சூரா வாகிஆவை ஓதினால் வறுமை ஒழியுமா ?
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒவ்வொரு இரவும் சூரா வாகிஆவை யார் ஓதி வருகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி) – நூல் : பைஹகீ 2392
இந்த செய்தி பலவீனமானது என்பதாக இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் தமது அல் இலலுல் முதனாஹியா (1/151) விலும், இமாம் இப்னு இராக் அவர்கள் தன்ஸீஹுஷ் ஷரீஆ (1/301) விலும், இமாம் ஷௌகானி அவர்கள் அல் பவாயிதுல் மஜ்மூஆ (972) விலும் பதிவு செய்துள்ளார்கள்.
இமாம்கள் கூறுவது போன்றே இந்த செய்தி பலவீனமானதாகும், ஹதீஸ்கலை அடிப்படை விதிகளின் படி பலவீனமான செய்திகளைக் கொண்டு புதிய ஒரு சட்டத்தையோ சிறப்பையோ நிறுவ முடியாது. இதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்தொற்றுமை காணப்படுகிறது.
பலமான ஒரு செய்தியின் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு விடயத்தின் சிறப்புக்களுக்காக பலவீனமான செய்திகளை பயன்படுத்தும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேற்றுமை உள்ளது, அதனை ஆதரிக்கின்ற அறிஞர்கள் கூட சில நிபந்தனைகளை விதித்துள்ளனர் என்பதனை இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் மிகச் சுருக்கமாக ஏனைய அறிஞர்களின் கருத்துக்களுக்கமைய முன்வைத்துள்ளார்கள். அதனை இமாம் ஸஹாவி அவர்கள் தமது “அல் கவ்லுல் பதீஃ” 195 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
- குறித்த பலவீனமான ஹதீஸ் மிகவும் பலவீனமான நிலையில் (ழஈபுன் ஜித்தன்) ஆக இருத்தல் கூடாது.
பொய் சொல்பவர்களோ, அதிக குளறுபடி உள்ளவர்களோ, பொய்யன் என சந்தேகிக்கப்படுபவர்களோ அந்த இஸ்னாத் – அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறக்கூடாது.
- குறித்த அந்த ஹதீஸ் அமுல்படுத்தப்படுகின்ற அடிப்படையான ஒரு சட்டத்தின் கீழ் அமையப் பெற்றதாக இருக்க வேண்டும்.
- குறித்த அந்த ஹீஸை அமல் செய்கின்ற போது அது அடிப்படையானது என்ற எண்ணத்தை தவிர்த்து அதன் போது பேணுதலை கடைப்பிடித்தல்.
மேலுள்ள சூரா வாகிஆவின் குறித்த சிறப்பை நிறுவுவதற்கு எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸ்களும் கிடையாது என்ற வகையில் இப்படியான ஒரு சிறப்பே வஹியில் சொல்லப்படவில்லை என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.