கள்.
(தப்ஸீர் அல்குர்ஆன்)
مصنف عبد الرزاق الصنعاني (3/206) 5344 – عن ابن جريج، عن عمرو بن دينار قال: «رأيت ابن الزبير لا يؤذن له حتى يجلس على المنبر، ولا يؤذن له إلا أذانا واحدا يوم الجمعة»
அம்ர் இப்னு தீனார் அறிவிக்கின்றார்: ‘இப்னு சுபைர்(வ) அவர்கள் குத்பா நிகழ்த்தும் போது அவர்களுக்காக அவர் மிம்பரில்; அமர்ந்த பின்னரே அதான் கூறப்படும். அவருக்காக வெள்ளிக்கிழமையில் ஒரு அதான் மட்டுமே கூறப்படும்.
நூல்: முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்: எண் 5344
இந்த செய்திகள் உஸ்மான் (வ) அவர்கள் ஆரம்பித்த பின்னர் விடப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையே காட்டுகின்றது.
இதுவரையில் நாம் கூறியதில் இருந்து ஒரு அதான் நடைமுறைதான் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர், அலி(வ) ஆகிய மூன்று கலீபாக்கள் காலத்திலும் இருந்துள்ளது. அத்தோடு உஸ்மான் (வ) அவர்களின் ஆரம்ப காலத்திலும் ஒரு அதானே கூறப்பட்டுள்ளது.
இரண்டு அதான்கள் கூறும் பழக்கம் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியின் இறுதிக் காலத்திலும் முஆவியா(வ) அவர்களின் காலத்திலும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை அறியலாம். எனவே, முதல் அதானை விடுபவர்களைக் கண்டிக்க முடியாது. அப்படிக் கண்டிப்பது நபி(ச) மற்றும் அபூபக்கர், உமர், அலி(வ) ஆகியோர்களைக் கண்டிப்பது போல் ஆகிவிடும். முதல் அதான் கூறுபவர்கள் வழி;கேடர்கள் என்று கூறினால் அது உஸ்மான் மற்றும் முஆவியா(வ) அவர்களை வழிகேட்டைச் செய்தவர்களாக சித்தரிப்பதாக ஆகிவிடும். அதில் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் நிலைப்பாட்டில் நிற்பதே பொருத்தமாகப் படுகின்றது.
முதலாம் அதானை விடுபவர்களை ஏதோ மார்க்கத்தில் புதியதைச் செய்வது போல் பார்க்கும் நிலை நீங்க வேண்டும். ஏனெனில், அவர்கள் புதிதாகச் செய்யவில்லை. அவர்கள் உஸ்மான்(வ) அவர்களுக்கு மாறு செய்யவும் இல்லை. உஸ்மான்(வ) அவர்கள் முதல் அதானை சூரியன் உச்சியில் இருந்து சாய முன்னர் கூறினார். ஆனால், இன்று ழுஹருடைய நேரத்தில்தான் முதல் அதான் சொல்லப்படுகின்றது. அடுத்து, அதை அவர்கள் சந்தையில் கூறினார். இன்று அதான் ஒலிபெருக்கியில் கூறப்படுவதால் சந்தை என்பதை நாம் முக்கியத்துவப்படுத்தாவிட்டாலும் உஸ்மான்(வ) அவர்கள் கூறிய நோக்கம் இன்றைய அதானில் முழுமையாக அடைய முடியாத நிலை உள்ளது! ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே நபி(ச) அவர்களின் காலத்தில் கூறப்பட்டது என்பதால் அதுவே சிறந்ததாகும். உஸ்மான்(வ) அவர்களின் இஜ்திஹாதை சரி கண்டு அந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் அதான் கூறுபவர்களை பித்அத்காரர்களாகப் பார்க்க வேண்டியதும் இல்லை என்பதே பொருத்தமானதாகும். அல்லாஹு அஃலம்.